பல்லாவரத்தில் நள்ளிரவில் உலா வந்த "பேய்': அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்

குறி சொல்பவரின் பேச்சை கேட்டு, பல்லாவரம் மார்க்கெட்டில் இளம்பெண் நிர்வாணமாக சென்றார். அவரை, "பேய்' என நினைத்து பலரும் அலறி அடித்து ஓடினர். துணிச்சல்கார இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண்ணுக்கு உடை அளித்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றார்.

நேற்று முன்தினம் நிறைந்த அமாவாசை. இரவு 1 மணிக்கு சென்னை பல்லாவரம் பகுதியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தன், ஜீப்பில் ரோந்துப்பணியில் இருந்தார். பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் சென்ற போது, அங்கிருந்து மிகுந்த பதட்டத்துடன் நால்வர் ஓடிவந்தனர்.ஜீப்பை பார்த்ததும் நின்ற அவர்கள் இன்ஸ்பெக்டரிடம்,"" சார் மார்க்கெட்டில் தலைவிரி கோலத்துடன் பேய் உலா வருகிறது,'' என்று கூறினர். அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர், அவர்களை போகச் சொல்லிவிட்டு, தொடர்ந்து பேய் வந்ததாக கூறிய மார்க்கெட் பகுதியில் தன் ஜீப்பை செலுத்தினார்.

தொடர்ந்து, சென்றபோது, தலைவிரிகோலத்துடன் முகத்தை மறைத்ததுடன், நிர்வாண நிலையில் ஒரு உருவம் எதிரே வந்துள்ளது. இதைக்கண்டு முதலில் பயந்தாலும், பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், தன்னிடம் இருந்த டார்ச்சை எடுத்து, கால் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தார். அப்போது தான், அது பேயல்ல... இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து வருகிறார் என்பது புரிந்தது.

உடனடியாக, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர், அங்கிருந்த பெண் போலீசாரிடம், அவர்களது மாற்று உடையை எடுத்து வருமாறு கூறினார். அவர்களும் உடனே, உடையுடன் ஜீப்பில் வந்திறங்கினர். போலீசை பார்த்ததும் அந்த நிர்வாணப் பெண் அங்கிருந்து ஓடினார். அரை கிலோமீட்டர் விரட்டி, பல்லாவரம் மார்க்கெட் அருகிலேயே மடக்கிப் பிடித்து, அப்பெண்ணுக்கு உடைகளை மாட்டி, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அந்த பெண், அப்பகுதியில் ஒருவரை காதலித்துள்ளார். நன்றாக பேசிக் கொண்டிருந்த காதலன், திடீரென கம்பி நீட்டிவிட, அவனை மறக்கமுடியாத நிலையில், அங்குள்ள குறிசொல்லும் சாமியார் ஒருவரை அந்த பெண் சந்தித்துள்ளார். அவர், "நிறைந்த அமாவாசை இரவில், குளித்துவிட்டு, உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் ஈர உடலுடன் ஊரைச் சுற்றி வந்தால், நினைத்தது நிறைவேறும்' என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட அப்பெண், திருவண்ணாமலையிலேயே அப்படி செய்தால், ஊருக்கு தெரிந்து விடும் என்று, பம்மலில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கியவுடன், 11 மணிக்கு குளித்துவிட்டு, ஈரஉடையுடன் பொழிச்சலூர் - பம்மல் சாலையில் நடந்து வரும்போதே, உடைகளை ஒவ்வொன்றாக களைந்துள்ளார். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து, நிர்வாணமாக பல்லாவரம் வந்ததாக தெரியவந்தது.

பின்பு பல்லாவரத்தில் இருந்து, குரோம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்து, நேற்று காலை மீண்டும் விசாரித்தபோது, இது போன்று ஊர்வலமாக போனால், எப்படியும் போலீஸ் பிடித்துவிடும். அப்பொழுது போலீசார் காதலனுடன் பேசி சேர்த்து வைப்பார்கள் என்று நினைத்து இப்படி நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.இதையடுத்து, போலீசார் அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரிக்கு தகவல் அளித்தனர். அவர்கள், இப்பெண்ணை ஏற்க மறுத்ததால், மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

""பேயென்று நினைத்து அங்கிருந்தவர்கள் பயந்து ஓடியதால் பரவாயில்லை; பெண்ணென்று தெரிந்திருந்தால்... நினைத்து பார்க்க முடியாத விஷயங்கள் அரங்கேறியிருக்குமே'' என்று வருத்தப்பட்டார் பெண் காவலர் ஒருவர்.

நன்றி தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2