“குலமகள்”


  “குலமகள்”

“அன்பரே! தாங்கள் கட்டாயம் இந்த போரில் கலந்துகொண்டுதான் ஆக வேண்டுமா?” என்று கணவனின் மார்பில் சாய்ந்துகொண்டு கயல்விழி கேட்ட போது மீனைஒத்த அவள் விழிகளில் ஒரு மருட்சி தெரிந்தது. அவள் நிலவை ஒத்த அவள் முகத்தில் மேகம் மறைத்தார் போல ஒளி மங்கி கிடந்தது.
    “ என்ன இது கயல்விழி?தமிழரின் வீர மரபில் உதித்து வந்த உன் போன்ற குலமகளின் வாயில் இந்த வார்த்தைகள் வரலாமா?” “முறம் கொண்டு பகைவரை விரட்டியடித்த மூத்த தமிழ்க்குடிமகள்கள் வழி வந்த வீரப்பெண்மணி என்றல்லவா உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன்! வெட்கம்! நீ இப்படி பேசியிருக்க கூடாது!” என்று குரலில் சீற்றம் காட்டினான் அவளது கணவன் மகேந்திரன்.
    “ அதில்லை அன்பே! தங்களை பிரிந்திருக்க வேண்டுமே! என்று எண்ணி அவசரத்தில் பிரிவுத்துயரத்தில் ஏற்பட்ட வார்த்தைகள் அது!” குரல் உடைந்து சொன்னாள் கயல்விழி!
     “பிரிவு! தமிழ் வீர மரபில் சகஜம்தானே! மறவர் குடியில் போர்களும் வீர மரணங்களும் சகஜம்! வெற்றியும் வீர மரணங்களும் வீரர்கள் வாழ்வில் ஒன்று கலந்தது. இதை நீ அறியாயோ பெண்ணே?”
  “ஐயோ! தங்கள் வாயால் அப்படி சொல்லாதீர்கள்! மரணம் என்ற சொல்லை கேட்டாலே மனம் பதைக்கிறது.என்னுடைய உள் மனது ஏதோ ஒன்றை சொல்லி துன்புறுத்திக் கொண்டு இருக்கிறது! போரில் தங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் என்னால் தாங்க இயலாது.” எனவேதான்..
   “எனவேதான் போக வேண்டாம் என்று புலம்புகிறாயா? சீச்சி என்ன இது கயல்விழி! இப்படி அழுது புலம்பும் சாதாரண பெண்ணாக நீ இருக்கிறாய்? நான் இதை விரும்பேன்!” குழந்தையாக இருந்தாலும் அது இறந்தோ அல்லது சதைப் பிண்டமாக பிறந்தால் தழும்பில்லாமல் புதைக்க கூடாது என்று அதை இரண்டாக பிளந்து புதைக்கும் வீரத்தமிழர் மரபில் வந்தவள் நீ ! அப்படிப்பட்ட மரபில் உதித்த நீ கலங்கக் கூடாது!”
     “தெரியவில்லை அன்பே! இன்று என் மனம் ஏதோ அபாயம் என்று எச்சரிக்கிறது! உங்களை போகவேண்டாம் என்று சொல்லசொல்லி என் உள்ளம் குமுறுகிறது. ஆமாம்! நம் அரசருக்கு அப்படி என்ன போரின் மீது ஆசை!”
    “அரசர்களின் கொள்கையே நாடுகளை வென்று வெற்றியை நிலை நாட்டி சக்ராதிபதியாக கொலொச்சுவதுதானே! நமது அரசர் குலோத்துங்கரும் தம் மூதாதையரின் வழியில் கலிங்கத்தின் மீது படையெடுக்க உள்ளார். இது அவர் புகழை கட்டாயம் பரவச்செய்யும். இந்தப் போரை புலவர் செயங்கொண்டார் களத்தில் நின்றே பாட உள்ளார். அந்த செய்யுள்கள் காலத்தால் அழியாது நமது அரசரின் வெற்றி பரணியை எல்லா உலகிலும் பரவச் செய்யும் அல்லவா? அந்த புகழ் பரவச்செய்யும் பணியில் ராமருக்கு அணில் உதவியது போல நானும் குலோத்துங்க மன்னருக்கு சிறு உதவியைச் செய்ய போகிறேன்! அதை நீ தடை செய்து விடாதே! தைரியமுடன் வழி அனுப்பு!”
   “ அன்பரே! ஒரு சிறு வேண்டுகோள்!”
  “என்ன?”
   “ அன்றில் என்று ஒரு நீர்ப்பறவை. நீரில் தன் துணையுடன் செல்லும்போது இடையே ஒரு மலர் குறுக்கிட்டாலும் அந்த கணப்பொழுது பிரிவைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை விட்டுவிடும். அதே நிலைமையில்தான் நானும் உள்ளேன்! தங்களைப் பிரிந்து என்னால்..”
  “ உன்னால் இருக்க முடியாது என்று சொல்லுகிறாய்! அதற்கு நான் என்ன செய்ய முடியும்! வீரனுக்கு அழகு போரில் ஈடுபடுவதுதானே!” வீட்டில் முடங்கி  கோழையாக இருக்க என்னால் முடியாது கயல்விழி!”
    “ அன்பரே! நான் தங்களை போருக்கு போகவேண்டாம் என்று கூறவில்லை! நானும் போர்க்களத்திற்கு தங்களுடன் வருகிறேன் என்று சொல்லுகிறேன்!”
   “ என்ன இது! பெண்களையும் குழந்தைகளையும் போர்க்களத்திற்கு அனுப்புவது நம் மரபு இல்லையே!” இது எப்படி சாத்தியம்?
   “கவலைப் படாதீர்கள்! நான் ஒரு உபாயம் வைத்திருக்கிறேன்! நான் நன்றாக ரதம் செலுத்துவேன் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா? நான் ஆண் வேடம் தரித்து தங்களின் ரத சாரதியாக வந்து விடுகிறேன்!”
   “ நல்ல யோசனைதான்! உன் திறமையும் அரசரின் போரில் பங்குபெறட்டும்!” உனக்கும் வீரப்போரை கண்டுகளிக்க ஒரு சந்தர்ப்பம் அமையும்.
   
