பரதேசி! மனம் கனக்க வைத்தது!


பரதேசி! மனம் கனக்க வைத்தது!

இன்று வண்டி சர்வீஸ் விட பொன்னேரி செல்வதென முடிவு செய்ததுமே பரதேசி பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்! பொன்னேரியில்மூன்று தியேட்டர்கள் கண்டிப்பாக எதிலாவது ஒன்றில் பரதேசி ஓடிக் கொண்டிருக்கும் பார்த்து விடுவோம் என்று எண்ணிக் கொண்டே சர்வீஸ் செண்டருக்கு வண்டியை கொண்டு சென்றபோது மணி பத்துதான் ஆகியிருந்தது. அங்கு வண்டியை விட்டு கிளம்பும் போது பத்து பதினைந்துதான் அதனால் அங்கிருந்து எல்.ஐ.சி அலுவலகம் சென்று ட்யு கட்டிவிட்டு  ஒரு கரும்புச் சாறு குடித்துவிட்டு வெற்றிவேல் முருகன் திரையரங்கம் வந்த போது பதினொன்று பதினைந்து.
    பெரிதாக கூட்டம் இல்லை! நல்ல படங்களுக்கு தமிழர்கள் கொடுக்கும் வரவேற்பு தெரிந்ததுதானே! எளிதாக கவுண்டரில் சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். தியேட்டர் கும்கி பார்த்த போது இருந்ததை விட மாறியிருந்தது. டிக்கெட்டை கணினியில் தட்டி கொடுத்தார்கள். கிழிந்து போன இருக்கைகளை மாற்றி புதிதாக அமைத்து இருந்தார்கள். ஏசி வசதி செய்யப்பட்டு இருந்தது. முதல்வகுப்பு கட்டணம் 50 ரூபாய். முன்பெல்லாம் டிக்கெட்டில்  மூன்று ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் போடப்பட்டு இருக்கும் வாங்குவது இருபது முப்பது என்றிருக்கும். ஆனால் இன்று டிக்கெட்டிலும் ஐம்பது என அச்சிடப்பட்டு இருந்தது. ஏசி வசதி செய்யப்பட்டு இருந்தும் ஏசி போடவில்லை இதெல்லாம் ஓவர் பட விமர்சனத்துக்கு வாய்யா! என்று சொல்வது காதில் விழுகிறது. தியேட்டரில் பாதி இருக்கைகள் காலிதான். வசதியான இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டேன்.
   டைட்டில் போட்டு இது 1939ல் நடந்த தேயிலைத்தோட்ட கொத்தடிமைகள் பற்றிய கதை என்ற பாலாவின் ஸ்லைடோடு கதை வேகம் எடுக்கிறது. சூலூர் கிராமம் அதை சுற்றிவரும் கேமரா அழகு. அருமையான ஒரு சிறிய அந்த கால கிராமத்தை சிறப்பாக காட்டுகிறது காமிரா. அதர்வாவின் அறிமுகம் அசத்தல். அவரது ஆத்தாவாக வரும் கிழவி சிறப்பான தேர்வு.
      முதல் சில காட்சிகளில் அதர்வா பேசுவது சரியாக புரியவில்லை! அது தியேட்டர் கோளாறா இல்லை பேசியது அப்படித்தானோ தெரியவில்லை! அதர்வாவை கிண்டல் செய்து காதலிக்கும் அங்கம்மாவாக வேதிகா! வெள்ளைப் பெண்ணுக்கு கறுப்பு சாயம் பூசியிருக்கிறார்கள். விழியால் பேசுகிறார் வேதிகாவின் தோழியாக வந்து போகும் பெண். கங்காளானாக வரும் ஜெர்ரியும் சிறப்பாக நடித்துள்ளார்.
