நான் போக மாட்டேன்! பாப்பாமலர்!


நான் போக மாட்டேன்!  பாப்பாமலர்!

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து விட்டன. எல்லா மாணவர்களும் புதிய வகுப்புகளுக்கு சென்ற குஷியில் மகிழ்ச்சியாக பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் முகுந்தன் மட்டும் சோகமாக அமர்ந்திருந்தான். “பள்ளி” என்றாலே பாகற்காயாக கசந்தது அவனுக்கு. இனி நமக்கு விடுதலை! பள்ளிக்கூடம் போக வேண்டாம். அம்மா கூட வேலைக்கு போகலாம். ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான் அவன்.
   ஆனால் அவன் நினைப்பை கெடுப்பது போல அவன் தாய் குரல் கொடுத்தாள். ஏண்டா முகுந்தா! பிள்ளைகளுங்கெல்லாம் ஸ்கூலுக்கு போவுதே நீ கிளம்பலை?
    நான் போக போறது இல்லை?
போவாமா? என்ன பண்ண போறே?
உன் கூட வேலைக்கு வரேன்!
  என்னாது? வேலைக்கு வர்றியா? நான் ஒருத்தி அங்க கிடந்து சீரழியறுது போதாதா? கஷ்டப்பட்டு உன்னை படிக்க சொல்லி ஸ்கூலுக்கு அனுப்பினா பெயில் ஆனதும் இல்லாம வேலைக்கு வரேன்னு சொல்றீயே?
  அதான் பெயில் ஆயிட்டேன் இல்லே! எனக்கு கஷ்டமா இருக்கு? பசங்க எல்லாம் கேலி பேசுவாங்க! என்னால ஸ்கூலுக்கு போக முடியாது!
  நீ ஒழுங்கா படிச்சிருக்கணும்! படிக்காட்டி பெயில் ஆகத்தான் வேணும் அதுக்காக ஸ்கூலுக்கு போவாம நின்னுடுவியா?
   என்னால முடியாதும்மா! நான் போகமாட்டேன்! என்று அடம் பிடித்தான் முகுந்தன்.
  சென்ற வருடம் வரை நன்றாக படித்துக் கொண்டிருந்தான். இந்த வருடம் என்ன ஆயிற்றோ தெரியவில்லை! சில பரிட்சைகளில் ஒழுங்காக மதிப்பெண் எடுக்க வில்லை! இறுதி தேர்வில் எப்படியும் பாஸாகிவிடுவான் என்று நினைத்தாள் முகுந்தனின் தாய் கமலா. ஆனால் அவள் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டு பெயிலாகி நின்றான் முகுந்தன். கமலா ஒரு கட்டிட தொழிலாளி. காலை வேலைக்கு போனால் மாலை ஆகிவிடும். தந்தை இல்லை முகுந்தனுக்கு. நாள் முழுதும் கல்லும் மண்ணும் சுமந்து படிக்க வைத்து கொண்டிருந்தாள் முகுந்தனை.
  அவனும் ஒழுங்காகத்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தான். இந்த ஒன்பதாம் வகுப்பு வருகையில் ஏதோ விளையாட்டு புத்தி. படிப்பில் கவனம் போய் மட்டையை தூக்கி கொண்டு விளையாட ஆரம்பித்து படிப்பை கோட்டை விட்டுவிட்டான். பெயில் ஆகவும் அது அவனுக்குள்  ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விட்டது. பள்ளிக்கு போகமாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டான்.
  டேய் முகுந்தா! பெயில் ஆனா என்னடா? பள்ளிக்கூடத்துக்கு போடா! நாங்கள்ளாம் படிக்காம படற அவஸ்தையை பாத்துமா நீ திருந்தலை? என்று கெஞ்சி பார்த்தாள்.
 போம்மா! உனக்கு ஒண்ணும் தெரியாது! என்கூட படிச்சவங்க எல்லாரும் அடுத்த வகுப்புக்கு போயிட்டாங்க! என்னை விட சின்ன பசங்களோட நான் ஒண்ணா படிக்கணும் வெக்கமா இருக்கு! எல்லோரும் கேலி பண்ணுவாங்க! நான் ஒங்கூட வேலைக்கு வரேன்! என்று அடம்பிடித்தான் முகுந்தன்.
  தோளுக்கு மிஞ்சிவிட்ட பிள்ளையை என்ன செய்வது? சரி விதி வட்ட வழி என்று சரி உன் இஷ்டம் என்று விட்டுவிட்டாள் கமலா.
  மறுநாள் தான் வேலை செய்யும் கட்டிடத்திற்கு அழைத்து சென்று மேஸ்திரியிடம் அறிமுகப்படுத்தி வேலைக்கு சேர்த்து கொள்ள சொன்னாள்.
  ஏம்மா! என் வேலைக்கு உலை வைக்கற? சின்ன பையனை எல்லாம் வேலைக்கு சேர்த்துக்க கூடாதும்மா! யாராவது பாத்து கம்ப்ளைண்ட் பண்ணிட்டா என் பொழப்பு நாறிடும்! என்றார் அந்த மேஸ்திரி.
   இல்லையா! இவன இன்னிக்கு ஒருநாள் சேர்த்துக்குங்க! நாளைக்கு கூட்டிட்டு வரலை! அவனும் தொழில் கஷ்டத்தை புரிஞ்சிகிடட்டும்! நான் சொன்னா கேக்க மாட்டேங்கிறான் என்று கெஞ்சி வேலையில் சேர்த்து விட்டாள்.
  சுட்டெரிக்கும் வெயிலில் தனது அம்மா படும் கஷ்டத்தை பார்க்க முகுந்தனுக்கு சகிக்க வில்லை! ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாத வேலை! அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி. கற்களை கீழிருந்து மேலே எடுத்து சென்று வருவதற்குள் பெரும்பாடு ஆகிவிடும். சற்று கூட ஓய்வெடுக்க விடாது சளைக்காமல் மேஸ்திரி வேலை வாங்குவதை பார்த்து கண்ணீர் விட்டான் முகுந்தன்.
    இதில் மேஸ்திரியின் சுடு சொற்கள் வேறு! கண்கலங்கி நின்ற அவனை மேஸ்திரியின் குரல் தட்டி எழுப்பியது! டேய் தம்பி!  அங்க என்ன வேடிக்கை! இதுக்குத்தான் சின்ன பயலுவலை வேலைக்கு சேர்க்க மாட்டேன்! சாயங்காலம் நோட்டை எண்ணுவே இல்ல! இப்ப வேடிக்கை பார்த்தா எப்படி! ஆவட்டும் வேலை! என்று சத்தம் போட்டார்.
  அப்போதுதான் அவனுக்கு உரைத்தது! இவ்வளவு கஷ்டபட்டு வேலை செய்து நம்மை படிக்க வைக்கும் அம்மாவை ஏமாற்றலாமா? கூடாது. நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். அம்மாவை கையில் வைத்து தாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். பரபரவென வேலை செய்து முடித்தான்.
  பெயில் ஆகிவிட்டால் என்ன? மீண்டும் பாஸ் பண்ணி விட்டால் போகிறது. இன்று கிண்டல் பேசுகிறவர்கள் நாளையும் படிக்காதவன் என்று கேலி பேசத்தான் செய்வார்கள்! உலகமே இப்படித்தான்! நாம்தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று நினைத்தவன். நாளைமுதல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான்.
   மறுநாள் காலை!
   அம்மா நான் ஸ்கூலுக்கு போறேன்! இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோம்மா! உன் கஷ்டம் எல்லாம் மாறிடும் என்று சொன்ன மகனை மகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்டாள் கமலா.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2