எழிலி! பாப்பா மலர்!
எழிலி!
பவளபுரி என்ற ஊரில் பொன்னன் என்ற ஏழை விவசாயி வசித்துவந்தான். அவனது ஒரேமகள் எழிலி. எழிலி பெயருக்கேற்றபடி அழகானபெண். அழகிருக்கும் இடத்தில் அறிவிருக்காது என்பர். ஆனால் அழகும் அறிவும் இணைந்த ஆரணங்கு எழிலி.
பொன்னனுக்கு தெரிந்த ஒரே தொழில் விவசாயம். அவனுக்கு சிறிதளவு நிலம் இருந்தது. அந்த நிலத்தில் பயிரிட்டு வாழ்க்கை நடத்திய அவனுக்கு கஷ்டகாலம் பிடித்துக் கொண்டது. அந்த வருடம் மழைப் பொய்த்தது. கதிரவன் காய்ந்தான். பயிர்களும் காய்ந்தன. ஏழை விவசாயி பொன்னனின் வயல்களும் காய்ந்து போயிற்று.
அவன் சாப்பாட்டிற்கு என்ன செய்வான் பாவம்!அந்த ஊரில் பெரிய மனிதரான மகேந்திரனிடம் சென்று கடனுதவி கேட்டான். பெரிய மனிதர் என்ற போர்வையில் வாழும் மிருகம் மகேந்திரன். அவனுக்கு எழிலியை மணக்க வேண்டும் என்ற விருப்பம் வெறியாக மாறிக்கொண்டு இருந்த நேரமது.
தூண்டிலில் விழுந்த மீனை விட்டுவிடுவானா மகேந்திரன். பொன்னா! நீ நேர்மையானவன் தான் எனக்குத் தெரியும் ஆனால் நான் அடமானம் இல்லாமல் கடன் தருவது இல்லையே?பாவம் உன்னை போன்ற நல்லவர்களுக்குத்தான் கடவுள் சோதனை செய்கிறார். உனக்கு உதவ வேணுமெனில் ஏதாவது அடமானம் வேண்டுமே! எனவே எதையாவது அடமானமாக எழுதிக் கொடு! கடன் தருகிறேன் என்றான்.
பொன்னனுக்கு அடமானம் வைக்கக் கூடிய பொருள் எது என்று தெரியவில்லை! ஐயா! எனக்கு அடமானமாக வைக்கக் கூடிய பொருள் ஏதும் இல்லையே? என்றான். மகேந்திரன் உன்னுடைய வீடு இருக்கிறதே என்றான்.சரி வீட்டை அடமானமாக வைத்துக் கொண்டு கடன் தாருங்கள் என்றார்.
மகேந்திரனும் அவ்வாறே வீட்டை அடமானம் வைத்துக்கொண்டு பணம் தந்தான். அந்த வருடமும் கடவுள் பொன்னணுக்கு கை கொடுக்கவில்லை! மீண்டும் வானம் பொய்க்க வயல் காய்ந்தது. பணம் கேட்டு மகேந்திரன் வந்தான். பொன்னன் வீட்டை தந்துவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
தன்னுடைய வயலிலேயே சிறு குடிசை போட்டு வசிக்கலானான் பொன்னன். மீண்டும் பிழைப்புக்கு என்ன செய்வது மகேந்திரனிடம் சென்றான். இச்சமயம் அடமானமாக எதை வைப்பாய் என்றான் மகேந்திரன்.
வயலை வைத்துக் கொண்டு பணம் தரும்படி கேட்டான் பொன்னன். மகேந்திரனும் கொடுத்து அனுப்பினான். மறுநாள் பொன்னண் வயலில் ஏர் உழும் சமயம் மகேந்திரன் வந்து தடுத்தான். என்னிடம் அடமானமாக வைத்த பொருள் இது. இதில் நீ ஏர் உழக் கூடாது. இது இப்போது என் பொருள். என்று தடுத்தான்.
பொன்னனோ ஐயா இது தான் என் ஜீவனமே! இதையும் தடுத்தால் நான் பிழைக்க என் செய்வேன் என்றான். அதெல்லாம் எனக்குத்தெரியாது அடமானம் வைத்த பொருளில் அனுபவம் செய்ய விடமுடியாது என்றான். ஆனால் உன் கஷ்டம் தீர வேறு வழி கூறுகிறேன். உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்துவிடு உன் கடன் எல்லாம் தீர்ந்துவிடும் உனக்கு மேலும் பணமும் கொடுக்கிறேன் என்றான்.
ஐயா தங்கள் வயது என்ன? என் மகள் வயது என்ன? அவள் சிறியவள் இதை தவிர வேறு வழியே இல்லையா? என்றான் பொன்னன்.
உன் மகளை திருமணம் செய்து கொடுத்தால் கொடு இல்லையேல் இடத்தை காலி பண்ணு என்றான் மகேந்திரன்.
அப்போது அங்கு உடலெல்லாம் புண்ணாக தள்ளாடியபடி வயோதிகன் ஒருவன் வந்தான். இருவருக்கும் நடக்கும் விவாதத்தை கவனித்த அவன்,பொன்னனை அழைத்தான். ஐயா உங்கள் பிரச்சனையை நான் தீர்க்கிறேன்.என்றான். இருவரும் அவனை வினோதமாக பார்த்தனர்.
