சரவணன் மீனாட்சி 3
சரவணன் மீனாட்சி 3
கோவிந்த ராஜ் ஏதோ சுவாரஸ்யமாக
கிசு கிசு போல சொல்ல சுவாரஸ்யம் என்னையும் பிடித்துக் கொண்டது. எனக்கும் இதே மாதிரி
ஒருவிசயம் தெரியும் என்றேன். என்னதுடா சொல்லுடா! சொல்லுடா என்றார்கள் நண்பர்கள்.
அது ரகசியம்டா! யாருகிட்டேயும் சொல்லமாட்டேன்னு
சொல்லி இருக்கேன்!
நாங்களும் யாருகிட்டேயும்
சொல்ல மாட்டோம்! சொல்லுடா!
உண்மையா சொல்ல மாட்டீங்களே!
சத்தியமா சொல்லமாட்டோம்
சொல்லுடா!
நான் மெல்ல சரவணன் மீனாட்சிக்கு எழுதிய காதல் கடிதம்
பற்றியும் அதை பார்த்தவுடன் மறைத்து வைத்துக் கொண்டதையும் பின்னர் அவளிடம் அதை கொடுக்க
உள்ளான் என்றும் விவரிக்க நண்பர்கள் விழிகள் அகல விரிந்தது. இவ்ளோ விசயம் நடக்குதா உன் க்ளாஸ்ல? சரவணன் பெரிய
ஆளுதான்! வாத்யார் பொண்ணையே மடக்கிட்டானா? என்று கேட்டனர்.
டேய்! அவன் லெட்டர்தான் எழுதி இருக்கான்! இன்னும்
மீனாட்சி கிட்ட கொடுக்கலை!
இருந்துட்டு போவுது! எப்படியும்
கொடுப்பான் இல்லை!
கொடுத்தா அந்த பொண்ணு வாங்கினு சம்மதம் சொல்லனும் இல்லே!
அதெல்லாம் சொல்லிரும்!
சொல்லாதுடா! அது நல்ல பொண்ணு
படிப்பில மட்டும்தான் கவனம் செலுத்தும்!
ஆனா சரவணனை கவர்ந்திருச்சே
இந்த காந்தம்!
சரவணன் என்ன இரும்பா கவர அடப் போங்கடா! இப்படி விவாதம் பண்ணிக் கொண்டே
ஊர் சேர்ந்தோம்.
ஒரு நாளைந்து தினங்கள் கடந்திருக்கும். இந்த விசயத்தையே
மறந்து விட்டேன் நான். மீனாட்சி ஒருவாரம் பள்ளிக்கு வராமல் இருந்து அன்றுதான் பள்ளிக்கு
வந்திருந்தாள். எல்லோரும் அவளையே மொய்த்தனர். என்ன உடம்புக்கு? ஏன் பள்ளிக்கு வரவில்லை!
என்று கேள்விகள் ஆயிரம் அவளை நோக்கி விழுந்தன.
எல்லாவற்றிர்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அடிக்கடி இருமல் வேறு. இன்னும் முழுவதுமாக குணமடைய வில்லையோ? வருத்தமாக இருந்தது எனக்கு.
அன்று மதிய உணவு இடைவேளை நண்பர்களுடன் உண்டு விட்டு டிபன் பாக்ஸை பையில் வைக்க வகுப்பறையில்
மீனாட்சி மட்டும் இருந்தாள்.
சுரேஷ் உங்கூட பேசனும்!
என்ன மீனாட்சி! சொல்லு!
இங்க வாணாம்! மரத்தடிக்கு
போவோம்.
வகுப்பறையின் பின்புறம்
புங்க மரங்கள் சூழ்ந்திருக்கும் மவுனமாக அவளை பின் தொடர்ந்தேன்.மதிய உச்சி வெயிலிலும்
புங்க மரநிழல் குளிர்ச்சியைத் தர காற்று இதமாக வீசிக் கொண்டு இருந்தது.
என்ன மீனாட்சி? என்னமோ கேட்கணும்னு சொன்னியே?
மீனாட்சியின் கண்கள் கலங்கின.
அழுகை வெடிப்பது போன்ற குரலில் சுரேஷ்! நான் சரவணனை வெச்சிகிட்டு இருக்கேன்னு சொன்னியாமே
பசங்க கிட்ட?
யாரோ நிற்க வைத்து கன்னத்தில் பளார் என்று அறைந்தார்
போன்ற ஓர் உணர்வு! அவளின் முகத்தை பார்க்க கூட முடியவில்லை! தலைகுனிந்தபடி, இல்ல மீனாட்சி!
நான் அப்படி எதுவும் சொல்லலை!
பசங்க எல்லாம் சொல்றாங்க நீதான் அப்படி சொன்னேன்னு!
என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னை கேக்கறாங்க! ச்சே! நீ இப்படி பண்ணுவேன்னு.. அவளால்
அதற்குமேல் பேசமுடியவில்லை!
அதற்குள் அந்த பக்கம் யாரோ வர கண்ணை துடைத்துக்
கொண்டு விறுவிறுவென வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டாள். என்னுடைய விளக்கத்தையோ சமாதானத்தையோ
அவள் கேட்கவில்லை!
