இப்படியும் சில மனிதர்கள்! 2


இப்படியும் சில மனிதர்கள்!

2         பொடிமூக்கு பரமன்

இப்படியும் சில மனிதர்களில் பொடிமூக்கு பரமனை நான் கட்டாயம் சொல்ல வேண்டும். ஆனால் தற்போது அவர் உயிரோடு இல்லை! இறந்து ஏழு வருடங்கள் ஓடிவிட்டது.

  பொடி மூக்கு பரமன் எங்கள் தந்தையின் பால்ய சினேகிதன். ஒரு இருபது வருடங்கள் முன்புவரை எங்கள் வீட்டில் பெரிய திண்ணை இருந்தது. வீட்டிற்கெதிரே பரமனின் உறவுக்காரர்களின் வயல் இருந்தது. பரமன் அந்த வயலை மேற்பார்வையிட எங்கள் வீட்டுத்திண்ணையில் தான் அமர்ந்து கொண்டிருப்பார்.
   பொடிமூக்கு பரமன் என்று அழைக்க காரணம் பெரிதாய் ஒன்றும் கிடையாது. அவரது மூக்கில் போட்ட பொடி வழிந்து கொண்டிருக்கும். அந்தகால ஜெமினி மீசை மூக்கின் அடியில் பொடி படர்ந்து காணப்படும்.
   பரமனுக்கு பெரிதாக சொத்து எதுவும் கிடையாது இருக்கும் குறைந்த நிலத்தில் விவசாயம் நெல் புரோக்கர், கூலிவேலை என அவரது காலம் கழிந்து வந்தது. நகைச்சுவை உணர்வு அதிகம். அவரது அனுபவங்களை நகைச்சுவையாக சொல்லும் போது கேட்க தூண்டும்.
   அவரது வருமானம் குடும்பசெலவுகளுக்கு போதுமானதாக இல்லை. செங்குன்றத்தில் ஒரு செட்டியாரிடம் நெல் புரோக்கர் வேலை செய்து அந்த கமிஷனைக் கொண்டுதான் குடும்ப ஜீவிதம். அது தவிர விறகு வெட்டுவது, பயிர் மேற்பார்வை என ஓன்றிரண்டு வேலைகள் செய்வார். படிப்பும் மெத்தக்கிடையாது. அவரது மகன் என் தங்கையின் கிளாஸ்மெட் 10ம் வகுப்பில் தோல்வியுற்று ஒரு கம்பெனிக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.
    எப்படியோ அந்த குடும்பம் தட்டுத்தடுமாறி நடந்து வந்தது. இதற்கிடையில் அவரது பெண்ணுக்கும் சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து வைத்தனர்.
   பெண் திருமணம் முடிந்த கையோடு இவருக்கு காச நோய் பீடித்தது. அது வேகமாக பரவ கவனிப்பார் யாருமில்லை. வருமானம் ஈட்டவில்லை என அவர் மனைவியும் அவரை கண்டுகொள்ள வில்லை. சில நாள் தாம்பரம் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். 2004 ஜனவரியில் என்னிடம் அடுத்த வருஷம் இருப்பேனோ மாட்டேனோ ஒன் கையால ஒரு துணி கொடு! கட்டிகிட்டு திருப்தியா சாகறேன் என்று கேட்டார். நானும் வேட்டி துண்டு கொடுத்து அனுப்பினேன். வாங்கிச் சென்றவர்தான். பின்னர் நோய் முற்றி அந்த ஆண்டு மே மாதத்தில் இறந்து போனார்.
      இவரது நகைச்சுவை உணர்வுக்கு ஒரு கதை! அந்த காலத்தில் இவர் மற்றும் என் தந்தை இன்னும் இரண்டு நண்பர்கள் என இரண்டாவது காட்சி சினிமா பார்க்க பொன்னேரி சென்று உள்ளனர்.
   அந்த காலத்தில் சைக்கிளில் டபுள்ஸ் செல்லக் கூடாது! விளக்கு கட்டாயம் இருக்க வேண்டும். சினிமா பார்த்து திரும்பிவரும் போது இரண்டிரண்டு பேராக சைக்கிளில் வந்து கொண்டிருக்கின்றனர். யாருடைய சைக்கிளிலும் விளக்கு இல்லை. வேகமாக முன்னால் சென்ற பரமன் எதிரே வந்த இன்னொரு சைக்கிள் காரர் மீது மோதினார்.
   அவர் ஒரு போலிஸ் காரர். கான்ஸ்டபிள் அவரும் டபிள்ஸ் வந்துள்ளார் சைக்கிளில்! கான்ஸ்டபிள் மிரட்டியுள்ளார் யோவ்! சைக்கிள் லைட் இல்ல முதல் தப்பு இரண்டாவது தப்பு டபுள்ஸ் வந்தது, மூணாவது தப்பு போலிஸ் காரன் மேலேயே மோதுனது நட ஸ்டேஷனுக்கு என்று எகிறியுள்ளார் போலிஸ்காரர்.
