நான்கு திருடர்கள் கதை பாகம்2 பாப்பா மலர்!


நான்கு திருடர்கள் கதை பாகம்2 பாப்பா மலர்!
அரைத்திருடன் கதை
  கால்திருடனை பாராட்டிய பக்காத்திருடன் தன் இரண்டாவது மகனான அரைத்திருடனை இன்றிரவு நீ குந்தள நகரம் சென்று அபாரமான திருட்டு ஒன்றை நடத்திவரவேண்டும். இது உன் திறமைக்கு நான் வைக்கும் பரிட்சை என்று கூறினான். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று அரைத்திருடனும் கையில் சிறிது திரவியங்களை எடுத்துக் கொண்டு குந்தள நகரம் நோக்கி புறப்பட்டான்.குந்தளநகரம் வந்து அங்குள்ள நிலைமைகளை விசாரித்தான்.
    அன்றைய பட்டப்பகலில் ஜவுளிக் கடையில் ஒருவன் திருடிச் சென்றதாகவும், இரவிலும் அவன் வருவான் என்று எதிர்பார்த்து அவனை பிடிப்பதற்கு தலையாரி ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் மக்கள் பேசிக் கொண்டார்கள். அந்த தலையாரியைப் பற்றி அரைத்திருடன் விசாரித்தான். அந்த தலையாரிக்கு ஒரு பெண் உண்டென்றும் அந்த பெண்ணுக்கு இளவயதில் திருமணமாகி வியாபார விஷயமாக வெளியூர் சென்ற மாப்பிள்ளை திரும்பவில்லை என்றும் அறிந்துகொண்டான்.
    உடனே அரைத்திருடன் ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்று தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்து நல்ல ஜரிகை சேலை, பட்டுவேட்டி, தலைப்பாகை முதலானவைகளை வாங்கிக் கொண்டு மற்றுமொரு கடையில் லவங்கம், பாக்கு, ஜாதிக்காய், ஏலக்காய், ஊதுபத்தி போன்ற வாசனா திரவியங்களை வாங்கிக் கொண்டு வெளிநாட்டில் வியாபாரம் செய்து வருபவன் போல தன்னை ஜோடித்துக் கொண்டு தன்னை தலையாரியின் மாப்பிள்ளையென்று சொல்லிக் கொண்டு தலையாரியின் வீட்டை அடைந்தான்.அப்போது தலையாரி இன்றிரவு திருடனை பிடித்துவிட வேண்டும் என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
    மாமா! மாமி! என்று அழைத்துக் கொண்டே உள்ளே வந்த திருடன் தான் கொண்டுவந்த சாமான் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டினான். தான் சிறுவயதில் வியாபாரதிற்கு சென்ற தலையாரியின் மாப்பிள்ளையென்றும் வியாபாரம் முடித்து தற்போது வந்துள்ளதாகவும் தங்களுக்காக இந்த பொருள்களை கொண்டு வந்ததாகவும் கூறி அவர்களை நம்ப வைத்தான். அவர்களும் சின்னவயதில் வியாபாரத்திற்கு போன தங்கள் மாப்பிள்ளைதான் திரும்பி வந்து விட்டதாக நினைத்து தடபுடலாக உபசாரம் செய்தனர். தலையாரியின் வீட்டில் வயிறு முட்ட உண்ட அரைத்திருடன் அவசரமாக வெளியே கிளம்பும் தலையாரியை ஏன் மாமா இவ்வளவு அவசரமாக வெளியே கிளம்புகிறீர்கள் என்று ஒன்றும் அறியாதவன் போல கேட்டான்.
     தலையாரியும் தான் இன்றிரவு திருடனை பிடிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அரசனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் கூறிவிட்டு கிளம்பவும். அரைத்திருடனும் “மாமா! நானும் தங்களுடன் வருகிறேன்! இந்த நகரத்தை சுற்றிப்பார்த்து நாளாகிவிட்டது! தங்களுக்கு உதவியாகவும் இருக்கும்” என்றான். தலையாரியும் சம்மதித்து கூட்டிச் சென்றான்.
    தலையாரி ஓவ்வொரு இடமாக திருடனுக்கு காட்டிக் கொண்டு வரும் வழியிலே கோட்டை வாசலுக்கு அருகில் தொழுமரம் ஒன்று நடப்பட்டு இருந்தது. அதைக் கண்ட அரைத்திருடன் வியந்து “இது என்ன மாமா? புதிதாக இருக்கிறது?” என்று வினவினான்.  அதற்கு தலையாரி, “மாப்பிள்ளை இது தொழுமரம்! திருடர்களை கைகளை பூட்டி வைத்து கட்டுவது!” என்று சொன்னார்.
 “இதென்ன அதிசயமாக இருக்கிறது. இதில் ஒரு ஆள் ஆப்படித்து தொங்கினால் எப்படியிருக்கும்? என் கை கால்களை இந்த தொழுமரத்தில் மாட்டி நீர் ஆப்படித்துக் காட்டும்!” என்றான் அரைத்திருடன்.
