திமுக விலகல்! ஒரு பார்வை!


திமுக விலகல்! ஒரு பார்வை!

மத்திய அரசில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு அநீதி நடப்பதாக கூறி விலகியிருக்கிறது திமுக. இதெல்லாம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்! நாடகம் என்று ஆளுங்கட்சி விமர்சிக்கிறது. திமுகவின் கூட்டணியான விடுதலை சிறுத்தைகளும் மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டது.
   இத்தனை காலம் இலங்கை தமிழர்கள் வேதனைப்படவில்லையா? துன்பப்படவில்லையா? மிக நீண்ட காலமாகவே இருந்துவருகிறது இலங்கை தமிழர் பிரச்சனை! இந்த பிரச்சனையை இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் ஒரு வாழ்வாதாரா பிரச்சனையாகவே கருதவில்லை! அரசியல் லாபத்தோடே நோக்கிவருகின்றன. இது அன்றைய முதல்வர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் காலந்தொட்டே இருந்து வரும் அரசியல்.
    மத்தியில் ஆட்சியைப் பிடிக்க அவ்வப் போது இலங்கை தமிழர்களுக்கு தாங்கள்தான் வழிகாட்டி என்பது போல தமிழக கட்சிகளுக்குள் போட்டி நடக்கும். ஆட்சி ஏறியதும் காட்சி மாறும். ஓட்டுக்காகவே இந்த அரசியல் நடந்து வருகிறதே அன்றி ஒருபோதும் அடுத்த தீவீல் வாழும் அப்பாவி தமிழர்களை கரையேற்ற எந்த முயற்சியும் இந்த கட்சிகளால் நடந்தது கிடையாது. சொல்லப்போனால் இவர்களது தவறான சில கொள்கைகளால் இலங்கையில் அப்பாவித்தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதே உண்மை.
    மத்தியில்  முதலில் பி.ஜே.பி பின்பு காங்கிரஸ் என்று பதிமுன்று ஆண்டுகாலம் வலிமையாக நல்ல இலாகாக்களை பெற்று கோலொச்சி வந்தது திமுக. இந்த பதிமூன்று ஆண்டுகளில் தமிழர்களுக்கு என ஒரு துறும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை! என்பதே உண்மை! ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதே அதன் கொள்கையாக உள்ளது.
   இப்போதும் அது தன் ஆதரவை விலக்கிக் கொண்டு ஆட்சி பீடத்தை விட்டு விலகியுள்ளது தமிழர்களுக்கு என்று நீங்கள் எண்ணினால் அது தவறு! அப்படி மனசாட்சி உள்ள ஒரு தமிழனும் ஏன் திமுக காரன் கூட எண்ண மாட்டான். பாலச்சந்திரன் படுகொலை குறித்து சேனல் 4 வெளியிட்ட செய்திகளால் தமிழகமே கொந்தளித்து இலங்கைக்கு எதிராக கிளம்பும் வேளையில் இனியும் ஆட்சியில் இருந்தால் அவ்வளவுதான் தமிழர்கள் நம்மை தூக்கி எறிந்து விடுவார்கள் என்று  வாவா! போபோ! என ஒரு அரசியல் நாடகம் நடத்தி விலகியுள்ளது திமுக.
  இந்த விலகல் அன்றே இலங்கை இறுதிப்போர் நடக்கும் சமயம் நடந்திருந்தால் பாராட்டி இருக்கலாம்! அன்றோ ஓர் உண்ணாவிரத நாடகம் ஆடி போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று பிரணாப்பின் சப்பைக் கட்டுக்களுக்கு செவி சாய்த்து ஒட்டுவார் ஒட்டியாக இறுக அதிகார பீடத்தில் ஒட்டிக் கொண்டது திமுக.
    முத்துக்குமரன் தீக்குளிப்பையும் கொச்சைப்படுத்தியது! காங்கிரஸ் அரசுக்கு தாளம் போட்டது. எல்லாம் எதற்காக தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகத்தான். இன்று மதவாத கட்சி என்று பி ஜேபியை தூஷிக்கும் திமுக அன்று பதவி கொடுத்தார்கள் என்ற காரணத்தினால் ஆதரித்தது. செல்வாக்கான இலாகாக்களை தன் வசமாக்கி செல்வ வளம் அனுபவித்தது. மாறன் உடல் நலம் குறைந்து இறக்கும் வரை அவரது மந்திரி பதவி நீடித்தது. அந்த நன்றி இல்லாமல் அடுத்த தேர்தலில் காங்கிரஸோடு கூட்டணி அமைத்து  செல்வாக்கை நீடித்துக் கொண்டது. காங்கிரசிடம் ஒன்பது ஆண்டு நட்புறவு இப்போது கசந்துவிட்டது திமுகவிற்கு.
  ஏன்? காங்கிரஸ் அடுத்த தேர்தலில் வெற்றிபெறாது என்பதுதான்! இப்போது காங்கிரஸ் நீரற்ற குளம்! பழமற்ற மரம்! இதனிடம் பயனில்லை! எனவே இலங்கைப்பிரச்சனயை சாக்காக வைத்து வெளியே வந்துள்ளது. இதை பாஜகவும் வெட்கமின்றி வரவேற்றுள்ளது.
 தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறலாம்! மதவாத கட்சி பி ஜேபி அப்போது மங்களகரமான கட்சியாக கலைஞருக்குத் தோன்றலாம்! ஆதரிக்கலாம்! ஒருவேளை ஜெயித்தால் ஆட்சியில் பலமாக அமரலாம் என்பதுதான் கலைஞரின் மனக் கணக்கு.
  அதற்குத்தான் இந்த விலகல்! உண்மை இவ்வாறு இருக்க இதற்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து மகிழ்ந்தார்களாம்!
    இதனாலெல்லாம் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை! தமிழக கட்சிகள் அரசியலை விட்டொழித்து  தமிழர்களோடு தமிழர்களாய் கட்சி வேறுபாடின்றி ஒன்றுபடின்  தீர்வு கிடைக்கலாம்! ஆனால் இதெல்லாம் வெறும் பகல் கனவே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சுரேஷ் கலைஞரின் குள்ளநரித்தனம் உலகம் அறிந்ததே. அரசியலில் இதெல்லாம் சகஜம்.

    ReplyDelete
  2. எல்லாமே வெறும் நாடகம்தானே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2