என் முகம் பேயறைந்தார்போல ஆகிவிட்டது! என்னடா இப்படி ஆகிவிட்டது! விளையாட்டாய் ஏதோ சொல்ல
போக இப்படி ஆகிவிட்டதே! ஒரு நல்ல தோழியை மனம்
நோகடித்து விட்டோமே என்று வருந்தினேன். அன்று பாதியிலேயே உடல் நலக் குறைவால் மீனாட்சி
வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
அதற்கப்புறம் அவள் பள்ளிக்கு திரும்பவே இல்லை!
ஆம் அடுத்தநாள் காலை பள்ளிக்குச் சென்றபோது மீனாட்சி இறந்துவிட்டாள் என்ற அதிர்ச்சி
செய்தி கிடைத்தது. மாணவர்கள் அனைவர் முகங்களிலும் கண்ணீர் வேதனை!
மீனாட்சிக்கு
ப்ளட்கேன்சர்! அதனால்தான் அடிக்கடி பள்ளிக்கு வராமல் சிகிச்சைபெற்று வந்திருக்கிறாள்.
அது முற்றி காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.மருத்துவமனையில் மீனாட்சி இறந்துவிட்டாள்.மதியம்
உடல் கொண்டுவரப்படும் என்று தகவல் கிடைத்தது.
பள்ளி ப்ரெயரில் இரங்கல் தெரிவித்து பள்ளிக்கு
அன்று விடுமுறை விடப்பட்டது. மாணவர்கள் கூட்டம் கூட்டமாக மீனாட்சி வீட்டிற்கு சென்று
இரங்கல் செய்தனர். ஆசிரியர்களும் சென்றனர். நான் அவ்வழியே சென்று எட்டிப்பார்த்தேன்!
மலர் மாலைகளுக்கு நடுவே மீனாட்சி உறங்கிக் கொண்டிருந்தாள். அருகே செல்ல வில்லை! திரும்பி
விட்டேன்.
அடுத்த நாள் மீனாட்சியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அதற்கும் நிறைய பேர் சென்றார்கள். ஆனால் நாங்கள் மூவரும் (சரவணன், வேல்முருகன், நான்)
தகனத்திற்கு சென்றுவந்த விளையாட்டு ஆசிரியர் எங்களை அழைத்தார்.
மவுனமாக சென்று நின்றோம்! நீங்கள்லாம் மீனாட்சியோட
ப்ரெண்ட்தானே!
தலையசைத்தோம்! சாவுக்கு போனீங்களா?
இல்லை! தலையசைத்தோம்!
போங்கடா! நீங்கள்லாம் ஒரு ப்ரெண்ட்ஸா! போங்க இனிமே
எப்ப அவளை பாக்க போறீங்க? உண்மையா ப்ரெண்ட்ஸா இருந்தா போய் அஞ்சலி செய்து இருக்கணும்.
அப்புறம் எதுக்கு அவ ப்ரெண்ட்ஸ்னு சொல்லிகிட்டு திரியறீங்க? என்று வெளுத்து வாங்கினார்.
மவுனமாக நின்றிருந்தோம்! பதில் இருந்தது! மீனாட்சி
இறந்திருந்தாலும் அவள் முகத்தில் எப்படி விழிப்பேன் நான்! அதை சொல்ல முடியவில்லை! மீனாட்சி கேட்ட கேள்வி இன்னும் என் மனதில் உறுத்திக்
கொண்டு இருக்கிறது!
டிஸ்கி} எனது அடுத்த அனுபவ பதிவு “சலங்கை வலி!” விரைவில்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
முடிவில் இப்படி ஆகி விட்டதே... மீனாட்சி கேட்ட கேள்வி மனதில் வந்து கொண்டே இருக்கிறது...
ReplyDeleteநன்றி சார்! மீனாட்சியின் மறைவும் அவளின் கேள்வியும் உறுத்தியதால்தான் இந்த பதிவு!
Deleteஅடுத்ததும் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிஐயா!
Deleteமுடிவு கனத்து போனது. தெரியாமல் மற்றவர் மனதை நோகடித்துவிட்டாலும் அந்த வடு அவ்வப்போது நினைவுறுத்தும்.
ReplyDeleteஉண்மைதான்! அதனால்தான் பாரம் கொஞ்சம் தீர பதிவிட்டேன்! நன்றி!
Deleteநான் வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சியில் காணும்
ReplyDeleteஒரே நாடகம் இதுமட்டும் தான்...
இந்த வாரம் முழுதும் ஒரே சோகமயமாக இருந்தது
என்று சொன்னார்கள்...
நல்ல விமர்சனம் நண்பரே...
வருகைக்கு நன்றி! ஆனால் பதிவை படிக்காமல் கமெண்ட் இட்டுள்ளது தெரிகிறது! படித்து கருத்திட்டால் மகிழ்ச்சி அடைவேன்! நன்றி!
Deleteஎன்ன சார் , முடிவு இப்படி ஆகி விட்டதே ?
ReplyDeleteஇப்போது உங்கள் பாரம் குறைந்தால் சரி !