அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?

கேரளாவில் வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாதுரிய நடவடிக்கையால் விளைநிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமிழக அரசு அதிவேக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர்.
ரியல் எஸ்டேட் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை வேரோடு அழித்துக்கொண்டிருக்கிறது. நல்ல காற்றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில்தான் மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை பயன்படுத்திதான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வயல்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் மண் நிரப்பி பிளாட்டுகளாக பிரித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். பிற நிலங்களை விட வயல்களை பிளாட் ஆக்குவதால் 25 முதல் 100 மடங்கு வரை லாபம் கிடைக்கிறது. விவசாயத்தில் பல சிரமங்கள் உள்ளதால் விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விலைக்கு கொடுத்து விடுகின்றனர்.இதன் காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்திருந்த நிலப்பரப்பு, தற்போது மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகி விட்டது.

தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தின் நெல் தேவையை 75 சதவீதம் பூர்த்தி செய்யும் அளவு வயல்கள் இருந்தன. ஆனால் இன்று 25 சதவீத தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் டெல்டா மாவட்டங்களையும், வெளிமாநிலங்களையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைக்கு பெரும்பாலான மாவட்டங்கள் தள்ளப்பட்டு விட்டன. இப்படி வயல்வெளிகள் வீட்டு மனைகளாக மாறுவதற்கு அரசியல்வாதிகளும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.

பரப்பளவில் சிறிய மாநிலமான கேரளாவிலும் வயல்வெளிகளில் வீடுகள் முளைக்க தொடங்கின. இதனால் விழித்தெழுந்த அப்போதய அச்சுதானந்தன் அரசு 2008ம் ஆண்டு "தண்ணீர் தடை பாதுகாப்புச் சட்டம்' என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் மூலம் தண்ணீர் பாய்ந்து செல்லும் எந்த பூமியிலும், எந்த வயலிலும் வீடு வைக்க முடியாது. அதற்கு உள்ளாட்சியின் அனுமதி கிடைக்காது. இந்த சட்டத்தில் சில விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

அதாவது ஒருவருக்கு ஐந்து சென்ட் வயல் மட்டும் இருக்கும். ஆனால் அவருக்கு வீடு இருக்காது. அப்படிப்பட்டவர் அந்த வயலில் வீடு கட்டலாம். அவ்வாறு கட்ட வேண்டுமெனில் அந்த வயலுக்கு உட்பட்ட தாலுகாவில் எங்கும் அவருக்கோ, மனைவிக்கோ, மகன், மகளுக்கோ வீடு இருக்க கூடாது. அவ்வாறு வீடு இல்லாமல் இருப்பதை அந்த பகுதி ஆர்.டி.ஓ. தலைமையிலான கமிட்டி உறுதி செய்ய வேண்டும். இந்த கமிட்டியில் உள்ளாட்சி மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த கமிட்டி கூடி எவருக்கும் வயல் வெளியில் வீடு கட்ட இதுவரை அனுமதி வழங்கியதில்லை.

இந்த கமிட்டி வயல்வெளிகளில் வீடு கட்ட அனுமதி வழங்க கூடாது என்று கூறி விவசாயிகள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதால், வயல்வெளிகளில் வீடு என்பது கேரளாவில் நடக்காத காரியமாக மாறிவிட்டது. வயலை ஒட்டி உள்ள பகுதிகளில் பல நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தென்னை போன்ற மரங்கள் நட்டு வைத்திருப்பர். இதை "கரைபூமி' என்று அழைப்பது உண்டு. இங்கு வீடு கட்ட இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கரைபூமி கிராம ரிக்கார்டுகளில் வயல் என்று குறிப்பிட்டிருந்தால் அங்கும் வீடு கட்ட அனுமதி கிடைக்காது.இந்த சட்டம் காரணமாக கேரளாவில் ரியல் எஸ்டேட் வியாபாரம் வயல் வெளிகளுக்கு செல்லதாதால் அங்கு விவசாயம் காப்பாற்ப்பட்டுள்ளது. வீடுகள் மலைப்பிரதேசங்களிலும், காலி மனைககளில் மட்டுமே கட்டப்படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளே விவசாய நிலங்களை காலி செய்து கொண்டிருக்கிறனர். காந்தியின் கனவு கிராமத்தை பற்றியே இருந்தது. தற்போதைய அரசியல்வாதிகளும் கிராமங்கள் பற்றி பேசுகின்றனர். ஆனால் கிராமங்களின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துக்கொண்டிருக்கின்றனர்.பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் முதல்வர், தமிழ்நாட்டில் வயல்வெளிகளில் வீடு கட்ட தடை விதிக்கவும், வயல் வெளிகளில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்ய தடைவிதிக்கவும் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.
நன்றி தினமலர்


தங்கள் வருகைக்குநன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2