சரவணன் மீனாட்சி! 2


சரவணன் மீனாட்சி! 2

சரி! அப்ப நீயே லீடரா இருந்துடு! என்றார் தமிழாசிரியர்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது! இது என்னடா வம்பு? புகார் சொன்னால் நம்மையே லீடரா இருக்கச் சொல்கிறாரே என்று தயங்கினேன்.
   சார் அது வந்து..
  என்ன வந்து போயின்னு! அவனை குறை சொன்னே இல்லே! நீ இருந்து பாரு! நான் வகுப்புக்கு வந்து அறிவிச்சுடுறேன்.
    வேறுவழியே இல்லை!  லீடராக இருந்தாக வேண்டிய சூழல். மவுனமாக விடை பெற்றேன்.
  அன்று முதல் நான் வகுப்புத் தலைவன் ஆகி விட்டேன்! ஒரு நாள் முதல்வர் ஒருவார பிரதமர் மாதிரி நானும் ஒரே வாரத்தில் எனது பதவியை நானே துறந்து விட்டேன்.
    இந்த மாணவர்களை கட்டுப்படுத்துவது  என்பது எனக்கு சரிபட்டு வந்தாலும் வீண்பழி வந்து சேர்ந்தது ஒரு மாணவன் வடிவில். அவன் தனஞ்செயன். அன்று ஒரு ஆசிரியை பேசுபவர் தலையில் ஓங்கிக் குட்டுமாறு சொல்ல அவன் சதா பேசிக் கொண்டே இருக்க குட்டிக் கொண்டே இருந்தேன். ஏறக்குறைய பத்து பன்னிரண்டு குட்டு வாங்கி  கண்கலங்கி விட்டான். அடுத்த முறை அவனை நான் அவனை குட்ட முற்பட்ட போது டேய்! என்னையே குத்திக்கிட்டு இருக்கியே! அங்க பேசறவங்க எல்லாம் உன் கண்ணுல தெரியலையா? என்று பெண்கள் பக்கம் கை காட்டி கேட்டான்.
    பெண்களை பெயர் எழுதி வைத்திருந்தேன்! டீச்சர் சொன்னது அப்படித்தான்! அதை காண்பித்தேன்! அவங்களுக்கு ஒரு நியாயம்! எனக்கு ஒரு நியாயமா? நீ வேணும்னே என்னை குட்டிக்கிட்டே இருக்கே! என்று வெகுண்டான் அவன்.
  ஆசிரியை வந்ததும் புகார் சென்றது. டீச்சர் அவன் பேசிக் கொண்டே இருந்தான் அதான் குட்டினேன்! டீச்சர் எனக்கு சப்போர்ட் செய்ய வில்லை! அதிகமா பேசினா என்கிட்ட அனுப்பவேண்டியதுதானே! என கடிந்து கொண்டார்.
  என்னடா இது டீச்சர் அப்போது சொன்னது ஒன்று இப்போது சொல்வது ஒன்றாக இருக்கிறதே என்று வேதனையாக இருந்தது. அவனை சமாதானப்படுத்திவிட்டு பாடத்தை தொடர்ந்தார் டீச்சர். ஆனால் எனக்கு கவனம் பாடத்தில் செல்லவில்லை! அடுத்த வகுப்பில் தமிழாசிரியர் தசரதன் வந்ததும் ஐயா! எனக்கு லீடர் போஸ்ட் வேண்டாம் சரவணனே பாத்துக்கிடட்டும்! என்றேன். ஏன்? என்றார் ஆசிரியர்.
   இல்ல சார்! எனக்கு ஒத்து வரலை!
  என்னடா சரவணா? நீ என்ன சொல்றே? என்றார் ஆசிரியர்.
அவன் ஏற்கனவே லீடர் பதவி போனது குறித்து வருத்தத்தில் இருந்தவன் மீண்டும் பதவி கிடைக்கிறது என்றதும் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டான். அன்றுடன் எனது ஒருவார லீடர் பதவி முடிந்தது.
   இதனால் எங்கள் நட்பு ஒன்றும் பாதிக்கப்படவில்லை! அந்த காலத்தில் சிறுவர்களுக்கு நிறைய பத்திரிக்கைகள் வந்து கொண்டிருந்தன. அதில் முதல் முதலாக நான் படித்தது ராணி காமிக்ஸ் புத்தகத்தினைத் தான்.
   ஆறாம் வகுப்பு விடுமுறையின் போது ஊருக்கு வந்தபோது அப்பா பஞ்செட்டியில் உள்ள ஒரு தெரிந்தவர் வீட்டில் இருந்து பத்து பதினைந்து காமிக்ஸ் புத்தகங்கள் கொண்டு வந்து கொடுத்தார். ஜேம்ஸ்பாண்ட், மாயாவி, போன்றவர்களின் சாகஸ படக்கதைகள். அந்த வயதில் படிக்க மிகவும் சுவையாகவும் ஆசையாகவும் இருந்தது. ஒவ்வொரு புத்தகத்தையும் பலமுறை படித்து படித்து மகிழ்ந்தேன்.
   விடுமுறை கழிந்து மீண்டும் பள்ளிக்குச் சென்றதும் நான் படித்த கதைகளை சரவணனுக்கும் வேல்முருகனுக்கும் சொன்னேன். அவன் அந்த தலைப்புகளை வைத்துக் கொண்டு சினிமா படம் ஓட்டுகிறேன் என்று காகிதத்தில் கோட்டு சித்திரங்கள் வரைந்து ஒரு கதை சொல்வான். காமிக்ஸ் கதைக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்காது. ஆனால் தலைப்பு மட்டும் காமிக்ஸ் தலைப்பு. இதை கேட்க ஒரு கூட்டம் இருக்கும்.
