பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு:

நமக்கு முன்னே இருப்பவர்களில் இரண்டு வகையினர் இருப்பார்கள். "நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். அதனால் நமக்குப் பின் வருபவர்களும் அதே கஷ்டப் பட்டுதான் முன்னேற வேண்டும்' என்று நினைப்பவர்கள் ஒரு வகை.

"நாம்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம், நமக்குப் பின் வருபவர்களாவது கஷ்டப்படாமல் இருக்க நாம் வழிகாட்டுவோமே' என்று நினைப்பவர்கள் இரண்டாம் வகை. இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்தான் கோவிந்த கிருஷ்ணன் (எ) கோபி. சென்னை முகப்பேரைச் சேர்ந்த கோபி பிறவியிலேயே பார்வை இழந்த மாற்றுத் திறனாளி. கோபிக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடக்கூடாது என்பதற்காக, சாதாரண மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே கோபியைப் படிக்க வைத்துள்ளனர் அவரது பெற்றோர்.பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் நான்குமுறை பள்ளி மாறிவிட்ட கோபி, பார்வை இல்லாதவர் என்று அரசிடம் சொல்லி, சான்றிதழ் வாங்க அவரது பெற்றோர் சங்கடப்பட்டதால், இரண்டு முறை பொதுத்தேர்வில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். அதன்பின், சான்றிதழ் வாங்கி உதவியாளர் உதவியுடன் பத்தாம் வகுப்பில் வெற்றியடைந்திருக்கிறார்.

""பள்ளிப்படிப்பை முடிச்சவுடன் அடுத்து என்ன செய்யப் போறோம்னு பெரிய கேள்விக்குறி வந்தது; யோசிக்காமல் கல்லூரியில சேர்ந்தேன். பாடங்களை மற்றவர்களின் உதவியோடு படித்து முடிப்பதற்குள், பல பிரச்னைகள் வந்தது. படித்து சொல்ல மற்றவர்களுக்கு நேரம் இருக்கணும். சந்தேகங்களை கேட்டால் அதை விளக்குவதற்கு பொறுமை வேணும்.எங்களுக்குனு தனி கல்லூரிகள் கிடையாது. பொதுவானவர்கள் புரிந்து கொள்ளும் வேகத்திலேயே ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் புரிந்து கொள்வது, கொஞ்சம் சிரமமா இருந்தது. விடுதியில பாத்ரூம் போறதுகூட கஷ்டம். உதவிக்காக நான் காத்திருந்த சோக அனுபவங்கள்தான், என்னை "நேத்ரோதயா'வை தொடங்க வைத்தது'' என்று நினைவுகளை அசைபோட்டவாறே பேசினார் கோபி.

எம்.ஏ.,முடித்தவுடன் சமூக சேவைக்கான படிப்பில் சேர்ந்து, அதில், "ப்ராஜெக்ட்' ஒன்றிற்காக ரயிலில் பிச்சையெடுக்கும் பார்வையற்றவர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். பூங்கா ரயில் நிலையம் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை ரயிலில் பிச்சையெடுக்கும் 119 நபர்களிடம் பேசியதில், 82 நபர்கள் படித்தவர்களாய் இருந்திருக்கிறார்கள்.சரியான வழிகாட்டுதல் இருந்தால் இப்படி திசை மாறியிருக்கமாட்டார்களே என்ற எண்ணத்தில், மேற்படிப்பை தொடர முடியாத பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனுடைய மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில், "நேத்ரோதயா' என்ற அமைப்பை உருவாக்கினார் கோபி.

அரசின் உதவியால் ஏழு கிரவுண்ட் நிலம் கிடைக்க, "நேத்ரோதயா'விற்கு என சொந்த கட்டடமும் உருவானது. இங்கு தங்கிப் படித்த பலர் ஆசிரியர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். தற்போது விடுதியில் 50 மாணவர்கள் தங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம், படிப்பு உதவி என அனைத்தும் இலவசமாகவே வழங்குகிற கோபிக்கு சில ஆதங்கங்கள் உண்டு.

""சுயதொழில் செய்ய வேண்டும் என எண்ணி, ரயில்களில் வியாபாரம் செய்யும் பார்வையற்ற நண்பர்களை போலீசார் அதிகம் தொந்தரவு செய்கின்றனர். இதனால், மனமுடைந்து போகும் அவர்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அரசு ஊழியர்கள் அல்லாத "போர்ட்டர்களுக்கு' ரயில்வேயில் சம்பாதிக்க கிடைக்கும் சுதந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைப்பதில்லை. அதுபோல மாற்றுத் திறனாளிகளுக்கு இ-டிக்கெட் வசதியும் கிடைப்பதில்லை'' என்கிறார்."அரசு பிரெய்லி வகை நூல்களை வழங்கினால் நலமாயிருக்கும்' என்று ஆசைப்படும் கோபி, 10,12 வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களை இலவச ஒலி புத்தகங்களாக வழங்கி வருகிறார்.

அது மட்டுமன்றி, பார்வையற்றோருக்கான இலவச சட்ட ஆலோசனை மையம், 24 மணிநேர மருத்துவ உதவி, ஸ்போக்கன் இங்கிலிஷ், யோகா, சிறப்பு தமிழ், இசை என் பல வசதிகளை செய்து தருகிறார். பார்வையற்றவர்களுக்கான நூலகமும், பிரவுசிங் சென்டரும் இங்குள்ளது.ஒரு அரசு செய்ய வேண்டிய பணிகளை, தனி ஒருவனாக செய்து சாதனை படைத்துள்ள கோபி, அரசின் சிறந்த சமூக சேவகருக்கான விருதையும் பெற்றுள்ளார். "நேத்ரோதயா'விற்கு உதவுவதற்கும், உதவி பெறுவதற்கும் 044-42655741 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.

உதவி செய்யலாமே:சமீபகாலமாக கண்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஆனால், தானமாக வழங்கப்படும் கண்களை, பார்வையற்ற எல்லோருக்கும் பொருத்தி விட முடியாது. கருவிழி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மட்டும் தான் மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும்.குளுக்கோ, மயோப்பியா, பி.ஹெச் டிஸ்சார்டர் போன்ற கண் குறைபாடுகளை குணப்படுத்த முடியாது. இது போன்ற குறைபாடு உடையவர்களுக்கு, புத்தகங்கள் படித்துக் காட்டுதல், சாலையைக் கடக்க வைத்தல் போன்ற உதவிகளைச் செய்தால், அவர்களின் வாழ்த்து உங்களை வாழவைக்கும்.
நன்றி தினமலர்
தங்கள் வருகைக்குநன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!


Comments

  1. கோபிக்கு வாழ்த்துக்கள்!


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2