காக்காவும் சிட்டுக்குருவியும்! செவிவழிக்கதை! பாப்பாமலர்!


காக்காவும் சிட்டுக்குருவியும்!  செவிவழிக்கதை! பாப்பாமலர்!


ஒரு ஊர்ல ஒரு காக்காவும் சிட்டுக்குருவியும் வாழ்ந்து வந்துச்சுங்க. ஒருநாள் ரெண்டும் சேர்ந்து இரை தேட புறப்பட்டுச்சுங்க. போற வழியிலே ரெண்டுக்கும் ஆளுக்கு நாலணா காசு கிடைச்சுது. அந்தக் காசைக் கொண்டு ‘ஆளுக்கொரு வீடு கட்டலாம்’னு முடிவெடுத்துச்சுங்க.
   காக்கா மண் சுவரு எழுப்பி ஒரு ஓலை வீடு கட்டுச்சு. சிட்டுக்குருவி செங்கல் சுவரு எழுப்பி ஒரு ஓட்டு வீடு கட்டுச்சி.
  மழைக்காலமானதால ஒரே காத்தும் மழையுமா இருந்துச்சு. இடி இடிக்க மழையோ சுழண்டு சுழண்டு கொட்டுச்சு. காக்கா வீடு ஓலை வீடானதாலே மழைக்கு தாங்கலை. இடிஞ்சு விழுந்துடுச்சு! சிட்டுக்குருவி கட்டுன வீடு பத்திரமா இருந்துச்சு. காக்காவால இடிஞ்ச வீட்டுல இருக்க முடியலை நேரா குருவி வீட்டுக்கு பறந்து போச்சு!
   “காத்தும் மழையும் கலந்தடிக்குது அக்கக்கா கொஞ்சம் கதவை திற”ன்னு கதவை தட்டி கேட்டுச்சு.
சிட்டுக்குருவி கதவை திறக்கலை. “இப்பத்தான் சாப்பாடு செய்ய ஒலை வைக்கலாம்னு இருக்கேன். கொஞ்சம் பொறு”ன்னு சொல்லுச்சு.
 கொஞ்ச நேரம் கழிச்சு காக்கா மறுபடியும் கதவை தட்டிச்சு. “காத்தும் மழையும் கலந்தடிக்குது அக்கக்கா கொஞ்சம் கதவைத் திற”ன்னு கேட்டுச்சு.
  மறுபடியும் சிட்டுக்குருவி கதவை திறக்கலை! “இப்பத்தான் ஒலையில அரிசி போட்டிருக்கேன். கொஞ்சம் பொறு”ன்னு சொல்லுச்சு. அதே மாதிரி கொஞ்சம் நேரம் பொறுத்த காக்கா மறுபடியும் கதவை தட்டிச்சு.
   “காத்தும் மழையும் கலந்தடிக்குது அக்கக்கா கொஞ்சம் கதவைத் திற”ன்னு கெஞ்சலா கேட்டுச்சு.
சிட்டுக்குருவி அப்பயும் கதவை திறக்கலை, “இப்பத்தான் சோறு வடிச்சிகிட்டு இருக்கேன். கொஞ்சம் பொறு”ன்னு அப்படி சொல்லிருச்சு.
  மழையோ விட்ட பாடில்லை. ‘சோ’ன்னு கொட்டிகிட்டு இருக்கு சிட்டுக்குருவி எப்ப கதவை திறக்கும்னு காக்கா கதவண்டையே காத்திருந்துச்சு. சிட்டுக்குருவி சோறுவடிச்சி ஆறப்போட்டு தன்னோட குஞ்சுகளுக்கு ஊட்டிவிட்டு அதுவும் சாப்பிட்டு பாத்திரங்க எல்லாத்தையும் கழுவி கவுத்துச்சு. அப்புறமா கதவை திறந்துச்சு.
  “என்ன?” ன்னுச்சு சிட்டுக்குருவி.
மழையில என்னோட வீடு இடிஞ்சி விழுந்துருச்சு! ஒண்டக்கூட இடமில்லை! இன்னிக்கு ராத்திரி பொழுது மட்டும் உன்னோட வீட்டுல தங்க இடம் கொடுத்தா நல்லா இருக்கும். பொழுது விடிஞ்சதும் போயிடறேன்னு காக்கா பரிதாபமா கேட்டுச்சு.
   சிட்டுக்குருவிக்கு காக்காவை பார்க்க பாவமா இருந்துச்சு! இத்தனை நேரம் கதவை திறக்காம இருந்துட்டோமேன்னு வருத்தப்பட்டுகிட்டு “சரி போய் அந்த அட்டத்து மேல படு” ன்னு அன்பா சொல்லுச்சு.
 “அய்யோ அங்க வாணாம்! அங்க அட்டத்து பூச்சி கடிச்சிரும்!”னு காக்கா பயந்து போய் சொல்லுச்சு.
“சரி அப்படின்னா போய் தொம்மையிலே படு”ன்னு குருவி சொல்லுச்சு.
