உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 10
உங்களின் தமிழ் அறிவு எப்படி?
கடந்த ஒன்பது பகுதிகளில்
சில தமிழ் சொற்களையும் இலக்கிய சுவையையும் ஓரளவு அறிந்து வருகிறோம்! இன்றைய பகுதியில்
சில தூய தமிழ் சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் காணப்போகிறோம்.
உதாரணமாக அகநாழிகை என்றொரு இலக்கிய இதழ் வெளிவருகிறது!
அகநாழிகை என்றால் என்ன? உங்களில் எத்தனைப் பேருக்கு இதன் பொருள் தெரியும். எனக்கும்
இதுவரை தெரியாது. தேடல் துவங்கும்போது விடைகிடைக்கிறது. உங்களுக்காக இன்று இந்த பகுதியை
பதிவிட தேடிய போது அகநாழிகை என்ற சொல்லின் பொருள் கிடைத்தது. அகநாழிகை என்றால் கருவறை
கர்ப்பகிரகம் என்று பொருள். இது தமிழகராதியில் படித்தது. உடனே இது போல சில தமிழ் சொற்களுக்கு
பொருள் தரலாமே இன்றைய பதிவில் என்ற எண்ணத்தில் சில சொற்களும் அதன் பொருளும் தமிழ் அகராதியில்
இருந்து தொகுத்து தந்துள்ளேன் சுவைத்து மகிழவும்.
1. அகநாழிகை-கருவறை
2. அங்குலி-மோதிரவிரல்
3. அசுவம்-குதிரை
4. அசுழம்-நாய்
5. அஞ்சலர்-பகைவர்
6. அஞ்சலிகை-வௌவ்வால்
7. அடப்பம்-பொருள்கள் வைக்கும் பை
8. அணில்வரிக் கொடுங்காய்-வெள்ளரிக்காய்
9. அண்ணாவி-ஆசிரியர்
10. அதிகந்தம்-செண்பகப்பூ
11. அநுராகம்-ஆசை
12. அந்தரமாமூலி-ஆகாயத்தாமரை
13. அந்தர்த்தானம்-மறைந்துபோதல்
14. அம்பாரம்-பெருங்குவியல்
15. அம்பலம்-சபை
16. அம்பாரி-யானைமேல் அமைத்த இருக்கை
17. அம்மானை-பெண்கள்விளையாட்டு
18. அரவணை- பாம்புபடுக்கை
19. அனுபூதி- அனுபவஞானம்
20. அனாசாரம்- ஒழுக்கமின்மை
தமிழ்சுவையில் இன்று குறுந்தொகையில்
இருந்து ஒரு பாடலை பார்ப்போம்! குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று நான்கடி முதல்
எட்டடிவரை அமைந்த ஆசிரியப்பாக்காளால் ஆன அகத்திணைப் பற்றிய நூல் குறுந்தொகை. குறுந்தொகையில்
நானூறு பாடல்கள் அமைந்துள்ளன.
நாம் பார்க்க போவது பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாடல்
இதைப்பாடியவர் கபிலர். திணை குறிஞ்சி
குறிஞ்சிக்கு கபிலர் என்று பெயர் பெற்றவர் கபிலர். வரைவு நீட்டித்தவிடத்து தலைமகள்
தோழிக்கு சொல்லியது.
சங்ககாலத்தில் அமைந்த காதல் பாடல் இது.
காதலன் விரைவில் திரும்பி வந்து மணந்துகொள்வேன்
என்று காதலியிடம் கூறி அவளோடு சுற்றித்திரிந்து ஊர் திரும்புகிறான். அவன் வர தாமதம்
ஆகும் வேளையில் காதலி தன் தோழியிடம் தன்னுடைய நிலையை எடுத்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
அன்றும் பெண்கள் இன்று போலவே ஏமாந்து தான் இருந்தனர் போலும்.
யாரு மில்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே
பிறர் அறியாதவாறு தன் நலத்தை கவர்ந்து
சென்ற தலைவனை தலைவி கள்வன் என்று கூறுகிறாள்.
தலைவன் என்னை மணப்பேன் என்று சூளுரை கூறியபோது அதற்கு சாட்சி யாரும் இல்லை!சாட்சி
கூறுவதற்கு இயலாத நாரை ஒன்று மட்டுமே அங்கு இருந்தது. அதுவும் எங்களை கவனிக்காமல் தன்
உணவான ஆரல் மீனின் வருகையை மட்டுமே நோக்கியிருந்தது. எனவே தலைவன் தன் வாக்கினை மறந்தால்
பொய்த்து போக செய்தால் நான் என்ன செய்வேன்! தலைவன் இன்னும் என்னை மணந்து கொள்ளாமல்
உள்ளானே! என்று தலைவி தோழியிடம் வருந்தி கூறினாள்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இன்னும் சில
தமிழ் சொற்களுடனும் இலக்கிய சுவையுடனும் சந்திக்கிறேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
விரும்பிப் படித்தேன்... இது போல் அவ்வப்போது தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteaachariyam...
ReplyDeleteenna arputhamaana vaarthaikalukkul-
arththanagal!
thodarnthu padikkanum...
nalla pakirvu...!