மகாராஜா குலோத்துங்கன் அவை
      குலோத்துங்க மன்னன் மந்திரி பிரதானிகள் சூழ அஷ்ட திக் கஜங்களுடன் ஆலோசனை செய்து கொண்டு இருந்தான்.
   “அமைச்சரே! சூழ்நிலை நமக்கு சாதகமாக இருக்கிறதா?”
“ நிச்சயம் சாதகமாகவே உள்ளது. இதுதான் கலிங்கத்தின் மீது படையெடுக்க சிறந்த தருணம்! இந்த போர் வரலாற்றில் எழுதப்படும்! தங்கள் வெற்றிச் சரித்திரம் காலத்தையும் வெல்லப் போகிறது மன்னா!”
   “படைத்தளபதியாரே! நமது படைகள் தயார் நிலையில் உள்ளனவா? வீரர்களிடையே ஒற்றுமை நிலவுகிறதா?”
   “அனைவரும் தயாராக உள்ளனர் மன்னா! காலாட்படைகள் நாற்பதாயிரம்! குதிரைப்படைகள் பத்தாயிரம் யானைகள் ஆறாயிரம், ரதங்கள் நான்காயிரம் என நம் படைகள் அணிவகுத்து தயாராக உள்ளது மன்னா!”
     இப்போது மன்னரின் பார்வை அரசவைப் புலவர் செயங்கொண்டாரின் மீது படிந்தது. “என்ன புலவரே! உம்மை தயார் செய்து கொள்ளும்! வெற்றி பரணி பாட இந்த குலோத்துங்கன் போரில் ஆயிரம் யானைகளை கொன்று சரித்திரம் படைக்கப் போகிறேன்!”
   “ தங்களின் வீரத்தை புகழ என் எழுத்தாணி தயாராக உள்ளது மன்னா! போர்க்களத்தில் நானும் நேரடியாக கண்டு கவிபாட தயாராக உள்ளேன்! உங்களின் புகழ் இந்த செயங்கொண்டானால் திக்கெட்டும் பரவப் போகிறது. பரணி பாட நான் இப்போதே தயார் மன்னா!”
     “ நன்று புலவரே! நன்று!”
வரலாற்று சிறப்புமிக்க அந்த யுத்தம் வெகு சீக்கிரமே துவங்கி விட்டது. அப்போரில் கலந்து கொண்டவர்கள் எழுப்பிய சத்தம் ஆர்பரிக்கும் கடலலைகளையும் மிஞ்சிவிட்டது. பரி என்னும் குதிரைகளின் குளம்பொலியும் யானைகளின் பிளிறல்களையும் எட்டுத்திக்கிலும் எதிரொலிக்கச்செய்தது.
  நாணிலிருந்து புறப்படும் அம்புகளின் ஒலி வெடியொலியோ என்னும் அளவிற்கு விண்ணை பிளந்துகொண்டு வருவது போல கேட்டது. அந்தப் போரில் அடிபட்டோரின் அலறல் ஒலி  காதுகளை செவிடாக்கும் வண்ணம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
  பெரிய புலிகள் புலிகளோடு மோதுவது போல வீரர்கள் வீரர்களோடு மோதிக் கொண்டனர். அவர்களின் கர்ஜனைகள் காத தூரம் ஒலித்தது. சிங்கங்கள் இரண்டும் மோதிக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி குலோத்துங்க மன்னனும் கலிங்க அரசன் அனந்த வர்மனும் மோதிக் கொண்டார்கள்.அந்த போர்க் களம் எங்கும் குறுதியாறு ஓடிக் கொண்டிருந்தது.  இறந்த உடல்களும் அடிபட்டு கிடப்போரும் மலை போல குவிந்து கிடந்தார்கள்.
   இக்காட்சிகளை மகேந்திரனுக்கு ரதசாரதியாக இருந்த கயல்விழி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கணவன் வீரப் போர் புரிய அவள் உறுதுணையாக இருந்தாள். அந்த களத்தில் அவள் மிகவும் திறமையாக ரதம் செலுத்திக் கொண்டு இருந்தாள். அதே சமயம் அவள் பேதை உள்ளம் பதைபதைத்தது. அலறித் துடித்தது.
