நான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்!
நான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்!
முழுத்திருடன் கதை!
தன்னுடைய தம்பிகள் மூவரும் தங்களுடைய சாமர்த்தியமான திருட்டினால் தந்தையிடம்
பேர் வாங்கிவிட்ட நிலையில் தன்னுடைய பெயரை நிலை நாட்ட முழுத்திருடன் குந்தள நகரம் வந்தான்.
அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்களை அணுகினான். அடேய்! தம்பிகளா! இந்த
ஊரில் என்னடா விசேஷம்? என்று வினவவும் செய்தான்.
மாடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களும்,
அண்ணே! இந்த ஊரில் மூன்று நாட்களாக திருடன் ஒருவன் புகுந்து செட்டியாரையும் தலையாரியையும்
மந்திரியையும் ஏமாற்றி பொருட்களை கொள்ளையடித்து போய் விட்டான். எனவே இன்று மன்னரே அந்த
திருடனை பிடிப்பதாக் சபதம் செய்து இருக்கிறார். என்று விவரம் சொன்னார்கள்.
இதைக்கேட்ட முழுத்திருடன் மனதிற்குள்
சிரித்துக் கொண்டான். குந்தள நகரம் சென்று பாக்கு புகையிலை உப்பு இனிப்பு போன்ற சாமான்களை
வாங்கி ஒரு பெரிய கோணிப்பையில் வைத்து மூட்டையாக கட்டிக்கொண்டு சிறிய கூண்டு விளக்கு
ஒன்றும் கொஞ்சம் விளக்கெண்ணையும் ஓலைப்பாய்கள் இரண்டும் வாங்கிக் கொண்டு வியாபாரி போல
மாறுவேடமணிந்து தலைநகரின் எல்லையில் ஓர் ஒதுக்குப்புறமானபாதையில் விளக்கேற்றிவைத்துக்
கொண்டு ஓலைப்பாய்களை விரித்து வெற்றிலை பாக்கு புகையிலை முதலானவைகளை பரப்பி வைத்து
வியாபாரி போல அமர்ந்து இருந்தான்.
திருடனை பிடிப்பதற்காக கங்கணம் பூண்ட கோபால வர்ம
மகாராஜா குதிரை மீது ஏறி முப்பது தலையாரிகளுடன் நகரம் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு
நகருக்குள் வெளியூர் திருடன் நுழைய முயலும் போதே பிடித்துவிட வேண்டும் என்று எண்ணியவனாக
எல்லைப் புறத்தே அடைந்தான். ஒருபுறம் தன்னந்தனியனாக சிறுவெளிச்சம் வருவதை கண்டு முழுத்திருடன்
கடை இருக்கும் இடத்தை அடைந்தான்.
கடைக்காரனைப் பார்த்து, யாரடா நீ?
இந்த இரவு நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய்? என்று அதட்டலாக கேட்டான் மன்னன். திருடனான
வியாபாரியும் பயந்தவன் போல நடித்து, மன்னா! இந்த வழியாக இரவு நேரத்தில் திருடர்கள்
வந்து இரவு நேரத்தில் நகரத்தில் கொள்ளையடித்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் எல்லாம்
என் கடையில்தான் வெற்றிலை பாக்கு முதலிய வாங்கி செல்வார்கள். ஜகஜ்ஜால திருடன் ஒருவன்
இரண்டு நாட்களாய் என்னிடம் நிறைய திண்பண்டங்களையும் வெற்றிலை பாக்கு முதலியன வாங்கிச்
சென்றான். எனக்கு நல்ல வியாபாரம்! அதனால்தான் இங்கு கடை விரித்து இந்த இரவில் காத்திருக்கிறேன்!
என்று சொன்னான்.
உடனே அரசன், இந்த வியாபாரியின்
உதவியால் திருடனை பிடித்துவிடலாம் என்று எண்ணி, ஏய்! கடைக்காரா! உன் உதவி எனக்கு தேவை!
இரண்டு நாளாக தப்பிச் சென்ற திருடனை பிடிப்பதாக சபதம் செய்துள்ளேன். நீ உதவி புரிந்தால்
உனக்கு நிறைய பொருள்களை பரிசாக தருகிறேன். திருடன் வந்தால் எனக்கு தெரிவித்தால் உடனே
அவனை பிடித்து விடுகிறேன்! என்றான்.
வியாபாரியாக நடித்த திருடனும் மன்னா!
