ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் சச்சின்!
புதுடில்லி: 23 ஆண்டு காலம் விளையாடி பல்வேறு வெற்றிகளை பெற்று தந்த கிரிக்கெட் ஆட்ட நாயகன் சச்சின் டெண்டுல்கர் இன்று ஒரு நாள் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். இளைய தலைமுறைக்கு வழிவிடும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். விரைவில் டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகுவார் என தெரிகிறது.
40 வயதாகும் சச்சின் கடந்த 1989 முதல் இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடத் துவங்கினார். முதல் ஆட்டமே பாகிஸ்தானுக்கு எதிராக இருந்தது. இது வரை மொத்தம் 34 ஆயிரம் ரன்களை குவித்துள்ள சச்சின் , அதிக ஒரு நாள் போட்டி, அதிக ரன், அதிக சதம், இரட்டை சதம் என அடித்து பல சாதனைகளை புரிந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த போட்டிகளில் அதிக ரன் எடுக்காமல் பாம் குலைந்த நிலையில் இருந்தார். இதனால் ரசிகர்கள் இவருக்கு வயதாகி விட்டது ஓய்வு பெற வேண்டியது தானே என்றும் பேசிக்கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு இவருக்கு கவுரவ எம்.பி.,பதவி வழங்கியது.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி மீண்டும் நடக்கவுள்ள நிலையில் சச்சின் இன்று தனது ஓய்வை அறிவித்தார். இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்திற்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஓய்வை அறிவித்த சச்சின், இந்திய அணியின் எதிர்காலத்திற்கு தனது வாழ்த்துக்களையும் இன்று தெரிவித்துள்ளார். எனது கனவான உலக கோப்பையை வென்றதே எனக்கு பெரும் மகிழ்வை தந்தது என்றும் கூறியுள்ளார்.
சச்சின் சாதனைகள் :
463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 18,426 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடித்துள்ளார். இவர் விளையாடிய 463 போட்டிகளில் 234 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஒரு நாள் போட்டிகளில் முதன்முதலாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். தவிர பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 140 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். மேலும் 73 ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றியுள்ளார். இதில் 23 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 43 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. நன்றி: தினமலர்
Comments
Post a Comment