நான்கு திருடர்கள் கதை! பாகம்1 பாப்பாமலர்.


நான்கு திருடர்கள் கதை! பாகம்1 பாப்பாமலர்.

குந்தள நகரத்தை கோயில வர்மன் என்ற ஓர் அரசன் கோலாகலன் என்ற தன் மந்திரியுடன் அரசாண்டு வந்தான். அப்போது தலைநகருக்கு இரு காத தூரத்தில் மாதகி புரம் என்ற சிற்றூரில் கார்த்திகேயன் என்ற ஒரு பக்காத் திருடன் இருந்தான். அவனுக்கு முழுத்திருடன், முக்காத்திருடன், அரைத்திருடன், கால் திருடன் என்று நான்கு குமாரர்கள் இருந்தார்கள்.
     ஒருநாள் பக்காத்திருடன் தனது நான்கு மகன்களின் திறமையை சோதிக்கவிரும்பி முதலில் கால் திருடனான கடைசி மகனை அழைத்து, “மகனே! இன்றைய தினம் உன் திருட்டு சாமர்த்தியத்தை சோதித்துப் பார்க்க போகிறேன். நீ எந்த அளவில் தொழிலில் தேர்ச்சி அடைந்திருக்கிறாய் என்பதை இதில் காட்ட வேண்டும். நீ குந்தள நகரம் சென்று பட்டப்பகலில் திருடிக் கொண்டு சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக திரும்பி வந்துவிட வேண்டும்!” என்றான்.
             கால் திருடனும் தன் சாமார்த்தியத்தை காட்டக் கிளம்பினான். முதலில் ஓர் ஓட்டாஞ்சல்லியை ஒரு ரூபாய் போல வட்ட வடிவமாய் உடைத்து துணியில் முடித்து தோளில் போட்டுக் கொண்டு சென்றான்.
     குந்தளபுரத்தை அடைந்ததும் அவன் ஒரு நாவிதனின் வீட்டிற்குள் நுழைந்தான். அப்போது நாவிதன் ஒரு குடியானவனுக்கு முகச்சவரம் செய்து கொண்டிருந்தான். அதற்கு கூலியாக அந்த நாவிதன் ஒரணா வாங்குவது வழக்கம். அவனிடம் கால் திருடன், “நான் அவசரமாய் போகவேண்டும் எனக்கு முதலில் கிருதா மீசை முதலானவைகளை வெட்டி சுத்தமாக முகச்சவரம் செய்து விடு! உனக்கு கால் ரூபாய் தருகிறேன்!” என்றான்.
     ஒரணா வேலைக்கு கால் ரூபாய் கிடைப்பதை கண்டு பேராசைக் கொண்ட நாவிதன் குடியானவனை கெஞ்சி கூத்தாடி, இன்னொரு மனையில் உட்கார வைத்துவிட்டு வெகு பாடு பட்டு கால் திருடனின் கிருதா மீசையெல்லாம் வெட்டி சுத்தமாக முகச்சவரம் செய்து விட்டான். அப்போது கால் திருடன் தன் துணியில் முடித்து வைத்திருந்த ஓட்டாஞ்சல்லியைக் காட்டி “என்னிடம் ஒரு ரூபாயாக இருக்கிறது. கூலி போக மிச்சம் முக்கால் ரூபாயை கொடுப்பாயா?” என்றான்.
    நாவிதன் சில்லறை கிடையாது என்று சொல்லவே தன்னுடன் கடைக்கு வந்தால் மாற்றித் தருகிறேன் என்று கூப்பிட்டான். பாதி சவரத்தில் குடியானவனை விட்டு விட்டு வரமுடியாது என்று நாவிதன் அங்கு விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய ஐந்துவயது மகனை கால் திருடனுடன் அனுப்பி வைத்தான்.
   கால் திருடன் அந்தப் பையனுடன் ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றான். அவனுடைய சுத்தமான முகச்சவர முகத்தைக் கண்ட கடைக்காரர் யாரோ பெரிய மனிதர் தம்முடைய கடைக்கு வந்திருப்பதாக எண்ணி உள்ளே அழைத்து சென்று தன்னுடைய கடையில் இருந்த விலை உயர்ந்த பட்டு ஜவுளிகளை எல்லாம் எடுத்து காண்பித்தார். கால் திருடனோ பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகளை எடுத்து மூட்டையாக கட்டிக் கொண்டு, செட்டியாரே! இவ்வூரையடுத்த குளக்கரையில் என் மனைவி குடும்பத்தாரெல்லாம் வண்டியில் வந்து தங்கியிருக்கிறார்கள்.அவர்களுக்கு பிடித்தமான சரக்குகளை எடுத்துக் கொண்டு அவற்றிற்குரிய பணத்தையும் பிடிக்காத சரக்குகளையும் திருப்பி தந்து விடுகிறேன்! நீரோ உமது ஆட்களோ என்னுடன் வாருங்கள் என்று அழைத்தான்.