“அய்யய்யோ! அங்கேயும் வேணாம் தொம்மையிலே ஓலைப்பூச்சி கடிச்சிரும்னு” சொல்லுச்சு காக்கா.
 கொஞ்ச நேரம் யோசிச்ச குருவி, “சரி சரி போய் உறி மேல படு”ன்னு சொல்லுச்சு.
“சரி”ன்னு  காக்கா உறியிலே போய் படுத்துகிச்சு.
  சிட்டுக்குருவி தன்னோட குஞ்சுகளுக்காக முறுக்கு பணியாரமெல்லாம் சுட்டு ஒரு பானையிலே போட்டு உறிமேல வச்சிருந்துச்சு. காக்கா இத தெரிஞ்சிகிட்டுதான் உறியில படுக்க ஒத்துகிச்சு. சிட்டுக்குருவி தூங்கட்டும்னு காக்கா காத்திருந்துச்சு.
  சிட்டுக்குருவியும் அதோட குஞ்சுகளும் கொஞ்ச நேரத்துல நல்லா தூங்கிட்டாங்க. காக்கா உறியில இருந்த பானையை மெதுவா திறந்து முதல்ல பணியாரத்தை திண்ணு தீர்த்துச்சு. அடுத்து முறுக்கை எடுத்து கொறிக்க ஆரம்பிச்சுது. “கறக் முறக்”னு சத்தம் கேட்டதும் குருவி முழிச்சிகிச்சு.
  “காக்கா காக்கா!! அங்க என்ன சத்தம்?”ன்னுச்சு.
“ஒண்ணுமில்ல! தூக்கம் வரலை அதான் பாக்கு மெல்லறேன்”னு காக்கா சொல்லிச்சு.
“அப்படியா! கொஞ்சம் மெதுவா மெல்லு. குஞ்சுங்க முழுச்சிக்க போவுது”ன்னு சொல்லிட்டு குருவி மறுபடியும் தூங்கிருச்சு. காக்கா பானையில இருந்த எல்லா முறுக்கையும் தின்னுட்டு பானை நிறைய எச்சத்தை போட்டுருச்சு. காலையில சிட்டுக்குருவி முழிக்கறதுக்குள்ள சொல்லாமலே பறந்து போயிருச்சு.
 பொழுது விடிஞ்சதும் சிட்டு குருவி எழுந்து உறிய பார்த்துச்சு அங்க காக்காவை காணல. “சரி வெளிய போயிருக்கும் கொஞ்ச நேரத்துல வந்துரும்”னு பேசாம இருந்துச்சு.
  கொஞ்ச நேரத்துல சிட்டுகுருவியோட குஞ்சுங்க எழுந்து பசியில கத்துச்சுங்க! குஞ்சுகளுக்கு முறுக்கும் பணியாரமும் தரலாம்னு குருவி பானைக்குள்ள மூக்க விட்டுச்சு. மூக்கு நிறைய எச்சம் ஒட்டிகிச்சு பணியாரமும் முறுக்கும் தான் காக்கா திண்ணுருச்சே!
  சிட்டுக்குருவிக்கு அப்பத்தான் புரிஞ்சது! நன்றி கெட்ட காக்கா! பாவம்னு இருக்க இடம் கொடுத்தா இப்படி பண்ணிட்டு போயிருக்குதே! அத சும்மா விடக்கூடாது. அப்படின்னு திட்டம் போட்டுது குருவி.
  அதுக்கு கோபம் அடங்கலை! மூக்க கழுவிகிட்டு ஒரு தண்ணி பானையை அடுப்பில வைச்சிட்டு வெளியே வந்து பார்த்துச்சு. கண்ணுக்கெட்டன தூரம் வரை காக்காவை காணலை. தேடிகிட்டு பறந்து போச்சு.
  கொஞ்ச தூரம் போனதும் ஒருத்தரு ஏர் உழுதுகிட்டு இருந்ததை பார்த்துச்சு! அவருகிட்டே போய் “ஏர்க்காரரே ஏர்க்காரரே! இந்த பக்கமா ஒரு காக்கா வந்தத பார்த்தீங்களா?”ன்னு குருவி கேட்டுச்சு
  அவர், “நான் பார்க்கலை! அதோ அங்க ரெண்டாவது ஏர்க்காரரு இருக்காரு! அவருகிட்ட போயி கேளு”ன்னு சொன்னாரு.
  சிட்டுக்குருவி ரெண்டாவது ஏர்க்காரர்கிட்ட போயி “ ரெண்டாவது ஏர்க்காரரே ரெண்டாவது ஏர்க்காரரே! இந்த பக்கமா  ஒரு காக்கா போச்சா பார்த்தீங்களா?”ன்னு கேட்டுச்சு.
  அவர் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு தூரத்துல இருந்த ஒரு மரத்தை காட்டி “அதோ அந்த மரத்து மேல உட்கார்ந்துட்டு இருந்தது போய் பாரு!” அப்படின்னு சொன்னாரு.