தாங்களும் பரிவாரங்களும் இங்கே இப்படி நின்றிருந்தால் திருடன் எப்படி வருவான்? வேற்றாள்கள்
நிறைய இருந்தால் திருடன் இங்கே வர மாட்டான். அதனால் உங்கள் பரிவாரங்களை எல்லாம் வேறு
வழிகளில் திருப்பி விடுங்கள். நீங்கள் மட்டும் தனித்து என்னுடன் இருந்தால் திருடனை
நான் அடையாளம் காட்டுகிறேன்! நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.
அரசனும் பரிவாரங்களை எல்லாம் திருப்பி
வேறு இடங்களில் காவல் புரிய அனுப்பி விட்டு வியாபாரியுடன் அமர்ந்தான். இப்போது வியாபாரி,
மன்னா! தாங்கள் இப்படி சர்வ அலங்காரமான ஆபரணங்களுடன் என்னுடன் இருந்தால் மன்னன் என்று
திருடன் அறிந்து கொண்டு வராமல் போய்விடுவான். எனவே நீங்கள் உங்கள் அணிகலன்களை எல்லாம்
கழற்றி மூட்டையாக கட்டி என்னிடம் கொடுங்கள் சாதாரண உடையில் இருந்தால் தான் திருடனுக்கு
சந்தேகம் வராது. என்றான். மன்னனும் அவனது கூற்றில் உண்மை இருப்பதை உணர்ந்து ஆபரணங்களை
கழற்றி மூட்டை கட்டி வியாபாரியிடம் கொடுத்துவிட்டு சாதாரண உடையில் அமர்ந்தான். சிறிது
நேரம் சென்றது. திருடன் வரவில்லை! என்னடா! திருடன் வரவில்லையே! என்று மன்னன் கேட்க,
புதியவர்கள் என்னருகில் இருப்பதை அறிந்து அந்த திருடன் வரவில்லையோ என்னமோ? ஒன்று செய்யலாம்
நீங்கள் இந்த கோணிப்பையில் புகுந்து கொள்ளுங்கள் நான் மூட்டையாக கட்டி வைத்து விடுகிறேன்.ஏதோ
சாக்குப்பை என்றெண்ணி திருடன் வருவான். அப்போது நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள்! என்றான்.
நல்ல யோசனை என்று முட்டாள் மகாராஜாவும்
கோணிப்பைக்குள் புகுந்து கொள்ள வியாபாரி பையை இறுக கட்டினான். அதன் மீது ஒரு தண்ணீர்
தொட்டியை கவிழ்த்து வைத்து விட்டு விளக்கை அணைத்துவிட்டு அரசனுடைய நகைகள் ஆடைகளை எல்லாம்
மூட்டை கட்டிக் கொண்டு கம்பி நீட்டிவிட்டான்.
அரசனுடைய வீரர்கள் வியாபாரியின்
இடம் இருளாக இருப்பதை அறிந்து அங்கு வந்து திருடன் அகப்பட்டான் என தேடினர் இருட்டில்
தண்ணீர் தொட்டியை உருட்ட உள்ளே கோணிப்பை மூட்டை இருப்பதை கண்டு அரசன் தான் திருடனை
பிடித்து தப்பிக்காமல் இருக்க தண்ணீர் தொட்டியை கவிழ்த்து வைத்துவிட்டு தங்களை அழைக்க
வந்திருக்க வேண்டும் என்று அந்த மூட்டையை அவிழ்க்காமலே நையப்புடைத்தனர். உள்ளே ஐயோ!
அம்மா! என்று அடிதாங்காமல் மன்னன் கத்தவும் மூட்டையை அவிழ்த்தனர்.
உடலெங்கு வலியும் வேதனையுமாக வெளியே
வந்த மன்னன், ஏமாந்து போனோம்! வியாபாரிதான் திருடன்! என்னையே ஏமாற்றி திருடிச்சென்றுவிட்டான்.
உண்மையிலேயே அவன் கில்லாடிதான்! என்றுசொல்லிவிட்டு தலை குனிந்தவாறு அரண்மனை திரும்பினான்.
முழுத்திருடன் தந்தையிடம் நடந்ததை
விளக்கி மன்னரிடம் திருடிய பொருட்களை கொடுத்தான். அட களவாணிப் பய மகனே! நீ பலே திருடன்
என்று நிருபித்துவிட்டாய் என்று அவனும் தன் மகனை பாராட்டி ஆரத்தழுவி கொண்டான்.
முற்றும்.
(என் பாட்டி சொன்ன செவி வழி கதை)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
கதை அருமை
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
கதை நல்லா தான் இருக்கு.பகிர்வுக்கு நன்றி
ReplyDeletenalla sirippaaka irunthathu...
ReplyDeletepakirvukku nantri!