புத்தியா சொல்றே? பாப்பா மலர்!


புத்தியா சொல்றே?

கணேஷ் ஆர்வமாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் நண்பன் ராஜா அங்கு வந்து அவனருகில் அமர்ந்தான். என்ன கணேஷ்! ரொம்ப மும்முரமா படிச்சிகிட்டு இருக்கே? அரையாண்டு தேர்வுகள் நெருங்கிடுச்சே! அதுக்கு தயார் ஆகிறாயா? என்று வினவினான் ராஜா.
    ஆமாண்டா! அதுக்குத்தான் முழுவீச்சில் படிச்சிகிட்டு இருக்கேன்! இந்த முறை உன்னை விட அதிக மதிப்பெண் வாங்கிடனும்னு உறுதியா இருக்கேன்!
  ரொம்ப சந்தோஷம்டா! படிப்பில இப்படி போட்டி இருந்தாத்தான் நல்லா படிக்கணுங்கிற உத்வேகம் வரும். யாரு முதல் மதிப்பெண் எடுக்கிறதுன்னு ஒரு சவால் இருக்கும். ஆமா! நீ எந்த சப்ஜெக்ட் இப்ப படிச்சிகிட்டு இருக்கே! நானும் ரிவிசன் பண்ண உதவறேனே! என்றான் ராஜா.
   கணேஷ் ராஜாவை மிதப்புடன் பார்த்தான். ராஜா! நீ நினைக்கிறா மாதிரி நான் இப்ப எந்த சப்ஜெக்டையும் படிக்கலை ஆனா அதை விட முக்கியமான ஒண்ணை படிச்சிகிட்டு இருக்கேன்!
   அப்படி என்ன முக்கியமானது அது!
  இதுதான்! என்று கணேஷ் நீட்டிய புத்தகத்தை வாங்கி பார்த்தான் ராஜா! அது பரிட்சையில்  முதல் மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற புத்தகம். அதை பார்த்துவிட்டு ராஜாவிற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரிய வில்லை! ஏன் கணேஷ்! இந்த புத்தகத்தை படிச்சா மதிப்பெண் தானா வந்து விடுமா? நம்மளோட முயற்சியும் உழைப்பும் இருந்தா எளிதா முதல் மதிப்பெண் வாங்கிடலாம். அதை விட்டுட்டு இப்படி இந்த புத்தகத்தை போய் நம்பறீயே?
   டேய்! உனக்கு நான் முதல் மதிப்பெண் வாங்கிடுவேன்னு பொறாமை! அதனாலத்தான் இப்படி சொல்றே?
   கணேஷ்! என்னைப் போய் இப்படி சொல்லிட்டியே! நீ முதல் மதிப்பெண் வாங்கினா! நான் தான் அதிக சந்தோஷம் அடைவேன். ஆனா முதல் மதிப்பெண் பெற நீ தேர்ந்தெடுக்கிற வழி சரியில்லை! இந்த புத்தகத்தை படிக்கிற நேரத்துல நீ நம்ம பாடபுத்தகத்தை ஒழுங்கா படிச்சாலே நல்ல மார்க் வாங்கிடலாம்! இதையேத்தான் இந்த  புத்தகத்திலேயும் சொல்லி இருப்பாங்க!  முதல்ல இதை மூடி வைச்சிட்டு பாடபுத்தகத்தை படி!
 பெரிய புத்தரு இவரு! புத்தி சொல்ல வந்துட்டாரு! உன்கிட்ட சொன்னேன் பாரு! என்னை ஜோட்டாலே அடிச்சிக்கிணும்! நீ உன் வழியை பாரு! நான் என் வழியை பார்க்கிறேன்! என்றான் கோபமாக கணேஷ்.
   இவனை திருத்த முடியாது என்று  அங்கிருந்து மவுனமாக அகன்றான் ராஜா. கணேஷ் மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்தான்.
   அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து  திருத்திய விடைத்தாள்களுடன் ஆசிரியர் உள்ளே நுழைந்தார். கணேஷ் மிகவும் ஆர்வமாக இருந்தான். எப்படியும் ராஜாவை முந்தி விட வேண்டும் என்று இருந்தான் அவன். ஆனால் அந்தோ பரிதாபம்! சென்ற தேர்வை விட இந்த தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஐந்து முதல் பத்து மதிப்பெண்கள் குறைவாக வாங்கி இருந்தான். வழக்கம் போல ராஜாவே வகுப்பில் முதல் மாணவனாக இருந்தான்.
       கண்ணீருடன் கணேஷ் ராஜாவிடம் வந்தான். ராஜா! நீ சொன்னமாதிரியே நடந்து போச்சு! அந்த புத்தகம் சுத்த வேஸ்ட்! அதை படிச்சி மார்க் குறைஞ்சி போனதுதான் மிச்சம் என்றான்.
   கணேஷ்! குறை அந்த புத்தகத்தில இல்லை! உன்கிட்டதான்! அந்த புத்தகத்தில மார்க் எடுக்கிற வழிமுறைகளை சொல்லி இருப்பாங்க! அந்த புத்தகத்தை படிச்ச நீ அந்த வழிமுறைகளை பின்பற்ற தவறிட்டே! இதையேத்தான் நானும் சொன்னேன். அன்றையபாடங்களை அன்றே படித்து தேர்வு சமயத்தில் மீண்டும் ரிவிசன் செய்தாலே போதும் மார்க்கை அள்ளிடலாம். ஆனா நீ அவ்வாறு செய்வதில்லை! தேர்வு சமயத்தில் தான் படிப்பாய்! இந்த முறை அதுவும் சரியாக படிக்க வில்லை! அந்த அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற புத்தகத்தையே படித்துகிட்டு இருந்தாய். நம்முடைய முயற்சிதான் நமக்கு வெற்றி தரும். முயற்சியே இல்லாமல் வெற்றி தேடி வரும் என்று காத்திருந்தால் தோல்விதான் பரிசாக கிடைக்கும் என்றான் ராஜா.
  உண்மைதான் ராஜா! இதை நான் உணராம உன்னையும் தப்பா பேசிட்டேன்! என்னை மன்னிச்சிருடா!
  நண்பர்களுக்குள் எதற்கு கணேஷ் மன்னிப்பு! இனியாவது அன்றாடம் பாடங்களை படித்து இறுதி தேர்வில் என்னை முந்திக் காட்டு! அதுவே நீ எனக்கு செய்யும் மன்னிப்பு என்றான் கணேஷ்.
 நிச்சயமா ராஜா! கண்டிப்பாக இனிமே நான் அன்றாட பாடங்களை அன்றாடம் படித்து  அடுத்த தேர்வில் முதலிடம் வருவேன் என்றான் கணேஷ்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   

Comments

  1. அருமை! இது மாதிரியான அறிவுரைகள் இன்னைக்கெல்லாம் நிறைய பெரியவங்களுக்குத்தான் தேவை இந்த அறிவுரை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2