இரட்டைக்காக்காவும் அதிர்ஷ்டமும்!


இரட்டைக்காக்காவும்  அதிர்ஷ்டமும்!

ஓர் ஊரில் பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான். அவனிடம் யாரோ தூங்கி எழுந்தவுடன் இரட்டைக் காக்காய்களை ஒரே சமயத்தில் பார்த்தால் நன்மை! அதிர்ஷ்டம் வந்து அள்ளும் என்று சொல்லிவிட்டார்கள். அவனோ சரியான தூங்குமூஞ்சி அதிகாலையில் எழுந்து பழக்கம் இல்லாதவன்.ஆனால் சகுனம் ஜோஸ்யம் இதில் எல்லாம் அபார நம்பிக்கை அவனுக்கு உண்டு.
   அதிகாலையில் அவன் எழுந்திருக்கும் முன் காக்கைகள் பறந்து போய்விடுமே! என்று எண்ணிய அவன் தன் வேலைக்காரனை அழைத்தான். “ நம் வீட்டுத் தோட்டத்தில் விடியற்காலையில் இரட்டை காக்கைகள் அமர்ந்து இருப்பதை பார்த்தால் நீ விரைந்து வந்து என்னை எழுப்பவேண்டும்” என்று கட்டளை இட்டான். வேலைக்காரனும் சரி எஜமான்! என்று ஒத்துக் கொண்டான்.
   ஒரு நாள் விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருந்த செல்வந்தனை ஓடிவந்து எழுப்பினான் வேலைக்காரன்! “எஜமான் எழுந்திருக்கள்! நமது தோட்டத்தில் இரண்டு காகங்கள் ஜோடியாக வந்து அமர்ந்து உள்ளன! உடனே வந்து பாருங்கள்!”என்று எழுப்பினான்.
  செல்வந்தன் அரக்கபரக்க எழுந்தான். கண்ணை மூடியவாறே வேலையா:ள் கையைப்பிடித்தபடி தோட்டத்திற்கு சென்றான். அங்கே சென்று கண்ணைத் திறந்தான். அந்தோ! பரிதாபம்! அங்கு இருந்த காக்கைகளுள் ஒன்று பறந்து சென்றுவிட்டு இருந்தது. ஒரு காக்கை மட்டுமே இருந்தது. செல்வந்தனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
  “ அடேய்! முட்டாள்! மடையா! இரண்டு காகங்கள் ஜோடியாக இருக்கும் போது அல்லவா என்னை எழுப்பச் சொன்னேன்! இப்போது ஒற்றை காகம் அல்லவா இருக்கிறது” என்று கத்தி ஒரு அறை கொடுத்தான்.
   அடி வாங்கிய வேலையாள் அழுதபடி, எஜமான் நீங்கள் வருவதற்குள் ஒரு காக்கா பறந்து போய்விட்டது! என்று பவ்யமாக கூறினான். அதற்கும் வேலையாளையே குற்றம் சாட்டி, முட்டாளே! நீ விரைவாக வந்து எழுப்பி இருக்க வேண்டும்! உன் சோம்பலால் எனக்கு கிடைக்க இருந்த நன்மையை பாழாக்கிவிட்டாயே! என்று கத்தினான். உன்னால் எல்லாம் பாழாகிவிட்டது! என்று வேலைக்காரனை போட்டு அடித்து உதைத்தான். அப்போதும் அவன் கோபம் அடங்கவில்லை!
   வலிதாங்க முடியாத வேலைக்காரன், ஐயா! என்னை அடிக்காதீர்கள்! இரட்டைக் காக்கைகளை விடியலில் பார்த்ததற்கான பலன்களைத்தான் நான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்! இதற்கா நீங்கள் ஆசைப்பட்டீர்கள்! என்று சாந்தமாக கேட்டான்.
  அப்போதுதான் செல்வந்தனுக்கு தன் தவறு உறைத்தது. அடடா! ஓர் அப்பாவியை அடித்து உதைத்து விட்டோமே! என்று வருந்தினான். மூடநம்பிக்கையையும் விட்டொழித்தான்.
  நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம்! கொஞ்சம் மாறிக் கொள்வோமே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
   

Comments

  1. எளிமையாக ஆனால் சுருக்கென்று சொல்லும் கதை!அருமை சுரேஷ்

    ReplyDelete
  2. கதை அருமை அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2