அந்த சமயம் கடையில் வேலையாட்கள் இல்லாததாலும் வியாபாரம் நடந்து கொண்டு இருந்ததாலும் செட்டியார் யோசனை செய்ய, கால் திருடன் செட்டியாரே! தயங்கவேண்டாம்! இந்த குழந்தை உன் வசம் இருக்கட்டும் சிறிது நேரத்தில் பணத்துடன் வந்து விடுகிறேன் என்று நாவிதன் மகனை கடையில் உட்கார வைத்துவிட்டு மூட்டையுடன் கிளம்பி விட்டான்.
   செட்டியாரும் சரக்குகளுக்கு பதில் அவனது பிள்ளை ஈடாக இருக்கிறான் என்று நாவிதன் பிள்ளையை பிணையாக வைத்துக் கொண்டு திருடனை அனுப்பிவிட்டார். கால்திருடனும் ஜவுளிகளுடன் ஓட்டமும் நடையுமாக கிளம்பி சூரிய அஸ்தமனத்திற்குள் தன் தகப்பனிடன் சென்று தான் திருடி வந்த ஜவுளிகளை காண்பித்தான். தன் மகனின் திறமையைக் கண்டு பக்காத்திருடன் மெச்சி பலே திருடா! என்று பாராட்டினான்.
   அதே சமயம் ஜவுளிக்கடை செட்டியாரோ! வெகு நேரமாகியும் ஜவுளியுடன் போனவன் வரவில்லையே என்று கலங்கி பிணையாக இருந்த சிறுவனிடம் , உன் தகப்பன் எங்கே? என்று கேட்டார். அந்த சிறுவனோ என் அப்பா சவரம் செய்து கொண்டிருக்கிறார்! என்று சொல்லவும் கோபம் கொண்டு திருட்டுப் பயலே! என்னிடமே விளையாடுகிறாயா? என்று அவனை கட்டிப்போட்டார். அதனால் அந்த சிறுவன் அழுது கொண்டே இருந்தான்.
  அந்த சமயம் கூலி வாங்க போன தன் மகனை காணவில்லையே என்று நாவிதன் கடைத்தெருவிற்கு வந்து ஜவுளிக் கடையில் தன் மகன் கட்டுப்பட்டு இருப்பதைக் கண்டு ஆத்திரமுற்று யார் இந்த பிள்:ளைய கட்டிப்ப்போட்ட கயவன்? என்று  செட்டியாரிடம் சண்டைக்கு சென்றான்.
   செட்டியாரும் தம் ஜவுளிகள் திருடு போனதால் ஆத்திரத்துடன் “யாரடா நீ இந்த களவாணிப் பயலுக்கு பரிந்து பேச வந்து விட்டாய்? என்று சத்தம் போட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்ள அங்கே கூட்டம் கூடியது. அடிதடி சண்டையாக அது மாறவே காவலர்கள் இருவரையும் கைது செய்து அரசன் முன் நிறுத்தினர்.
   வழக்கை விசாரித்த அரசன், கடைக்காரன் ஏமாந்ததற்கு நாவிதன் மகன் காரணம் அல்ல என்று தீர்ப்பளித்தான். செட்டியார் தனது ஜவுளி திருடு போனது கண்டு அழுது கொண்டும் நாவிதன் தன் கூலி பறி போனது கண்டும் தன் பிள்ளை திருடனாக தூணில் கட்டப்பட்ட துயரத்தை எண்ணி அழுது கொண்டும் வீட்டிற்கு சென்றார்கள்.
   அரசன் கோயிலவர்மன் கோலாகல வர்மனும் மந்திராலோசனை நடத்தி, பட்டப்பகலிலேயே இப்பேர்ப்பட்ட திருட்டுத்தனம் செய்தவன் இன்றிரவு கட்டாயம் திருட வருவான். அவனை பிடிக்க வேண்டும் இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது என்று தலையாரிகள் தலைவனிடன் உத்தரவு பிறப்பித்தான்.
  அன்றிரவு பக்காத்திருடன் தனது இரண்டாவது மகனான அரைத்திருடனிடம், இன்றிரவு நீ குந்தள நகரம் சென்று அபாரமான திருட்டு ஒன்றை செய்து வரவேண்டும் என்று கூறினான். அரைத்திருடனும் குந்தள நகரம் புறப்பட்டான்.
                                           தொடரும்(1)
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்வழி காட்டும் தொடர் கதை நன்மைகள் பொலியத்
    தொடரட்டும் .வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  2. இதைப் பல வடிவங்களில் ஏற்கெனவே படித்திருக்கிறேன் என்றாலும் சுவாரஸ்யம்தான்!

    ReplyDelete
  3. உங்க குழந்தையை இப்போதே நல்வழி வாழும் முறையை கற்றுகொண்டுக் கொடுங்கள்

    ReplyDelete
  4. கதை மிக அருமை....உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. சின்ன வயசுல சிறுவர் மலர் படிச்ச பீலிங்ஸ்..

    மொதல்ல போற திருடனுக்கு வேலை சுலபம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2