    அவனை பார்த்து நானும் அப்படியே ஆரம்பித்தேன். எனக்கும் ஒரு கும்பல் சேர்ந்தது. இப்படியே போய்க் கொண்டு இருந்தது. ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் இல்லாத சமயம்  படிக்க சரவணன் பையில் இருந்து தமிழ் புத்தகத்தை உருவினேன். அப்படியே பக்கங்களை புரட்டி வருகையில் ஒரு பேப்பர் கீழே விழுந்தது.
   எடுத்தேன். அதிர்ந்தேன்.அதில் சரவணன் மீனாட்சிக்கு காதல் கடிதம் எழுதி இருந்தான். ஐ லவ் யூ என்று டிசைன் வேறு செய்து இருந்தான். நான் அந்த கடிதம் பார்ப்பதை அவன் பார்த்து விட்டான். டேய் டேய்! ப்ளீஸ்டா! யாருகிட்டேயும் சொல்லாதடா! ப்ளீஸ்டா! என்று என் கையை பிடித்து கெஞ்சினான்.
   சரி என்று தலையசைத்து விட்டேன். ஆனால் ஜீரணிக்க முடியவில்லை! இது என்னடா இது இவன் போகும் வழி சரியில்லையே என்று தோன்றியது.
   பின்னர் அவனிடம் மதிய இடைவேளையில் பேசினேன். டேய்!  சரவணா! என்னடா இது நீ செய்யறது சரி இல்லைடா! என்றேன்.
   எதுடா?
அதான் லவ் லெட்டர் எழுதி இருக்கியே அதுதான்!
   ஏன்? நான் அந்த பொண்ணை லவ் பண்ணக் கூடாதா?
நம்ம வயசு என்னடா? லவ் பண்ற வயசா இது? சினிமா பார்த்து கெட்டுப்போயிட்டடா சரவணா!
  இருந்துட்டு போகட்டும்! இதை இதோட விட்டுடு! யாருகிட்டேயும் சொல்லமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு!
     என்னால முடியாது! இது யாருக்காவது தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும்! அந்த பொண்ணுகிட்ட இதையெல்லாம் கொண்டு போய் கொடுக்காதே! இதோட விட்டுடு!
     முடியாதுடா! நான் கொடுக்கத்தான் போறேன்!
அப்ப  நான் உன் கூட சேரலை என்னை விட்டுடு!
 இப்படி எங்களுக்குள் கருத்து வேறுபாடு தோன்றியது. ஆனாலும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் சென்றது இந்த விசயம் யாருக்கும் தெரியவில்லை! அந்த பெண்ணும் உடல் நிலை சரியில்லை என்று பள்ளிக்கு வரவில்லை! இதனால் இவனும் கடிதம் கொடுக்கவில்லை!
  ஒரு இருபது நாட்கள் கடந்தது. அன்று மாலை நாங்கள் பள்ளிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். என்னுடன் இளங்கோ, கோவிந்தராஜ்,இன்னும் சிலர் இதில் கோவிந்தராஜ் எங்களைவிட மூத்தவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவன் கோவில் பட்டாச்சாரியார் வீட்டுப் பேரன். பெரும்பேட்டில் வீடு ஆசான பூதுரில் பெருமாள் கோவில் பூஜை செய்ய பள்ளி விட்டதும் எங்களுடன் கிளம்பி வருவான்.
  அப்படி வரும்போது ஏதாவது சுவாரஸ்யமாக சொல்லிவருவான். அன்று அப்படி அவன் ஏதோ சுவாரஸ்யமாக சொல்ல அந்த வயதில் எனக்கும்  ஒரு விசயம் தெரியும்! ரொம்ப ரகசியம்! யாருகிட்டேயும் சொல்லக் கூடாது! என்று  சரவணன் விசயத்தை சொல்லிவிட்டேன்! அது எவ்வளவு பெரிய தவறு என்று அப்புறம் தெரிந்தது.
  அப்புறம் என்ன ஆயிற்று என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சரவணன் மீனாட்சி காதல் கதை என்னவாயிற்று, எப்படியும் சீரியலைவிட விருவிருப்பா இருக்கு, தொடருங்கள், தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உடனே வந்து கருத்திட்டமைக்கு நன்றி! நாளைக்கு ஒரு ட்விஸ்ட் காத்திருக்கு! வர மறந்திடாதீங்க!

      Delete
  2. நாவல்களுக்கு சினிமா பாடல்களின் தலைப்பு போல்
    இப்போது சீரியல்களின் தலைப்பா ?
    ம்ம்.... நடக்கட்டும். பக்கத்து வீட்டு நெருப்பில்
    குளிர் காய்வது என்றால் நமக்கு அது தனி சுகம் தானே ...
    எனினும் கதை சுவாரஸ்யமாகச் செல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இது கதை இல்லேங்க நிஜம்! அடச்சே! இதிலேயும் டீ வி தலைப்பு வந்து மாட்டுது! என்ன செய்யறது?

      Delete
  3. என்னாச்சி அடுத்து...?

    ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு வாங்க சொல்றேன்! ஒரு ட்விஸ்டோட!

      Delete
  4. என்னது இன்னொரு பதிவும் இருக்கா... இந்த பதிவுல முடிபீங்கன்னு நினைச்சா இன்னும் ஒரு பத்து பதிவுக்கு விட மாடீங்க போலையே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2