   விருந்தினரும் வறியவரும் உண்பதைக் கண்டு முகமலரும் சான்றோர் போல கழுகுகள் தம் உடலை திண்ணும் போது வீரர்களின் முகம் மலர்ந்து கிடந்தது. இவ்வாறு அவள் எண்ண ஓட்டம் செல்லும் சமயம்தான் அது நடந்தது.
   வீரப்போர் புரிந்ததில் சற்று களைத்த மகேந்திரன் சுதாரிக்கும் முன் எதிரின் கூர்மையான அம்பு ஒன்று மகேந்திரனின் மார்பை துளைத்தது. அவன் அலறிச் சாயும் முன்
  அன்பரே! அய்யோ! நான் நினைத்தது போல விபரீதம் நடந்துவிட்டதே! என்று அலறியவாறே ரதத்தில் இருந்து குதித்து கணவனை பூமியில் விழாத வாறு தாங்கினாள் அந்த உத்தமி.
   “ அன்பரே! என்றும் தாங்கள் என்னவர்! தங்களை யாரும் தொட அனுமதிக்கமாட்டேன்! அந்த பூமாதேவியான தரைமகளைக் கூட தங்களை தொட இந்த குலமகள் விரும்ப மாட்டாள்! என்று கணவனைத் தாங்கிய கயல்விழி மேலும் சொன்னாள். அன்பரே! தங்களை பிரிந்து ஒரு நொடியும் இருக்கமுடியாது என்னால்! வானுலகிலும் நானே தங்கள் மனைவி! அங்கு நானே உங்களை வரவேற்பேன்!” என்று கணவன் உயிர் பிரியும் முன் உயிர்நீத்தாள் கயல்விழி!
    தரைமகள்தன் கொழுநன் தன் உடலந் தன்னைத்
தாங்காமற் றன்னுடலாற் றாங்கி விண்ணாட்டு
அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவியொக்க விடுவாளைக் காண்மின்! காண்மின்!
                                         கலிங்கத்துப் பரணி.

டிஸ்கி: சரித்திரக் கதை எழுதும் அளவிற்கு நான் பெரியோன் இல்லை! கதையின் இறுதியில் வரும் கலிங்கத்து பரணி பாடலை படிக்கையில் சுவையாக இருந்தது. அந்த பாடல் இக்கதையை எழுத தூண்டியது. ஓரளவு சுவையாக எழுதியிருந்தால் உங்களின் பாராட்டுக்களை தாராளமாக வழங்குங்கள்! பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுக. பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. முதலில் இந்த தாழ்வு மனப்பான்மையை தூக்கி தூரப் போடுங்கள்... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. sako....!

  unmaiyil sariththira padakaatchipol irunthathu...!


  manam oththu padiththen...!

  thavaru entru enakku theriyavillai....!

  ReplyDelete
 3. அருமையாக எழுதி உள்ளீர்கள் .. தொடருங்கள் இது போல இன்னும் பல கதைகளை எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 4. உண்மையிலேயே மிகவும்
  அழகாக இருக்கிறது நண்பரே...
  பாத்திரப் புனைவுகளும்
  காட்சி அமைப்புகளும்
  மிக அழகு...
  தொடருங்கள்...
  தொடர்கிறோம்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!