முருகர் பார்த்துப்பார்! பாப்பா மலர்!


முருகர் பார்த்துப்பார்! பாப்பா மலர்!

ஓர் ஊரில் ராமு என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு முழுச் சோம்பேறி. முயற்சி என்றால் என்ன விலை என்று கேட்பவன். உட்கார்ந்தே உண்ண நினைப்பவன். எப்படியோ அடித்து பிடித்து பட்டப்படிப்பு வரை முடித்துவிட்டான். வேலைக்கு செல்ல வேண்டுமே! ஆனால் அதற்கு முயற்சி என்பதே செய்யாமல் இருந்தான்.
   வேலைவாய்ப்பகத்தில் பதிந்து விட்டு வேலை தானாக தேடி வரும் என்று காத்துக் கொண்டிருந்தான். இவனோடு படித்த எல்லோரும் எங்கெங்கோ வேலை தேடிக் கொண்டு சென்றுவிட்டனர். ஆனால் இவன் மட்டும் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருந்தான்.
   அவனது நண்பர்கள் சிலர் ராமு! இப்படியே சும்மா இருந்தால் எப்படி? நாலு கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன் போட்டு இண்டர்வியு அட்டென் பண்ணாத்தானே ஏதாவது ஒண்ணுல வேலை கிடைக்கும். வேலை என்ன வீடு தேடியா வரும்? நாமதான் முயற்சி பண்ணணும் என்பர். அதற்கும் அசைந்து கொடுக்க வில்லை ராமு. எல்லாம்  நான் கும்பிடற முருகர் பாத்துப்பார்!
   அப்ப அந்த முருகரே உனக்கு வேலை தேடி தருவாரா?
  கண்டிப்பா! அவர் கருணையிருந்தா கண்டிப்பா எனக்கு வேலை கிடைக்கும்! அவர் பக்தரான எனக்கு கட்டாயம் அவர் வேலை வாங்கி கொடுப்பார் என்றான் ராமு.
    ராமு சோம்பேறியாக இருந்தாலும் முருகபக்தன்! வேளை தவறாது முருகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருபவன். முருகர் மீது அயராத நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதனால்தான் முருகர் எப்படியும் வேலை வாங்கி தருவார் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.
   தன்னை வழிபடுவர்களை தெய்வம் கைவிடுவதில்லை!  சோம்பேறியான ராமுவிற்கும் எப்படியோ வேலை வாய்ப்பகத்திலிருந்து ஒரு இண்டர்வியுவிற்கு அழைப்பு வந்தது.  அதற்கு இன்னும் முழுதாய் ஒரு வாரம் வந்தது.
   இதோ பாருங்கள்  எனக்கு இண்டர்வியு கார்டு வந்திருக்கிறது! என் முருகர் என்னை கைவிடவில்லை! எனக்கு வேலைக்கு அழைப்பு கொடுத்துள்ளார் என்று எல்லாரிடமும் பெருமையாக சொல்லிக் கொண்டான் ராமு.  
   இருக்கட்டும் ராமு! ரொம்ப மகிழ்ச்சி! இத்தனை நாள் கழித்து உனக்கு இண்டர்வியுவிற்கு அழைப்பு வந்துள்ளது. அதற்கு முழு வீச்சில் உன்னை தயார் படுத்திக் கொள். நேர்முகத்தேர்வில் என்னவெல்லாம் கேட்பார்கள் எப்படி பதில் சொல்வது? என்று ஏற்கனவே கலந்து கொண்டவர்களிடம் விசாரித்து தெரிந்து உன்னை தயார்படுத்திக் கொள்! இது உனக்கு தேர்வுதான்! இதில் வெற்றி பெற்றால்தான் உனக்கு வேலை கிடைக்கும் என்றான் அவனது நண்பன்.
   எல்லாம் முருகர் பார்த்துப்பார்! இண்டர்வியு கார்டு அனுப்பிச்ச அவர் வேலையும் வாங்கி தருவார்! என்றான் ராமு.
    உன்னை திருத்தவே முடியாது ராமு! கொஞ்சமாவது முயற்சி செய்ய வேண்டும்! எதற்கெடுத்தாலும் கடவுளையே நம்பிக் கொண்டிருக்க கூடாது. நமது முயற்சியும் இருக்க வேண்டும் என்றான் அவனது நண்பன்.
  ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை ராமு. அவன் பாட்டுக்கு சுற்றி திரிந்துவிட்டு இண்டர்வியு அன்று அந்த அலுவலகத்திற்கு சென்றான். அவர்கள் கேட்ட கேள்வி எதற்கும் பதில் ஒழுங்காக தெரிய வில்லை! அவனுக்கு. பதில்கள் சரியாக கூறாததால் அவனை செலக்ட் செய்யாமல் விட்டு விட்டனர். மிகவும் சோர்ந்து போய் வீட்டுக்கு வந்தான்.
     முருகர் ஆலயத்திற்கு சென்று, முருகா என்னை ஏமாற்றி விட்டாயே! இண்டர்வியுவிற்கு அழைப்பு கொடுத்தாய்! ஆனால் வேலையில் சேர்க்காமல் விட்டுவிட்டாயே! உன்னையே நம்பி வந்த எனக்கு இப்படி ஏமாற்றம் தந்து விட்டாயே என்று புலம்பினான்.
  அப்போது என்னையே நம்பாமல் உன்னையும் கொஞ்சம் நம்பு! என்ற குரல் கேட்டது.
  யார் முருகரா? பேசுவது?
 பார்த்தாயா? இப்போது என்னையும் நம்ப மாட்டேன் என்கிறாயே? என்றது குரல்!
  சுவாமி மன்னிக்கனும்! உங்களை தினமும் வழிபடும் நான் உங்களை நம்பாமல் இருப்பேனா? நீங்கள் தான் என்னை கைவிட்டு விட்டீர்கள்!
  அப்பனே! நான் உன்னை கைவிட வில்லை! நீ முயற்சியே செய்யாமல் இருந்தபோதும் உனக்கு வேலைக்கு இண்டர்வியு கடிதம் அனுப்பி வைத்தேன்! பசித்தவனுக்கு சோற்றை காட்டிவிடத்தான் முடியும்! ஊட்டிவிடவும்  வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறாயே?
  முருகா! விளங்கவில்லையே! அப்பனே நீ வேலை இல்லாமல் அதற்கு முயற்சி செய்யாமலும் இருந்தாய்! இருப்பினும் என் பக்தனான உன்னை கைவிட மனமின்றி உனக்கு வேலை கிடைப்பதற்கு ஒரு வாய்ப்பு அளித்தேன். அந்த வாய்ப்பினை நீ பிடித்துக் கொண்டிருக்க வேண்டாமா? அதற்கான முயற்சியே செய்யாமல் இருந்தால் எப்படி வேலை கிடைக்கும். தெய்வ யத்தனம் என்பது கொஞ்சம் இருந்தால் மனித முயற்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். நீ முயற்சியே செய்யாமல் முருகரே எல்லாவற்றையும்  பார்த்துப்பார் என்று நினைத்துக் கொண்டது உன் அறியாமை! முயற்சி செய்! எல்லாவற்றுக்கும் கடவுளை பழி போடாதே! உன் முயற்சி திருவினை ஆக்கும்! அதற்கு முருகர் அருள் செய்வார் என்றது குரல்.
  முருகர் அருள் செய்வாரா? அப்போது தாங்கள்!
  நான் தான் என்றபடி ஒரு பெரியவர் வெளியே வந்தார்! அப்பா என் பெயரும் முருகன் தான்! நீ புலம்பியதும்  நான் கேட்டேன்! உன்னை பற்றியும் ஏற்கனவே பலர் கூற அறிவேன்! அதனால் உன்னை திருத்திடவே இவ்வாறு முருகர் பேசுவது போல பேச வேண்டியதாயிற்று என்றார்.
   ஐயா! என் அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள்! இனி கண்டிப்பாக முயற்சி செய்து வேலை வாங்கியே தீருவேன்! மிக்க நன்றி! என்று விடை பெற்றான் ராமு.

நீதி: முயற்சியே திருவினையாக்கும்! எதற்கும் கடவுளையே நம்பியிருக்க கூடாது! சொந்த முயற்சியும் வேண்டும்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! மிக்க நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!