  போய் பார்த்தா... அதே காக்காதான்! சிட்டுக்குருவி அந்த காக்கா கிட்டே போய், “காக்கா! காக்கா!! நான் உன்னை எங்கேயெல்லாம் தேடுறது? வீட்டுக்கு வந்த விருந்தாளி இப்படியா சொல்லாம கொள்ளாம போறது? விருந்தாளியை சும்மா அனுப்பக் கூடாதுன்னு உனக்காக புதுசா வேட்டி வாங்கியிருக்கேன். வந்து சாப்பிட்டு வேட்டியை கட்டிகிட்டு வருவியா”ன்னு தந்திரமா கேட்டுச்சு.
   குருவியோட தந்திரம் புரியாத காக்காவும் வேட்டிக்காக ஆசைப்பட்டு “சரி வா!”ன்னு புறப்பட்டு வந்துச்சு. அது மட்டும் இல்லாம “நாம செஞ்ச வேலை இன்னும் சிட்டுக்குருவிக்கு தெரியலை”ன்னு காக்காவுக்கு நிம்மதியாவும் இருந்துச்சு. சிட்டுக்குருவியும் தனக்கு எதுவும் தெரியாத மாதிரி நடந்துகிச்சு.
  ரெண்டு பேரும் சிட்டுக்குருவி வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க. ஒரு சோப்புக் கட்டியை எடுத்து காக்கா கிட்ட கொடுத்துச்சு சிட்டுக்குருவி.
  “இந்தா சோப்பு! நல்லா தேய்ச்சு குளி! சாப்பிட்ட அப்புறம் வேட்டியை கட்டிக்கலாம். நான் போய் வெந்நீர் எடுத்து வைக்கறே”ன்னு சொல்லுச்சு.
 காக்காவுக்கு ஒரே சந்தோஷம் நேரா போய் புழக்கடையில இருந்த கல்லுமேல உட்காந்துச்சு. சிட்டுக்குருவி போய் அடுப்ப பார்த்துச்சு. அடுப்புல தண்ணி ஆவி பறக்க கொதிச்சிகிட்டுருந்துச்சு. தண்ணிப்பானையை தூக்கிகிட்டு சிட்டுக்குருவி வெளியிலே வந்துச்சு.
  காக்கா உட்காந்திருந்த கல்லுக்கு பக்கத்துல கொண்டு போய் பானைய வைக்கறா மாதிரி பாவனை பண்ணுச்சு. “ஆகா! இன்னிக்கு நம்ம பாடு நல்ல பாடு”ன்னு காக்கா சந்தோஷமா இருக்கறப்ப குருவி “டமால்” னு தண்ணிப்பானையை காக்கா தலையில கவுத்துடுச்சு!
   சுடுதண்ணி மேல கொட்டினதும் காக்கா துள்ளி குதிச்சது! இப்படித்தானே என் பசங்களும் பசியில தவிச்சதுங்க! நல்லா அனுபவி! அப்படின்னு குருவி சொல்லவும்.  காக்கா உடம்பெல்லாம் கொப்புளம் கொப்புளமா ஆயிருச்சு! செத்தோம் பிழைத்தோம்னு கத்திகிட்டே காக்கா பறந்து போயி  குளத்தில விழுந்துச்சு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments

 1. அருமை அருமை
  நிச்சயம் சிறுவர்களுக்கு இந்தக் கதையை
  பாவத்தோடு சொன்னால் அதிகம் ரசிப்பார்கள்
  காக்கையின் உடல் கருத்தது கூட அதனாலதான்
  என இறுதியில் சேர்த்திருக்கலாமோ ?
  செவி வழி கதையை அருமையாக
  பதிவு வழிக் கொடுத்து அசத்தியமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ada....

  nalla irukku sako....


  kuruvi padangal...
  pramaatham...

  mikka nantri!

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா இருக்கு.....மேலும் தொடருங்கள்.......

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 4. அந்தக் காலத்தில் கேட்ட கதை ... ஆனால் இன்றைய தலைமுறைக்குழந்தைகளுக்கு பாசிட்டிவ்வான மாற்றங்கள் சேர்த்துக் கொடுக்கலாம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2