சங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்!


சங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்!

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்!

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் வேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

மாசிமாதம் தேய்பிறை  (கிருஷ்ணபட்சம்)சதுர்த்தி தினம் மஹா சங்கட ஹர சதுர்த்தியாக அனுசரிக்கப்படுகிறது.முழுமுதல் கடவுள் வேழமுகனாம் விநாயகக் கடவுளுக்கு மிகவும் உகந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம். இது மாதம் தோறும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. வருடத்தில் இரண்டு முறை ஆவணி மற்றும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தி தினம் மஹா சங்கட ஹர சதுர்த்தியாக விசேஷமாக அனுஷ்டிக்க படுகிறது.
  விக்கினங்கள் தீர்க்கும் கடவுள் விநாயகர். அவரைக் குறித்து விரதம் இருந்து வழிபட்டு உபவாசத்துடன் நாள் முழுவதும் இருந்து அன்றைய தினம் இரவு சந்திரனை தரிசித்து வணங்கி பின்னர் உணவு அருந்த வேண்டும்.
  இந்த விரதம் மாசி மாத சங்கட ஹர சதுர்த்தியில் துவங்கி அடுத்த வருடம் மாசி மாதம் சங்கட சதுர்த்தி வரை தொடர்ந்து ஒரு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதால் காரியசித்தி, விக்கினங்கள் அகலுதல், திருமணவரம், புத்திரபாக்கியம், நினைத்த காரியம் நிறைவேறுதல், ஆகியன கைகூடும்.
       விரத தினத்தன்று காலையில் நீராடி அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு உபவாசத்தை துவங்க வேண்டும் அன்று முழுவதும் ஆகாரம் அருந்த கூடாது. பின்னர் மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்துகொண்டு பின்னர் வீடு வந்து சந்திரன் உதயமானதும் வணங்கி விட்டு வீட்டு பூஜையறையில் விநாயகப் பெருமானுக்கு மலர் அர்ப்பணம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  பின்னர் முழு உணவு அருந்தாமல் சிறிதளவு சிற்றுண்டி அல்லது பால் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். விரத தினத்தில் காபி, டீ, பாக்குபோடுதல் போன்றவை கூடாது. விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ளவேண்டும்.
  ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் தம் வீட்டு பூஜையறையில் உள்ள விநாயகரை வழிபட்டு விரதம் தொடங்கி முடிக்கலாம். இவ்வாறு மாசி மாத சதுர்த்தியில் தொடங்கி அடுத்த மாசி மாத சதுர்த்தி வரை இந்த விரதம் மேற்கொள்ளவேண்டும்.
   முன்னொரு சமயம் பக்தர்களால் நிவேதிக்கப்பட்ட கொழுக்கட்டைகளை தன் வயிற்றில் நிரப்பிக் கொண்டு விநாயகர் தம் மூஞ்சூறு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விநாயகரின் பாரம் தாங்க முடியாமல் மூஞ்சூறு தடுமாறிக் கொண்டு இருந்தது. அது மிகவும் நெடுந்தொலைவு பயணித்து இருந்தமையால் களைப்பும் அடைந்து இருந்தது.
   அச்சமயம் நாகப்பாம்பு ஒன்று அவ்வழியே குறுக்கிட்டது. அதைக்கண்டு மூஞ்சூறு பயந்து நடுங்கி தாறுமாறாக ஓடத்துவங்கியது. விநாயகரையும் கீழே தள்ளிவிட்டது. இந்த அமளியில் விநாயகரின் தொந்தி வெடித்து கொழுக்கட்டைகள் சிதறின. ஆவேசமடைந்த விநாயகர் நாகப்பாம்பினை பிடித்து தன் வயிற்றினை சுற்றி கட்டிக் கொண்டார்.
   இந்த காட்சிகளை கண்டு ஆகாயத்தில் சந்திரன் பரிகசித்து சிரித்தான். வெகுண்ட விநாயகர் தன் தந்தம் ஒன்றை ஒடித்து சந்திரனை நோக்கி எறிந்தார். அவ்வளவுதான் சந்திரன் ஒளி மங்கி போனான். உலகம் இருண்டது. தேவர்கள் விநாயகரை சரண் புகுந்து சந்திரனை மன்னித்து அருளும் படி கூறினார்கள். விநாயகரும் சாந்தமடைந்து  பதினைந்து நாட்கள் ஒளி மங்கி போகவும் பதினைந்து நாட்கள் ஒளி அதிகரிக்கவும் அருளினார். தன்னுடைய சதுர்த்தி தினத்தில் சந்திரனை வழிபடுவோருக்கு நன்மைகள் கிடைக்கவும் அருள் செய்தார். இதன் அடிப்படையிலேயே சதுர்த்தி தினத்தன்று சந்திர தரிசனம் செய்யும் வழக்கம் உண்டாயிற்று.
   விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை! விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்!
   சங்கட ஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. விரதம் பற்றிய விரிவான தகவல் நன்று.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!