செல்வம் தரும் சிவராத்திரி விரதம்!


செல்வம் தரும் சிவராத்திரி விரதம்!

‘சிவசிவ’ என்கிலர் தீவினையாளர்
‘சிவசிவ’ என்றிட தீவினை மாளும்
‘சிவசிவ’ என்றிட தேவரும் ஆவர்
‘சிவசிவ’ என்றிட சிவகதி தானே.

சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும். சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும். நிரம்பிய அன்புடன் ‘நமசிவாய’ என்னும் திரு ஐந்தெழுத்தை ஓதுதல் இன்றிமையாதது. மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பலாகும்.

சிவ வழிபாடு செய்யும் போது தீபங்களை வரிசையாக வைத்து பெருமானை வழிபட வேண்டும். சிவபெருமான் தீப மங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார் எனவே அவருக்கு தீபமேற்றுவது முக்கியம்.
   கோயிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடிமரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒருமுறையும் சிவபெருமானை மூன்று முறையும் அம்பிகையை நான்குமுறையும் வலம் வர வேண்டும். வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும். அதைக் கீழே சிந்துவதோ எறிவதோ பெரும் பாவமாகும். சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்தி தேவருக்கும் இடையே போகக் கூடாது.

   சிவராத்திரி பூஜை வீட்டில் செய்வது எப்படி?
  உங்கள் வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பால் பழம் மட்டும் அருந்தி பூஜையைத் துவக்க வேண்டும். மாலை 6.30 இரவு 9.30. நள்ளிரவு 12.30 அதிகாலை 3.00 மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் மாலை சார்த்தி தீபாராதனை காட்டவேண்டும்.
     இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து ‘சிவாயநம’  ‘நமசிவாய’ என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள் தோத்திரங்கள் தேவாரம் போன்றவை பாடி துதிக்கலாம். கண்விழிக்கிறோம் என்று டீவி சினிமா பார்க்க கூடாது.

வில்வம் மஹாலட்சுமி வாசம் செய்யும் இடம். வில்வ இலையால் சிவனை பூஜிக்க மோட்சம் கிடைக்கும். இதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்திய வில்வத்தை நீரில் கழுவி மீண்டும் மீண்டும் பயன் படுத்தலாம். மூன்று வில்வ இலைகள் சேர்ந்திருப்பதை ‘வில்வதளம்’ என்று கூறுவர். இதனால் சிவனை பூஜிப்பது சிறப்பானது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி,திங்கள்கிழமை, பிரதோஷ வேளைகளில் வில்வம் பறிக்கக் கூடாது. வில்வம் மருத்துவ குணம் உடையது. காய்ச்சல் இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. மஞ்சல் காமாலை நோய்க்கு வில்வ இலை கஷாயம் மருந்தாக பயன்படுகிறது. வில்வங்களில் நவவில்வம், பஞ்சதள வில்வமும் உண்டு.

மகாபாரதக் கதையில் சிவராத்திரியின் மகிமை கூறப்படுகிறது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர் சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார்.
    இக்ஷுவாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்ரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னனை சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன், முனிவரிடம், ஐயனே! நான் ‘சுஸ்வரன்’ என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள் பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளை பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்தநாள் சிவராத்திரி என்பதை நான் அறியவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கியபின் இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். “நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளை பறித்து போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை! அன்று நீ உணவும் உட்கொள்ளவில்லை! அறியாமல் விரதம் இருந்து சிவனை வழிபட்டு உள்ளாய். சிவராத்திரியன்று நீ அறியாமல் சிவனை வழிபட்டாலும் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர் சிவதூதுவர்கள்.
    அந்த ஒரு நற்காரியத்தினால் இந்த பிறவியில் நாடாளும் மன்னனாக சித்திரபானு என்னும் பெயரில் வசிக்கும் பேறு பெற்றேன். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பார்கள். அவர்களது சந்ததியும் செல்வ வளத்துடன் திகழும் என்றான்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்!

நத்தம் வாலீஸ்வரர் கோயில்.

சென்னை செங்குன்றத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள பஞ்செட்டியில் இருந்து மேற்கே பிரியும் கிளைச்சாலையில் 3கி,மீ தொலைவில் அமைந்துள்ளது நத்தம் எனும் அழகிய கிராமம். இங்கு கிராம கடைசியில் அழகிய வயல்களின் நடுவே அருள் பாலிக்கிறார் திருவாலீஸ்வரர்.
  வாலியின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியமையால் வாலீஸ்வரர் என்ற திருநாமம். அம்மனுடைய ராகு (சர்ப்ப) தோஷம் நீக்கியமையால் லிங்கம் கருமையாக காணப்படும் சுத்தப்பாலினால் அபிஷேகம் செய்யும் சமயம் கறுநீலமாக காட்சியளிக்கும். ராகு கேது பரிகாரத்தலம்.
  இங்கு சிவராத்திரி வழிபாடு செய்வது மிகவும் விசேசமானது. இவ்வாலயத்தில் இரவு மூன்றாம் ஜாம பூஜையில் தேவர்கள் வந்து பூஜிப்பதாக ஐதீகம். எனவே மூன்றாம் ஜாம பூஜை விரைவாக முடித்து 12 மணி அளவில் நடை சார்த்தப்படும். பின்னர் விடியற்காலை 5 மணிக்கே நடை திறக்கப்படும். சிவராத்திரியில் நடை சார்த்தபடும் கோவில் இதுவொன்றே!
 
செல்வ வளங்கள் தரும் சிவராத்திரி விரதம் இருந்து சிவாலயங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து இறைவனருள் பெறுவோமாக!

ஆன்மிக இதழ்களில் இருந்து தொகுப்பு.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சிறப்பாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்...

    ஓம் நமசிவாய நம...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!