நீ யார் எங்கள் விஷயத்தில் குறுக்கிட என்றான் மகேந்திரன். நான் யாராக இருந்தால் என்ன? உனக்குத் தேவை பணம் தானே பொன்னன் வாங்கிய பணம் எவ்வளவு வட்டியோடு அதை திருப்பி தருகிறேன் என்றான் வயோதிகன்.
இந்த எதிர்பாரா திருப்பத்தால் பேசமுடியாமல் பணத்தை வாங்கிக் கொண்டு இடத்தை காலி செய்தான் கிழவன். பொன்னன் வயோதிகரின் கால்களில் விழுந்து ஐயா உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் என்றான்.
பின்னர் அந்த வயோதிகனை தன் இல்லத்தினுள் அழைத்துச் சென்றான். எழிலி வயோதிகணின் புண்களுக்கு மருந்திட்டு விசிறியால் விசிறி உபசாரம் செய்து உணவிட்டாள். அப்போது பொன்னன் ஐயா தாங்கள் செய்த உதவியை மறக்கமுடியாது தாங்கள் யார்? என்றான்.
நான் யார் என்பதை இப்போது சொல்ல இயலாது. உன் மகள் செய்த பணிவிடைகள் எனக்கு பிடித்து விட்டது எனக்கு கைமாறாக உன் மகளை திருமணம் செய்து கொடுக்கிறாயா? என்றான் வயோதிகன்.
இது என்ன புது பூதம் புறப்பட்டுவிட்டதே என்று பொன்னன் தயங்க அப்பா கவலைப் படாதீர்கள் இவரை நான் மணந்து கொள்கிறேன். அந்த வஞ்சகனை விட இந்த வயோதிகர் மேல்! மேலும் அழகு நிலையில்லாதது. அன்பே நிலையானது நான் மணப்பூர்வமாக இவரை மணக்க சம்மதிக்கிறேன் என்றாள்.
இருவருக்கும் திருமணம் ஒரு கோயிலில் எளிமையாக முடித்து வழி அனுப்பினான் பொன்னன். இதை கேள்விப் பட்ட மகேந்திரன் என்னை மணக்காமல் அந்த கிழவனையா மணந்தாள் இப்போதே போய் அவனை அடித்துப் போட்டு அவளை தூக்கி வருகிறேன் பார் என்று கிளம்பினான்.
எழிலியும் முதியவரும் சென்ற பாதையில் குறுக்கிட்டான் மகேந்திரன். ஏய் கிழவா அவளை மரியாதையாக என்னிடம் ஒப்படைத்தால் உயிர் பிழைப்பாய் என்று மிரட்டினான். இவள் என் மணைவி முடிந்தால் தொட்டுப் பார் என்று வீரம் பொங்க கூறினான் வயோதிகண். நீ என்ன ஒப்படைப்பது நானே எடுத்து கொள்கிறேன் என்று எழிலியின் கரம் பிடித்து இழுத்தான் மகேந்திரன். மறுகணம் அவன் தாடையை பலமாக தாக்கியது ஒரு கரம். அது வயோதிகணின் கரம் தான். அவன் இப்போது வாலிபனாக மாறியிருந்தான்.
அவனது மந்திர உச்சரிப்பில் சேனைகள் குவிய மகேந்திரன் திக்கு முக்காடிப் போனான். ஆ இதென்ன மாயம் என்று தலை தெறிக்க ஓடிப் போனான். எழிலி வியந்து நிற்க எழிலி திகைக்காதே! நான் வனங்களின் அரசன் வனமாலிகாவின் புதல்வன் முகிலன். ஒரு சாபத்தால் கிழவனானேன். எவள் ஒருவள் என்னை மணப்பூர்வமாக மணக்க சம்மதிக்கிறாளோ அப்போதுதான் என் சாபம் விலகும். உன்னை மணக்க ஆசைப் பட்டேன். நீயும் என்னை மணப்பூர்வமாக விரும்பியதால் இந்த சாபம் நீங்கியது என்றான். உன் அன்பு என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. என் சாபமும் விலகியது என்றான் முகிலன்.
அதன் பின் முகிலனும் எழிலியும் பல்லாண்டு காலம் சுகமாக வாழ்ந்தனர்.
அறவுரை!
நாலடியார்
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்ற செயினும் –உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வாந்தோய் குடிபிறந்தார்க்கு இல்.
சமணமுனிவர்கள்
விளக்கம்} தாம் செய்த உதவியை சிறிதும் எண்ணிப் பாராமல் தமக்கு மிகுதியான தீமைகளை செய்தாலும் தாம் அவருக்கு திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி தவறியும் தீமை செய்ய மாட்டார்கள். யார் அவர்கள்? வானாளாவிய புகழ் கொண்ட குடியிலே பிறந்தவர்கள்.
உங்களுக்குத் தெரியுமா?
பேச்சுக் கலையின் தந்தை டெமஸ்தனிஸ்
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Comments
Post a Comment