   நம்ம பரமனோ குறும்புக்காரர்! ஏன் சார் நீங்க கூடத்தான் லைட் இல்லாம டபுள்ஸ் வந்தீங்க? என்று எதிர் கேள்வி கேட்டுள்ளார்.
போலிஸ் காரர் அசந்து யாருடாநீ இந்த பேச்சு பேசற ? எந்த ஊரு உனது? என்று கேட்டுள்ளார். அந்த சமயம் பிரபலமாயிருந்த ஒரு அரசியல் பிரமுகர் பேரை சொன்னதும் அப்படியா அதான் துடுக்கா பேசறியா? என்று பையிலிருந்த பத்துக் காசை மட்டும் பிடுங்கிக் கொண்டு சைக்கிளில் காத்தை இறக்கி விட்டு அனுப்பிவிட்டனராம்.
   இந்த கதையை பலமுறை அவர் எங்களிடம் கூறும் விதமே தனி. ஒரு சமயம் சாலை போடும் போது ஜல்லிகளை குவியலாக கொட்டாமல் ஒவ்வொண்றாய் அடுக்கிக் கொண்டிருந்தனராம். என்னப்பா செய்யறிங்க ரோடு போடறீங்களா? இல்ல வீடு கட்டறீங்களா? என்று எகத்தாளமாய் இவர் கேட்க அதே சமயம் அங்கு வந்த இஞ்சினியர்  பணியாளர்களை மிரட்டி ஒழுங்காக போடச் செய்தாராம்.
     எங்களுக்கு சீட்டாட கற்றுத் தந்தவரும் அவரே! பொழுது போகா சமயங்களிலும் பள்ளி விடுமுறை தினங்களிலும் அவருடன் நானும் எனது தங்கைகளும் சீட்டாடிய நாட்களை மறக்க முடியாது. பரம பதம் கல்லாட்டம் என பல ஆட்டங்கள் அவருடன் ஆடியிருக்கிறோம். சில சமயம் எங்களை பள்ளிக்கு சைக்கிளில் கொண்டு வந்து விடுவார்.
சென்ற கட்டுரையில் வந்த பண்டாரக் கதிரை சீண்டி வேடிக்கை யும் பார்ப்பார். இவர்கள் இருவருக்குமான மோதல் மிகவும் வேடிக்கையாக இருக்கும். பண்டாரக் கதிருக்கு தனித்து சமைத்து உண்ண ஆலோசனை கூறி இரண்டு நாட்கள் சமைக்க உதவியும் பண்ணினார்.
   சில சமயம் அவரை கோபித்துக் கொண்டும் இருக்கிறோம் ஆனாலும் எதையும் மனதில் வைக்காமல் மீண்டும் எங்கள் வீட்டு திண்ணைக்கு வந்துவிடுவார் அவர். என் தங்கை தையல் கற்றுக் கொண்ட சமயம் ஒரு சட்டை துணியை கொடுத்து சட்டை தைக்கச் சொன்னார். அதை என் தங்கை ஒருவித கோலம் பண்ணியும் எதுவும் சொல்லாமல் நாலு தடவை தைத்து பழகினால்தான் வரும் முதலிலேயே வந்துடுமா? என்று சொல்லிவிட்டு கூலியாக சில ரூபாய்களையும் தந்து விட்டுப் போனார்.
   தேர்தல் வந்து விட்டால் போதும் பேப்பரை வைத்து கொண்டு சகல கட்சிகளையும் விமரிசிப்பார். தீவிர அதிமுக அனுதாபியான அவர் கலைஞரை வெளுத்து வாங்குவார். வைக்கோவையும் புது கட்சி ஆரம்பித்தபோது திட்டத் தவறவில்லை!. ரஜினியும் 96 தேர்தலில் வாய்ஸ் தந்தபோது கடுமையாகச் சாடினார். தைரியமிருந்தால் கட்சி ஆரம்பித்து போட்டியிடவேண்டும் இப்படி மற்றவருக்கு வாய்ஸ் கொடுக்கக் கூடாது. என்று கூறினார்.
   இப்படி பன்முக திறமைகள் இருந்தும் பரமன் ஒரு பற்றாக்குறை மனிதராகத் தான் இறந்து போனார். அவரை கவனிப்பார் யாருமில்லாமல் போயிற்று அவர் மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீடு சென்றுவிட ஒரு வேளை உணவுக்குக் கூட அடுத்தவரை நாட வேண்டிய அவலத்தில் பாதி நாட்கள் உண்ணாமல் கிடந்து புற்று நோய் முற்றி வறுமையிலே இறந்து போனார்.
  வறுமைக்கு காரணம் அவரது சோம்பல்! ஒரு நாளைக்குத் தேவையானதை சம்பாதித்துவிட்டால் மீண்டும் வேலை செய்ய மாட்டார் அடுத்த நாள் தான் திரும்பவும் வேலைக்கு வருவார். அவருடன் வேலை பார்த்த பலர் அல்லாடி அல்லாடி சேர்க்கையில் இவர் சோம்பிக் கிடந்ததால் வருமானம் குண்றி நோய் முற்றி மனைவியை பிரிந்து தன் உயிரையும் ஒரு 50 வயதிற்குள் இழக்க நேரிட்டது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2