  “ ஊகும்! வெகுநாளைக்கு பிறகு ஊர் திரும்பிய என்னுடைய மாப்பிள்ளை நீங்கள்! உங்களை தொழுமரத்தில் பூட்டுவதா?” என்று மறுத்தான் தலையாரி. திருடனோ! “இதில் என்ன இருக்கிறது! இதில் எப்படி திருடனை மாட்டி பூட்டுவார்கள் என்று எனக்கு பார்க்க வேண்டும்”என்றான். “அப்படியானால் ஒன்று செய்யுங்கள் நீங்கள் நான் சொல்வது படி என்னை இந்த தொழுமரத்தில் பூட்டுங்கள் உங்களுடைய ஆசை பூர்த்தியாகும்!’ என்றான் தலையாரி.
   “மாமா! உங்களை நான் பூட்டுவதா! வேண்டாம்!”என்று போலியாக மறுத்தான் திருடன். “பரவாயில்லை மாப்பிள்ளை! ரொம்ப நாள் கழித்து வந்த நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்! வருத்தப்படாமல் பூட்டுங்கள்” என்று தொழுமரத்தில்  கைகளையும் கால்களையும் நுழைத்தான் தலையாரி. திருடனும் இதுதான் சந்தர்ப்பம் என்று விளையாடுவது போல ஆப்பை நன்கு அடித்து பூட்டிவிட்டான். சாவியை எங்கோ இருட்டில் நழுவ விடுவது போல விட்டு விட்டான். மாமா சாவி கீழே இருட்டில் விழுந்து விட்டதே என்று தேடுவது போல பாசாங்கு செய்தான். சாவி கிடைக்கவில்லையே என்று போலியாக அழுதான்.
    அடடா! அழாதீர்கள் மாப்பிள்ளை! நீங்கள் வேண்டுமென்றா செய்தீர்கள்! திருடனை பிடிக்க வேண்டியிருக்கிறது! சீக்கிரம் வீட்டிற்கு போய் உளியும் சுத்தியும் எடுத்து வாருங்கள்! இதை பிளந்து வெளியேறிவிடலாம் என்று தலையாரி கூறினான். திருடனும் இதுதான் சமயம் என்று அரைத்திருடன் நேராக  தலையாரியின் வீட்டிற்கு ஓடி வந்தான். “அத்தே! அத்தே! மாமா ஏதோ குற்றம் செய்து விட்டதாக மகாராஜா தண்டித்து தொழுமரத்தில் மாட்டிவிட்டார். அபராதமாக உங்கள் நகை பணமெல்லாம் பறிமுதல் செய்வதற்கு அரசாங்க சேவகர்கள் வரப்போகிறார்கள். ஆகையால் உங்கள் வீட்டில் உள்ள பணம் நகைகள் எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி கொண்டுவாருங்கள்! மாமா அவற்றை என்னை பத்திரப்படுத்த சொன்னார்கள் என்று நம்பும் படி கூறவும். அவர்களும் கதிகலங்கிப் போய் வீட்டில் இருந்த நகை நட்டுக்கள் பணங்களை ஒரு பையில் போட்டு மூட்டையாக கட்டி திருடனிம் கொடுத்தனர்.
   திருடன் அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு இவற்றை வேறோரு இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு வருகிறேன் என்று  சொல்லிவிட்டு கதவை தாழிட்டுக்  கொள்ளுங்கள் யார் வந்து தட்டினாலும் திறக்காதீர்கள் என்று எச்சரிக்கை செய்து விட்டு அங்கிருந்து தன்னுடைய ஊருக்கு கிளம்பி விட்டான். விடியலில் பெரிய மூட்டையில் நகை பணங்களுடன் வந்து நிற்கும் அரைத்திருடனை கண்டு பக்காத்திருடன் மகிழ்ந்து “பலே திருடா! நீ என்பேரை காப்பாற்றி விட்டாய்” என்று பாராட்டினான்.
    அதேசமயம் குந்தள நகரத்தில் பொழுது விடியலில் தலையாரியை தொழுமரத்தில் கட்டிவிட்டு அவரது வீட்டிலேயே திருடிச் சென்ற திருடனைப் பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.வீரர்கள் தலையாரியை அரசன் முன் கொண்டு நிறுத்தினர். “திருடனை பிடிக்கவேண்டிய நீ திருடனாக ஏன் தொழுமரத்தில் தொங்கினாய்?” என்று அரசன் கேட்கவும், தலையாரியும் திருடன் என்று நான் அறியா வண்ணம் என்னுடைய மாப்பிள்ளை போல நடித்து என்னை தொழுமரத்தில் மாட்டிவிட்டு திருடிச் சென்றுவிட்டான் என்று சொல்லி அவன் பெரிய சாமார்த்தியக் காரன் அவனை யாரால் பிடிக்க முடியும் என்று வியந்து பாராட்டினான்.
மந்திரி அவனது பாராட்டைக் கண்டு எரிச்சல் பட்டு, “அடேய்! முட்டாள்! நீ முட்டாள் ஆனதால் திருடனை பிடிக்க முடியவில்லை! இன்றிரவு அவனை நானே முன் நின்று பிடிக்கப் போகிறேன் அப்படி செய்யாவிட்டால் நான் மந்திரியே அல்ல! “என்று சபதம் செய்தான்.
                                    வளரும்(2)
(என் பாட்டி சொன்ன செவிவழிக் கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
    

Comments

  1. அற்புதம்.. மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. பாட்டி சொன்ன கதையா? அதான் சூப்பரா இருக்கு..

    ReplyDelete
  2. பாகம் 3 எங்கே?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?