நீயுமா??! சிறுகதை!
நீயுமா??!
காலேஜிற்குள் நுழைந்ததுமே டேய் சந்துரு உனக்கு விஷயம் தெரியாதா? என்றான் குமார்.என்னடா என்ன விஷயம் அப்படி எனக்குத் தெரியாம போயிடுச்சி என்று அவன் தலையில் தட்டினேன். அவன் அதை ரசியாமல் ப்ரியம் வதா... என்று இழுத்தான்.
ப்ரியம்வதா..! ம் அவளுக்கு என்ன? என்று அலட்சியமாக கேட்டேன்.
டேய் தெரியாமத்தான் கேக்கறியா? என்று குமார் கோபமாக கேட்டான். ஆமாடா! என்னவிஷயம்? என்றேன்.
ப்ரியம்வதா செத்து போயிட்டாடா! இதை சொல்வதற்குள் குரல் உடைந்து இரண்டு சொட்டு கண்ணிர்விட்டுவிட்டான் குமார். என்னுள் ஆயிரம் ஒல்ட் மின்சாரம் பாய்ந்தார் போல் ஓர் அதிர்ச்சி. அப்படியே சிலையென நின்றுவிட்டேன்.
குமார்தான் பிடித்து உலுக்கினான். டேய்! டேய்! என்னாச்சுடா! உனக்காகத்தான் காத்திருந்தேன். காலேஜே அவளுக்கு இறுதி மரியாதை செலுத்த போயிருக்கு வாடா போகலாம் என்றான் குமார்.
மௌனமாக தலையை குனிந்து கொண்டேன். குமார் என்னருகில் வந்து நம்ம கையில என்னடா இருக்கு? ஃபீல் பண்ணாதே! வா! கடைசியா ஒரு தடவை அவ முகத்த பார்த்துட்டு வந்துடலாம் என்றான்.
நான் வரலை நீ போடா! என்றேன்.
குமார் என்னை வினோதமாக பார்த்தான் என்னடா சொல்றே! அவ உன்னோட பிரெண்டுடா! நம்ம கிளாஸ்மெட்!
தெரியும் அது நீ சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லே!
அப்ப ஏன் வரமாட்டேங்கிற?
அது உனக்கு அவசியமில்லாதது! நீ போய் வா!
குமார் தலையில் அடித்துக் கொண்டான். டேய் உனக்கு அதிர்ச்சியில என்னமோ ஆயிடுச்சு! வாழ்வும் சாவும் சகஜம்டா! வா ஒரு தரம்...
அவன் முடிக்குமுன் டேய் இடத்தை காலி பண்றியா? என்று முறைத்தேன்.அதன் பின் அவன் அங்கு நிற்கவில்லை!
என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் ஓர் ரெண்டும் கெட்டான் இடத்தில் பள்ளிப் படிப்பை முடித்த நான் நகரத்தின் வாசனையை உணர்ந்தது அந்த கல்லூரியில்தான்.முதல் நாள் கல்லூரியில் நுழையும் போதே சீனியர்கள் ராகிங் செய்ய ஆரம்பித்தார்கள்.
டேய் இங்க வா! சென்றேன் பேர் என்னெ?
சந்திரசேகர்! என்றேன். விஞ்சானி சந்திரசேகரா! இல்ல ஃபார்மர் பி.எம்மா? என்று சிரித்தனர். பின்னர் ஏண்டா உனக்கு அப்பா இல்லையா? சுயம்புவா? என்று மீண்டும் ஒரு வெடிச் சிரிப்பு!
மிரண்டு போன நான் இல்ல அப்பா இருக்காரு அப்ப ஏண்டா இனிஷயலை சொல்லலை இப்ப சேர்த்து சொல்லு பார்ப்போம்! என்று மிரட்ட எம்.சந்திர சேகர் என்றேன்.திடிரென அவர்கள் கவனம் திசை மாறியது.
டேய் அதோ பார்றா பிகரு!
சூப்பர் பிகரு மச்சி ! இப்ப பாரு வேடிக்கையை!
டேய் சேகரா! நீ அவகிட்ட போயி பேரு என்னன்னு தெரிஞ்சிகிட்டு வா!
நா.. நானா! நீ நீயேதான்.! பலி ஆடு போல அந்த பெண்ணை நோக்கி சென்றேன். அருகில் நின்று தயங்கினேன். அவள் என் வருகையை உணர்ந்து என்ன? என்பது போல புருவம் உயர்த்தி கேட்டாள். தட்டு தடுமாறி மி மிஸ் யுவர் குட் நேம் ப்ளீஸ் என்றேன்.
