ஆருத்ரா தரிசனம்!
மார்கழி மாதம் புனிதமானது. மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணன். மார்கழிச் சிறப்பை உணர்த்தவே ஆண்டாள் திருப்பாவை பாடியருளினாள். அதுவும் மார்கழி பெண்களுக்கே உரிய விஷேமான மாதம் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் நீராடப் போகுவீர் செல்வச் சிறுமியர்காள்! என்று சிறுமிகளைத்தான் ஏவினாள் ஆண்டாள். காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து-வாச நறுங்குழல் ஆய்ச்சியர் தம் மத்தினால்-ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ என்று மார்கழி விடியற்பொழுதே அறிவித்து சக பெண்களை நீராடச் செல்ல எழுப்புகிறாள் ஆண்டாள்.
மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா என்பர் நடராஜப் பெருமானுக்கு இன்னாளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்டு ஆனந்திக்க ஆயிரமாயிரமாய் பக்தர்கள் கூடுவர். கேரளத்திலும் மார்கழித் திருவாதரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு இது முழுமையாக ஒரு பெண்கள் பண்டிகையாகவே உள்ளது. தவக்கோலம் பூண்டு கன்னியாக இருந்த பார்வதி (மன்மதனை) எரித்த சிவபெருமானைத் தன் கணவராக வரிக்கிறாள். உமையின் அழகில் மயங்கிய பெருமான், தாம் எரித்த காமனை உயிர்பெற்று எழச் செய்வதாக அவளுக்கு வரமளிக்கிறார். இந்த வரம் அருளியதை எண்ணி, சிவபெருமான் தனது அழிக்கும் தன்மையை விலக்கி, சிருங்கார உருவம் எடுத்து, நாங்கள் வேண்டும் வரத்தையும் அருளவேண்டும் என்பதற்காகவே பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். பகவானை மகிழ்விக்கச் செய்து உவமையவளைப் போல் கன்னிகளும், சுமங்கலிகளும் அதிகாலையில் குளித்து தூய ஆடைகளை அணிந்து உண்ணா நோன்பிருந்து வழிபடுகிறார்கள். நிலைத்த மாங்கல்யத்துக்காகவும், ஐஸ்வர்யத்துக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். ஆனாலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தினூடே இந்த விரதம் இருப்பதால் அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
அஸ்வினி நட்சத்திரம் முதல் புனர்பூசம் வரையில் திருவாதிரை உற்சவ காலமாகும். அதிகாலையில் எழுந்து குளம், ஆறு போன்ற நீர்நிலையில் குளிப்பது திருவாதிரை விரதத்தின் முக்கிய அம்சம். அசுவினியன்று அருணன் உதிக்குமுன், பரணியன்று வெள்ளி தோன்றுமுன், கார்த்திகையன்று காகம் கரையும்முன், மிருக சீரிஷத்தன்று மக்கள் உணருமுன் குளிக்கவேண்டும் என்பது திருவாதிரை ஸ்நானத்தின் முறை. மிதமான குளிரும் இதமான காற்றும் வீசும் சுகமான விடியற்காலை பொழுதில் இளம் பெண்களின் பாடல் ஒலி அலை அலையென மிதந்து வரும் நீர் நிலையில் அவர்கள் குதித்து கும்மாளமிட்டுக் குளிக்கும் ஓசை, செப்புப் பானையின் வாயை மூடிவிட்டுத் தட்டுவது போல் அக்கம் பக்கத்தில் குடியிருப்போரின் காதுகளில் எதிரொலிக்கும்.
வீட்டுப் பெண்களும் மருமகள்களும் நீரில் தயிர் கடைவது போன்று பல விளையாட்டுகள் விளையாடுவார்கள். படிக்கட்டில் நெருப்பின் அருகே குளிர் காய்ந்து கொண்டிருக்கும் கிழவிமார்கள், தாம் மூட்டியிருக்கும் தீயின் சிறிய ஒளியில் இதைக் கண்டு இன்புறுவார்கள். குளித்துக் கரையேறிய இளம்பெண்கள், நெருப்பின் அருகில் குளிர் காய வரும்போது கிழவிகள் கடுங்குளிர்! தாங்கமுடியவில்லை! எல்லாவற்றையும் தாங்கும் பூமி மாதா போல் பெண்களும் பொறுமை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பார்கள். குளித்து முடித்தாகிவிட்டதா? வெள்ளாவியில் இட்டு வெளுத்த ஆடையை அணிந்துகொண்டு சாந்து, சந்தனம், மஞ்சள் பொட்டு, மை இவற்றை அணிந்து தச புஷ்பம் (பத்துப் பூக்கள்) சூடிய பிறகு கூட்டம் கூட்டமாக அவர்கள் பாடிக்கொண்டு வீடு திரும்புவார்கள்.
