பொறுமை கடலினும் பெரிது

பொறுமை கடலினும் பெரிது, பொறுமையால் பல காரியங்களை சாதிக்கலாம். அவசரத்தாலும், ஆத்திரத்தாலும் காரியங்கள் கெட்டு விடும்.
ஒருவன், கோவிலுக்கு போனான். கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கண்டான். அருகில் நின்று கவனித்தான். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் ஒரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு ஒன்றுமே புரியாது; இவனுக்கு அந்த எழுத்துக்கள் தெரியும். அதனால், அதை படித்து பார்த்தான்.
"இந்த பெருமாளுக்கு எவன் ஒரே சமயத்தில், நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்கிறானோ, அவனுக்கு ராஜ பதவி கிடைக்கும்...' என்று எழுதிஇருந்தது. "அடடா... ராஜ பதவி என்றால் சும்மாவா? ஒரு மந்திரி பதவிக்கே லட்ச, லட்சமாக செலவழித்து, அலையாய் அலைகின்றனர். அப்படி இருக்கும் போது, நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கிறதே...' என்று எண்ணினான்.
உடனே, ஓடிப் போய் ஒரு குடத்தை எடுத்து, பக்கத்திலிருந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, அபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். ஞாபகமாக ஒண்ணு, ரெண்டு என எண்ணிக் கொண்டே அபிஷேகம் செய்தான். எழுபது, எண்பது, தொண்ணூறு குடம் ஆயிற்று...
"என்னடா இது... 95 குடம் அபிஷேகம் செய்தாயிற்று; ராஜ பதவிக்கான அறிகுறி ஒன்றுமே தெரியவில்லையே! கீரிடத்தை எடுத்துக் கொண்டு யாராவது வருகின்றனரா?' என்று சுற்றும், முற்றும் பார்த்தான்; யாரையும் காணோம். இவனுக்கு பொறுமையும் குறைந்தது.
"சரி... எப்படியாவது நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து விடுவோம்...' என்று எண்ணி, மறுபடியும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தான். 96, 97, 98. ஊஹும்... ராஜ பதவிக்கான அறிகுறியே காணோம்.
பொறுமையை இழக்க ஆரம்பித்தான். 99வது குடமும் அபிஷேகமாகி விட்டது; பலன் தெரியவில்லை. பொறுமையை இழந்தான். நூறாவது குடம் தண்ணீர் கொண்டு வந்து, நூறு என்று சொல்லி குடத்தை பெருமாள் தலையில் போட்டு உடைத்தான். அவ்வளவுதான், இவன் முன் தோன்றினார் பெருமாள்.
"பக்தா... நீ நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தது குறித்து மகிழ்ந்தேன்; ஆனால், பொறுமையை இழந்து, நூறாவது குடத்தை என் மேல் போட்டு உடைத்தது பெரிய அபசாரம். நூறாவது குடத்து தண்ணீரையும் பொறுமையுடன் அபிஷேகம் செய்திருந்தால், உனக்கு ராஜ பதவி கிடைக்க ஏற்பாடு செய்திருப்பேன்.
"நீ, கடைசி நேரத்தில் பொறுமையை இழந்து, அபசாரம் செய்து விட்டதால், பொறுமைக்கு அடையாளமாக, கழுதையாக ஏழு பிறவி எடுத்து, பின்னர் மனித ஜென்மா கிடைக்கும் போது, மீண்டும் எனக்கு நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கும்...' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்து விட்டார்.
பொறுமை எவ்வளவு முக்கியம் என்று, இதிலிருந்து தெரிகிறதா?
***

ஆன்மிக வினா-விடை!
பூஜை செய்யும் போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும் போது, காற்றில் அணைந்து விட்டால், அபசகுனம் ஆகுமா? அப்படி அணையுமானால், என்ன நிவர்த்தி செய்வது?
கற்பூர ஆரத்தியின் போது, அணைந்து போனால், மறுபடியும் ஜோதி ஏற்றி, வழிபட வேண்டும்; இதுவே நிவர்த்தி.
***

வைரம் ராஜகோபால்

நன்றி தினமலர்-வாரமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2