அவள் கலகலவென சிரித்தாள் அவங்க கேக்க சொன்னாங்களா?என்று அவர்களை கைகாட்டியவள் இட்ஸ் ஓக்கே பிரியா! ப்ரியம்வதா மை நேம் என்றாள்.ஒரே ஓட்டமாய் சென்று அவர்களிடம் சொல்ல சரி இப்ப இதை போய் சொல்லு என்றனர்.
நான் முடியாது என்று மறுத்தேன்! மரியாதையா போய் சொல்ல போரியா? இல்ல வேற பணிஷ்மெண்ட் கொடுக்கவா? என்று மிரட்டினர். மீண்டும் அந்த பெண்ணிடம் சென்றேன். அவளோ புன்னகைத்து அலோ என் பேரை கேட்டீங்க உங்க பேரை சொல்லவே இல்லையே என்றாள்.
சற்று முன் பட்ட அனுபவத்தில் எம் சந்திரசேகர் என்றேன். என்ன இது ஸ்கூல் பிள்ளையாட்டம் என்று கலகலவென சிரித்தாள் இப்ப என்ன சொல்லி அனுப்பிச்சாங்க! என்று கேட்டாள் அ.. அது வந்து!
தைரியமாச் சொல்லுங்க! ஐ லவ் யூ பிரியா! என்றேன்.
மீண்டும் ஓர் வெடிச் சிரிப்பு அவளிடமிருந்து எழுந்தது. நான் அதிர்ந்தேன். என்ன பெண் இவள் இந்த வார்த்தையை கேட்டு சீறுவாள் என்று பார்த்தால் சிரிக்கிறாளே! மிஸ் உங்களுக்கு கோபமே வரலையா? என்றேன்.
சந்துரு காதல்ங்கிறது அடி மனசுல இருந்து வரணும். யாரோ சொல்லிக் கொடுத்து வர்ரது இல்லே பேடி பசங்க உன்னை பயன் படுத்தி என்னை சீண்டி பார்க்கிறானுங்க நீ என்னை காதலிச்சிக்கேயேன். அதுல தப்பு என்ன? காதல்னா அன்பு பாசம்னும் அர்த்தம் இருக்கு! நீயும் நானும் இன்னிலேர்ந்து பிரெண்ட்ஸ் ரெண்டு பிரெண்ட்ஸ் அன்பு செலுத்தறதுல தப்பு ஏது இல்லையே? என்றாள்.
அவளுடன் நான் சகஜமாக நடந்துவர அந்த கும்பல் ஓடியே போனது. இப்படித்தான் ப்ரியம்வதா எனக்கு அறிமுகமானாள்.இருவரும் ஒரெ வகுப்பு. அவளது குணத்திற்கு அனைவரும் நண்பர்களாகி போனார்கள். என் நண்பர்களான குமாரும் அரவிந்தும் கூட அப்படித்தான் அவளது நண்பர்களானார்கள்.
முதல் வருட காலேஜ் வாழ்க்கை முடிந்து இரண்டாம் வருடம் துவங்கியது. இதற்குள் எனக்குள் ஏதோ மாற்றங்கள்! நான் ப்ரியாவை நேசிக்க தொடங்கியிருந்தேன். மற்றவர்களுடன் அவள் சிரித்து பழகும்போது எனக்கு எரிச்சலாக இருக்கும். அவள் எனக்கே சொந்தமென என் மனம் நினைத்தது. ஆனால் இது எதுவும் அவளுக்கு தெரியாது அவள் நட்பாகத்தான் பழகினாள். நான் தான் அதிக உரிமை எடுத்துக் கொண்டேன்.
அன்று அரவிந்தின் புத்தகம் ஒன்றை வாங்க அதனுள் ஒர் வாழ்த்து அட்டை! ப்ரியா ஐ லவ் யூ என்று எழுதி அரவிந்த் கையெழுத்திட்டிருந்தான். என் மனம் நொறுங்கியது. அரவிந்திடம் அந்த அட்டையை கொடுத்தேன். டேய் யாருக்கும் சொல்லிடாதடா! அரவிந்த் கெஞ்ச மவுனமாய் தலையசைத்தேன்.
அந்த வாழ்த்து கடிதம் என் மனதை பாரமாய் அழுத்திக்கொண்டிருக்க பிரியாவையும் சந்திப்பதை தவிர்த்தேன். அவளும் சில நாட்கள் கல்லூரிக்கு வரவில்லை. ஒரு வாரம் கழித்து வந்த அவளிடம் என்ன ப்ரியா உடம்பு சரியில்லையா? என்றேன் அதெல்லாம் ஒண்ணுமில்லையே அரவிந்த் என்ன பண்றான்? அவன்கிட்ட ஒரு முக்கியவிஷயம் பேசனும் என்று அரவிந்தை தேடிப் போய்விட்டாள்.
