நேரம்! பாப்பாமலர்!

             நேரம்!

அன்று பொன்னரசு ஆபிஸில் இருந்து திரும்பும் சமயம் தமிழாசிரியர் தமிழ் நம்பி எதிர்கொண்டார். சார் ஒரு நிமிஷம் உங்க கிட்ட பேசனும் என்று பொன்னரசை தனியாக அழைத்தார் தமிழ்நம்பி.
  இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதோடு நல்ல பழக்கமும் கூட ஆனாலும் அனாவசியமாக இருவரும் பேசிக்கொள்வது கிடையாது ஏதாவது விஷயங்கள் இருப்பின் இருவரும் பறிமாறிக் கொள்வார்களே ஒழிய தேவையற்ற வம்புகள் பேசமாட்டார்கள்.
    தமிழ்நம்பி தன்னை அழைக்கவும் ஏதோ விஷயம் இருக்கிறது என்று உணர்ந்தவராய் என்ன தமிழ் ஐயா! பார்த்து நாளாச்சு! என்ன விஷயம் தைரியமா சொல்லுங்க! ஏதாவது உதவியா? என்று கேட்டார் பொன்னரசு.
   உதவியெல்லாம் ஓண்ணுமில்லே! உங்க மகனை பத்தி கொஞ்சம் பேசனும்!என்றார் தமிழ்நம்பி. அதுக்கென்ன பேசிட்டா போச்சு! அவன் உங்க வகுப்புதானே ஐயா! ஏதாவது வால் தனம் பண்றானா? சொல்லுங்க கண்டிச்சு வைப்போம் என்று ஐயாவை பேசவிடாமல் தானே பேசி முடித்தார் பொன்னரசு.
  என்ன சார் நான் சொல்ல வந்த விஷயமே வேற?
அப்ப சொல்லுங்க!
  உங்க பையன் பெரிசா தப்பு எதுவும் பண்ணலை? ஆனா பாடம் நடத்தையில பாடத்த கவனிக்காம கதை புத்தகம் படிச்சிகிட்டு இருக்கான். பாடபுத்தகத்தில கதை புக்கை மறைச்சி வச்சி பாடம் கவனிக்கறா மாதிரி பாவ்லா காட்டுறான். நான் கவனிச்சி கண்டிச்சிட்டேன் இருந்தாலும் ஒரு வார்த்தை உங்க காதுல போட்டுடலாம்னு சொல்லிட்டேன்.
   அப்படியா! நான் விசாரிக்கிறேன். பாட நேரத்தில் கதை படிச்சா படிப்பு என்ன ஆவறது நான் பார்த்துக்கறேன் நீங்க கவலை படாம போய்வாங்க விடைபெற்றார் பொன்னரசு.
  பொன்னரசுவிற்கு ஆத்திரம் வந்தது ஆனாலும் இதை பக்குவமாக கையாள முடிவு செய்தார்.
  மறுநாள் காலை அனைவரும் டிபன் அருந்தும் வேளை ! பொன்னரசின் மனைவி டிபன் பறிமாற எனக்கு டிபன் வேண்டாம் சாப்பாடு வேண்டும் என்றார் பொன்னரசு. என்னங்க ஆச்சு உங்களுக்கு காலையிலேயே சாப்பாடு சாப்பிடுவாங்களா? இது டிபன் சாப்பிடற நேரம் சாப்பாட்டு நேரம் இல்லை என்றாள்.
பொன்னரசோ பிடிவாதமாக எனக்கு சாப்பாடு தான் வேண்டும். என்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த மகன் எழிலரசு அப்பா! என்னப்பா பிடிவாதம் பண்றீங்க! காலையில டிபன் தானே சாப்பிடுவாங்க சாப்பாடு கேக்கறீங்களே அப்ப சாப்பாடு நேரத்தில் டிபன் சாப்பிடுவீங்களா என்றான் கேலியாக.
  அப்ப சாப்பாட்டுக்கு ஒருநேரம் டிபனுக்கு ஒருநேரம் காபிக்கு ஒரு நேரம் இருக்கு அந்தந்த நேரத்தில அதைத்தான் சாப்பிடனும் இல்லையா?  ஆமாம்பா!
அப்படின்னா பாடம் படிக்கிறதுக்கு ஒரு நேரம் விளையாடறதுக்கு ஒரு நேரம் கதை படிக்கிறதுக்கு ஒரு நேரம்னு இருக்கு அதுப்படி நீ நடந்துக்கிறியா? மகனை மடக்கினார் பொன்னரசு.
   அப்பா!.. பதில் சொல்ல முடியாமல் முழித்தான் எழிலரசு.
  பாடநேரத்தில கதை படிக்கிறியாமே எழில்? தப்பில்லையா? பாந்தமாக கேட்டார் பொன்னரசு.
   கலங்கிய கண்களுடன் தப்புதாம்பா! இனிமே அப்படி செய்யமாட்டேன் என்னை திருத்ததான் இப்படி ஒரு நாடகமா? சாரிப்பா! இனி நான் படிக்கிற நேரத்தில படிப்பில மட்டும் கவனம் செலுத்துவேன் என்றான்.
  அவனை கட்டி அணைத்து முத்தமிட்டு சபாஷ்டா கண்ணா! என்றார் பொன்னரசு.

அறவுரை!

இனியவை நாற்பது

சலவரை சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.

விளக்கம்|  வஞ்சரை சேராமல் விடுதல் இனிது. அறிவுடையார் சொற்களை பாதுக்காத்து போற்றுதல் இனிது. அகன்ற இடத்தை உடைய உலகத்தில் வாழும் நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம் உரிமைபட வாழ்வது இனிதாகும்.

உங்களுக்குத் தெரியுமா?
 இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம் பீதாம்பூர். மத்தியபிரதேசம்.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2