சிறு குளத்தில் துடி பரவியது; சிறு குன்றில் வெயில் பரவியது; வயலில் பசு பரவியது-உணர் உணர் என் குட்டிமாயே என்ற பொருள் கொண்ட அவர்களது பாட்டு சோம்பலால் தூங்கிக் கொண்டிருக்கும் தன் தோழியை எழுப்புவதற்காக இருக்கலாம். அல்லது மகா மாயை தேவியைப் பற்றி உணர்த்துவதாக இருக்கலாம். திருவாதிரை நோன்பன்று அரிசி சேர்க்காத எல்லா வகை தின்பண்டங்களும் தயாராகும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமாகக் கிடைக்கும் கிழங்குகளைக் கொண்டு செய்யும் ஒருவித கூட்டு, கூவக்கிழங்கு மாவினால் செய்த களி, இளநீர் இலை முக்கிய இடம்பெறும்.
அக்காலத்திலும் திருவாதிரை நட்சித்திரம் அறுபது நாழிகைக்குள் நூற்றெட்டு வெற்றிலை சாப்பிட வேண்டும் என்பது சுமங்கலிகளுக்கு முக்கியமான ஒரு சடங்காக இருந்தது. விளக்கை சாட்சியாக வைத்துக்கொண்டு அதன் எதிரில் கையில் பிடித்துக்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் சிவனை எண்ணிக்கொண்டு நூற்றெட்டு வெற்றிலை சாப்பிடத் தொடங்குவார்கள். திருவாதிரை நட்சத்திரம் போல் அமைப்பு உள்ள கொடுவேலிப் பூக்கள் மார்கழியில் எங்கும் பூத்திருப்பதை கேரளாவில் காணலாம். இதை பாதிராப் பூ(நடு இரவுப் பூ) என்பார்கள் திருவாதிரை நட்சத்திரம் உச்சியை அடைந்துவிட்டது என்று அறிந்தவுடன் பாதிராப் பூ சூடுவார்கள் ஆருத்ரா நட்சத்திரத்தை நோக்கிப் பூக்களை அர்ப்பணம் செய்து பின்னர் வட்டமாக அமர்ந்து கைதட்டி விளையாடுவார்கள். திருவாதிரையின் பெருமையைப் பறைசாற்றும் பக்திப்பாடல்களை பாடுவார்கள். நிலவும் நிழலும் இன்பமாக இணைந்த முற்றத்தில் பெண்கள் மட்டும் விழித்திருப்பார்கள்.
தில்லை ஸ்ரீ நடராஜருக்குக் களி மிகவும் பிடித்தது ஏன்? இதற்குப் புராணம் சொல்லும் தகவல்.. தில்லையில் சேந்தனார் என்னும் சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். விறகு வெட்டி, விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்யத் தவற மாட்டார். அத்துடன் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார். சிவனடியார்களை உபசரித்த பின்தான் அவர் உண்பது வழக்கம். சேந்தனாரின் பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தில்லை வாசன், திருவுள்ளம் கொண்டார். திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள் இரவிலிருந்து கடுமையாகத் தொடர் மழை பெய்து கொண்டிருந்தது, தொடர் மழையால் எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் தவித்தார் சேந்தனார். காட்டிற்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால் தான் அன்றைய பொழுது ஓடும். வீட்டில் சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை.
இந்த இக்கட்டான நிலையில் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது? அவர்களை எப்படி உபசரிப்பது? என்று அவர் மனைவியும் சேந்தனாரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வீட்டின் வாசல் முன், திருச்சிற்றம்பலம்... சம்போ மகா தேவா... என்ற குரல் கேட்டு வெளியே வந்தவர்கள் மழைத் தூறலில் சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து, அவருக்கு ஆசனம் அளித்து பணிவிடை செய்தார்கள். சிவனடியாரின் பசியைப் போக்க வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு அரிசிமாவில் வெல்லப் பாகு தயாரித்துக் கலந்து களி கிளறினாள். சிவனடியாரும் அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடை பெற்றுச் சென்றார்.
மறுநாள் காலை சேந்தனாரும், அவர் மனைவியும் ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோயிலைத் திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு வியந்தார்கள். சேந்தனாரும் அவர் மனைவியும் இறைவன் முன் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். சேந்தனாரும், தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும், அவருக்குக் களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜப் பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றி மகிழ்ந்தார்கள். அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது என்று புராணம் கூறுகிறது. மார்கழி மாதத் திருவாதிரை அன்று விரதம் மேற்கொண்டு திருவாதிரைக் களியை உண்பவர் நரகம் செல்ல மாட்டார்கள் என்பது நம்பிக்கை.
நன்றி தினமலர் தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! மிக்க நன்றி!
களியும் கூட்டும்போல் சுவையான பகிர்வு
ReplyDelete