மூன்று ஆமைகள் பாப்பா மலர்!

மூன்று ஆமைகள்


அரையாண்டுத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன வழக்கம் போல நந்தினிதான் 11ம் வகுப்பில் முதலிடம் பிடித்தாள் ‘கங்கிராட்ஸ் நந்தினி’ என்று வெளியே பாராட்டிவிட்டு உள்ளுற குமுறினாள் அமுதா. அவள் ஏழாவது இடம் தான் பிடித்து இருந்தாள்.
   சென்ற ஆண்டு வரை அமுதாவின் ராஜ்யம் தான்.அவள்படித்தபள்ளியில் அவளை மிஞ்ச யாரும் இல்லை. ஆனால் 11ம் வகுப்பில் புதிய பள்ளியில் சேர்ந்தபின் அவளது பாச்சா பலிக்காமல் போய்விட்டது.
   இந்தபள்ளியில் அதுவும் அவளது பிரிவிலேயே வந்து அமர்ந்து சோதனை செய்துவிட்டாள் நந்தினி.. நந்தினிதான் அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பில்  முதலிடம் பிடித்த மாணவி.அதை பதினொன்றாம் வகுப்பிலும் விட்டுக் கொடுக்க அவள் தயாரில்லை. அமுதாவும் அவள் பள்ளியில் முதலிடம் பிடித்தவள்தான் ஆனால் அங்கு பலமான போட்டியில்லை.
   இங்கு அப்படியே சற்று அசந்தால் ஆளையே முழுங்கிவிடும் மாணவ மாணவிகள். இது தெரியாமல் காலாண்டுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு தான் தான் முதல் ரேங்க் என்று மமதையில் இருந்தாள் அமுதா. ஆனால் முடிவு  வேறு விதமாக போனதில் அவளுக்கு வருத்தமாகிவிட்டது
   படிப்பில் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. நாம் மூன்று ஆமைகளை தவிர்த்தால் முயலை வென்றிட்ட ஆமையாகலாம்.முதலாவது ஆமை அறியாமை,இரண்டாவது முயலாமை, மூன்றாவது பொறாமை  இந்த மூன்று ஆமைகளை தவிர்த்தால் முன்னேறலாம் என்று தமிழாசிரியர் தமிழ்மணி கூறியதை அவள் சிந்திக்கவில்லை.
          அவளுக்கு நந்தினி மீது பொறாமை ஏற்பட்டுவிட்டது. கூட இருந்தே குழி பறிக்க அவள் குரூர புத்தி கோணல் வழி காட்டியது.நந்தினியோடு பழக ஆரம்பித்தாள் தின்பண்டங்களை பறிமாறிக் கொண்டாள். அரட்டை அடிக்க அவள் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தாள். எப்படியோ நந்தினியின் உயிர்த் தோழி ஆனாள் அமுதா.
   அரையாண்டுத்தேர்வு அறிவிப்பும் வந்தது. அமுதா நல்லதொரு திட்டம் தீட்டினாள். தேர்வு அறிவித்த நாள் முதல் நந்தினியை படிக்க விடாமல் செய்ய தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று டிவி வைத்து தொடர்களை பார்க்கச் செய்தாள். ‘கம்பெய்ன் ஸ்டெடி’ என்றுகூட்டிச் சென்று படிக்க விடாமல் கதைகளைப் பேசி அரட்டைஅடித்தாள். நந்தினியின் சில புத்தகங்களை இரவல் கேட்டு பரிட்சையன்றுதான் கொடுத்தாள்.
   நம் திட்டம் பலிக்கும் நாம் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் என்று நினைத்தவள் படு பாதாளக் குழியில் விழுந்தாள். எண்ணம் போல் வாழ்வு எனும் நன்னெறி பலித்துவிட்டது.
   மரத்தடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்த அமுதாவை தோள் தொட்டு எழுப்பினாள் நந்தினி. ‘அழாதே அமுதா! எப்பவும் செகண்ட் ரேங்க் எடுப்பே! என்ன ஆச்சு ஏழாவது ரேங்க்குக்கு குறைஞ்சிட்டே டிவி பார்த்து படிப்பை கோட்டை விட்டுட்டியா?’
   எரிச்சலாக இருந்தது அமுதாவிற்கு! ‘எல்லா மாஸ்டர்ஸும் உனக்குத்தான் மார்க் போடுறாங்க! நீ கூடத் தான் என் கூட சேர்ந்து டிவி பார்த்தே ஊர் சுத்தி அரட்டை அடிச்சே ஆனா நீ தான் ஃபர்ஸ்ட் ரேங்க்! எப்படியோ எல்லாரையும் மயக்கி மார்க் வாங்கிட்ட!’
   அமுதா பேசிக் கொண்டே போக நந்தினிக்கு கோபம் வந்தது. ‘நிறுத்துடி! உன் பேச்சை! என் ஆன்சர் பேப்பரை எல்லாம் பார்த்தே இல்லே? அப்படியும் எப்படி உன்னால இப்படி பேச முடியுது? ஏண்டி இப்படி பொறாமையால வெந்து சாகிற? நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிறது பிடிக்காம என் கூடப் பழகி டிவி பார்க்க வைச்சு மார்க்கை குறைக்க நினைச்சே! ஆனா நான் தினமும் அன்றைய பாடத்தை அன்னிக்கே படிக்கிற பழக்கம் உள்ளவ! அது என்னை காப்பாத்துச்சு.சேர்த்து வச்சு படிக்கிற நீதான் பாழாய் போய் ஏழாவது இடத்துக்குப் போயிட்டே! இப்பவும் ஒண்ணும் கெட்டு போயிடலை! மனசைப் போட்டுக் குழப்பிக்காம தெளிவு பண்ணிக்கோ. தினமும் படிக்க முயற்சி செய்! முழு ஆண்டிலாவது என்னை முந்த நியாயமா முயற்சி செய் வரட்டுமா? குட்பை! விடைபெற்றாள் நந்தினி.
  அமுதா தன் தவறை உணர்ந்தாள். அறியாமையும் முயலாமையும் பொறாமையும் விட்டொழித்தாள். இனி அவள் முதலிடம் பிடிப்பாள் என்பதில் சந்தேகமில்லை!


அறவுரை!

திருக்குறள்

பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும்
இருள்தீர  எண்ணிச் செயல்
                     - திருவள்ளுவர்.

விளக்கம்|  ஒரு செயலை செய்யும்போது பொருள், கருவி, காலம்,செயல்,இடம் எனும் ஐந்தையும் மயக்கம் நீங்க எண்ணிச் செய்தல் வேண்டும்.

உங்களுக்குத் தெரியுமா?
உலகின் மிகப் பெரிய பள்ளி அமைந்த இடம் லக்னோ

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

  1. பகிர்வுக்கு நன்றி!
    http://booktamil.blogspot.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2