பேரறிவாளன், முருகன், சாந்தன் கருணை மனு தகவல்களை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

டெல்லி : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீதான தகவல் பரிவர்த்தனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மயில்சாமி என்ற வக்கீல் இதுதொடர்பாக தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அதில், கருணை மனுக்கள் மீது மத்திய அமைச்சரவை அளித்த பரிந்துரை, மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் இடையிலான தகவல் பரிவர்த்தனைகள், மத்திய அரசுக்கும், தமிழகஅரசுக்கும் இடையிலான தகவல் பரிவர்த்தனைகள், யார் யாரெல்லாம் கருணை மனுவை ஆதரித்து மனு செய்திருந்தனர், பரிந்துரை செய்திருந்தனர் என்பது உள்ளிட்ட விவரங்களை தனக்கு அளிக்க மத்திய அரசு மறுப்பதாக கூறியிருந்தார்.

இதை விசாரித்த தகவல் ஆணையம், மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை வெளியிடுவது பாதுகாப்பு சம்பந்தமானது என்பதால் அதைத் தவிர்த்து பிற தகவல்களை மனுதாரருக்கு அளிக்குமாறு மத்திய உள்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் அளிக்கப்பட்டால் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க இத்தனை ஆண்டு காலம் தாமதமானது ஏன் என்பது குறித்த விவரங்கள் வெளியாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மூன்று ராஜீவ் கொலையாளிகளுக்கும் வாழ்நாள் சிறை தண்டனை-மணிசங்கர அய்யர் யோசனை


கும்பகோணம்: ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனைக்குப் பதிலாக வாழ்நாள் முழுவதும் அதாவது சாகும் வரை சிறைத் தண்டன விதிக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.

இதுகுறித்து கும்பகோணத்தில், நடந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. அதிற்குப் பதிலாக இந்த மூவர் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 32 பேரையும் அவர்கள் இயற்கையாக சிறையிலேயே மரணம் அடையும் வரை தண்டனை அளிக்க வேண்டும்.

பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பையும் இதுபோலவே வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்.

உலகில் உள்ள 139 நாடுகளில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 நாடுகளில்தான் இந்த தண்டனை உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 22 நாடுகளில் 67 பேரை தூக்கிலிட்டுள்ளனர். இந்தியாவில் ஒருவர்கூட தூக்கிலிடப்படவில்லை.

ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்றால், அவர்கள் ஆயுள் தண்டனை பெற்று மீண்டும் வெளியே வந்தால், அவர்களால் வேறு பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கலாம் என்றார் அவர்.

காங்கிரஸ் தரப்பிலிருந்து ராஜீவ் கொலையாளிகளைத் தூக்கில் போட வேண்டாம் என்று முதல் குரல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி! தட்ஸ் தமிழ்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்துபிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2