     தன்ஷிகா, கம்பவுண்டர் குருஸ், என பாத்திரப்படைப்புகள் ஒவ்வொன்றும் அசத்தல். இடைவேளைக்கு பின் படம் சூடு பிடித்தாலும்  தேயிலை தோட்டத்தின் கொத்தடிமை காட்சிகளும், மூன்று முறை காட்டப்படும் கணக்கு பார்க்கும் காட்சிகளும் ஒரு சலிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் மனதில் ஓர் அழுத்தமான வேதனையை பதிவு செய்து போகின்றன தேயிலைத்தோட்டத்து காட்சிகள்.
     டாக்டராக வரும் பரிசுத்தம் தனது மதத்தை பரப்புவதில் பரிசுத்தமாக இருக்கிறார். அவருக்கு வெள்ளைக் கார பெண்ணை ஜோடியாக போட்டு ஒரு குத்துப் பாட்டு தேவையில்லாமல் இடைச்செருகப்பட்டுள்ளது. கிறித்தவர்களில் இதுமாதிரி சிலர் இருந்தாலும் ஒரு நோயுள்ள கிராமத்தை சீர் செய்ய வரும் டாக்டர்கள் இப்படி நடந்து கொள்ள வாய்ப்பில்லை! இந்த பாத்திரம் ஒரு கிராமத்தில் தங்கி இருந்தால் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது.
  நடிப்பில் வேதிகாவை தன்ஷிகா முந்துவது பலரும் சொல்வது போல உண்மைதான். அதர்வாவிற்கு இதுஒரு திருப்புமுனை தந்த படமாக இருக்கும். நன்றாக நடித்துள்ளார். நாஞ்சில் நாடனின் வசனங்கள் பளிச்சென்று இருக்கின்றன.இத்தனை சிறப்புக்கள் இருந்தும் இந்த படத்திற்கு இசைதான் பெரிய குறை. ஜிவி பிரகாஷின் இசை சுத்தமாக படத்தோடு ஒன்றவில்லை! பாடல்களும் சுமார் ரகம்தான்! பின்னனி இசையில் சுத்தமாய் கோட்டை விட்டிருக்கிறார் இசையமைப்பாளர்.
  ஆரம்பத்தில் வரும் கல்யாண காட்சிகள் கொட்டாங்குச்சியில் தண்ணீர்! சுரை குடுக்கையில் கள், கோணிப்பையிலான சட்டை என்று அந்த காலத்தை கண்முன்னே கொண்டு வந்த இயக்குனர் பெண்களுக்கான அந்த கால ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டுள்ளார். சேலை தாவணிகள் சில்க் பாலியஸ்டர் பூப்போட்டதாக காட்டப்படுகிறது. வறுமையில் வாடும் ஏழை பெண்கள் இதை அணிந்திருக்க வாய்ப்பு இல்லை!
    இடைவேளைக்கு முன்பு ஆரம்பிக்கும் சோகம் படம் முடியும் மட்டும் தீரவில்லை! படத்தில் தேயிலைத்தோட்டத்தில் நோயில் ஓவ்வொருவராக அடிமையாகவே சாக இறுதியில் அதர்வா காதலித்த வேதிகாவும் அங்கே அடிமையாக வந்து சேர இந்த நரக குழியில் நீயும் விழுந்துட்டியா? என்ற அதர்வாவின் கேள்வியோடு படம் முடிகிறது!  
   சில குறைகள் இருந்தாலும் நிறைவான படம் பரதேசி!  பாலாவின் படங்களில் இது நிச்சயம் முதலிடம் பெறும்!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்ல விமர்சனம் சுரேஷ்.

    ReplyDelete
  2. // நிறைவான படம் பரதேசி! // நிச்சயமாக சார்

    ReplyDelete
  3. மனதை ரணமாக்கிய படம்... நல்ல விமர்சனம்...

    ReplyDelete
  4. //இதெல்லாம் ஓவர் பட விமர்சனத்துக்கு வாய்யா! என்று சொல்வது காதில் விழுகிறது. //

    படத்தையும் பார்த்தாச்சு.. பட விமர்சனம் பல முறை படிச்சாச்சு. இருப்பினும் உங்க சர்வீஸ், தியேட்டர் பற்றி தகவல்கள் என சுவாரஸ்யத்தை கூடச் செய்தது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2