அரவிந்த் அவ்வளவு முக்கியமாகிவிட்டானா? உனக்கு? மரத்தடியில் சோகமாக அமர்ந்திருக்க குமார் வந்தான். என்னடா மாப்ளே ஒரே சோக கீதம் வாசிக்கற? ஒண்ணுமில்லைடா? டேய் அப்ப ஏதோ விஷயமிருக்கு சொல்லு மச்சி தீர்த்து புடுவோம் என்றான்.அவன் தொல்லை பொறுக்காமல் வாழ்த்து விஷயத்தை சொல்ல டேய்! இந்த பொண்ணுங்களே இப்படித்தான்! மனச தேத்திக்க என்று கிளம்பிவிட்டான்.
மறுநாள் காலேஜ் முழுக்க காம்பவுண்ட் டாய்லெட் எங்கும் அரவிந்த் ப்ரியம்வதா காதல் என்று கிறுக்கி இருந்தது.எல்லோரும் அதையே கூடி நின்று பேச குமாரிடம் ஓடினேன். டேய் இப்படி பண்ணிட்டியே! இது பிரியாவுக்குத் தெரிஞ்சா? ச்சே உங்கிட்ட போய் சொன்னேன் பாரு! என்று தலையில் அடித்துக் கொண்டேன்.
விடு மச்சி நாம் என்ன இல்லாததையா எழுதிட்டோம்! அவ உனக்கு செஞ்ச துரோகத்துக்கு மருந்தா நினைச்சுக்கோ! என்றான். போடா! என்று வெளியேறினேன்.
சிலநாட்கள் கல்லுரிக்கு வராமலிருந்த ப்ரியம்வதா அன்று வந்தாள். உணவு இடைவேளையின் போது சந்துரு ஒரு நிமிஷம்! என்று அழைத்தாள். அவள் முன் நிற்க பயந்து தலை குணிந்தவனாய் நின்றேன்.
சந்துரு! நீயுமா? என்றாள்.
அந்த ஒரே கேள்வி என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. குனிந்த தலை நிமிராது சாரி என்றேன் குரலே வரவில்லை கிணற்றின் அடியில் இருந்து வருவது போல் இருந்தது அவளை நிமிர்ந்து நோக்கவும் திராணியின்றி வகுப்பறைக்குள் நுழைந்து பெஞ்சில் தலையை கவிழ்த்துக் கொண்டேன்.
சில நாட்களாய் வராமலிருந்த அரவிந்த் அங்கு வந்தான். டேய் ராஸ்கள் இப்படி பண்ணிட்டியே! நான் லவ் பண்றது ப்ரியம்வதாவை இல்ல ப்ரியா! பாட்னி குருப் என்றான். ஒன்றும் பேசவில்லை குலுங்கி குலுங்கி அழுதேன்.
அன்று மாலை வகுப்பறையிலேயே மயங்கிவிட்ட ப்ரியம்வதா மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்ப்ட்டாள்.அதோடு அவள் காலேஜிற்கு வரவில்லை. இன்று இறந்துவிட்டாள் என்ற செய்தி வருகிறது.
நினைவலைகளிலிருந்து நீங்கினேன்.
ஹார்ட் பெயிலியராம்பா! அவ ஹார்ட் பேஷண்ட் மாதிரி காட்டிகிட்டதே இல்லை! இரண்டு பேர் பேசிக்கொண்டே வந்தவர்கள் சந்துரு நீ ஏன் வரலை? என்றார்கள்.மௌனித்தேன்.
இவனுங்கள்ளாம் பிரெண்டுன்னு சொல்லிகிட்டு திரியறானுங்க ஆனா சாவுக்கு கூட வராம! அவர்கள் கலைந்தனர். இரண்டு லெக்சரர்கள் வந்தனர்.சந்துரு வாட் எ பிட்டி! உனக்கு ரொம்ப பெரிய இழப்புதான்! ஆனா எம்பா டெத்துக்கு வரலை? இதுவா நட்பின் அடையாளம்! நீ கண்டிப்பா வந்திருக்கணும் என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
நீ சரியான நட்புத் துரோகி அரவிந்த் வந்து கத்தினான்.
வேண்டும் வேண்டும் எனக்கு வேண்டும்! எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள்! அதெல்லாம் என் காதில் விழாது! நீயுமா? என்று ப்ரியம்வதாவின் கடைசிக் குரல் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது கேட்கும் வரை இதெல்லாம் என் காதில் விழவே விழாது.
தாழ்ந்து போன நட்பின் அடையாளமான நான் எப்படி நட்பின் இலக்கணமான ப்ரியம்வதாவின் முகத்தை எப்படிப் பார்ப்பேன் அவள் இறந்தாலும் கூட அவள் முகத்தை பார்க்கும் சக்தி எனக்கில்லை!
குலுங்கி குலுங்கி அழுதேன் நான்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Comments
Post a Comment