திருவருள் தரும் திருமீயச்சூர் லலிதாம்பிகை!
திருவருள் தரும் திருமீயச்சூர்
லலிதாம்பிகை!
10வது ஆண்டு ஏகதின லட்சார்ச்சணை
திருப்பாவாடை நிவேதன வைபவம்!
மாசிமாதம்21ம் தேதி 5-3-2013
செவ்வாய்க்கிழமை
ஆக்கம்: கடலூர் எஸ் கைலாச சிவாச்சர்யர், விழுப்புரம்
கும்பகோணம் மாயவரம் சாலையில்
பேரளத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமீயச்சூர்.
லலிதாம்பிகை இங்கு கோயில் கொண்டருளி பக்தர்களுக்கு
அருள் பாலித்து வருகிறாள். லலிதா சகஸ்ரநாமம் ஹயக்கீரிவ பெருமானால் குறுமுனியார் பதினென்
சித்தர்களில் முதன்மையான அகஸ்தியருக்கு உபதேசிக்கப்பட்ட தலம்.
“அகஸ்திய மகரிஷியே! இந்த மகாமந்த்ர ரூபமான
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமாவளியை உமக்கு நானாக கூறவில்லை! என் உள்ளத்தில் நிறைந்திருக்கும்
அம்பிகையின் பிரேரணையால் உபதேசித்தேன்” என்று ஸ்ரீ மஹா சரஸ்வதியின் ஞானகுருவாகிய ஸ்ரீ
ஹயக்கீரிவர் எடுத்தியம்பிய புண்ணியத் தலம்.
அம்பிகை ஒன்பது விதமாக காட்சி தந்ததால் “ஸ்ரீ லலிதா
நவரத்ன மாலை” ஸ்தோத்தரம் அகஸ்தியரால் தோற்றுவிக்கப்பட்ட நவரத்ன ஸ்தலம்.
திருமீயச்சூர் திருத்தலம் மாடக்கோயில், மணிக் கோயில்
ஞாழற்கோயில் வரிசையில் “இளங்கோயில்” என்னும் தனிச்சிறப்பு உடையது. ஸ்ரீபுர தர்பார்
மண்டப அமைப்பில் ஸ்ரீ லலிதாம்பிகையின் சந்நிதி அபூர்வ அமைப்பு உள்ள ஒரே ஸ்தலம். அம்பிகையின்
அங்க தேவதைகளான வசினீ- வாக்தேவதைகள் திருவாய் மலர்ந்தருளிய “ரஹஸ்ய நாம ஸஹஸ்ரம்” எனும்
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை ஸ்ரீ ஹயக்கீரிவ பெருமான் அகத்திய முனிவருக்கு உபதேசித்த தலம்.
ஸ்ரீசக்ரத்தின் 44வது ஸ்தானமாகிய பிந்துவில் பேரொளிப்
பிழம்பாய் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி வீற்றிருக்கின்றாள். இந்த 4ம் 4ம் சேர்ந்தால் 8 அஷ்டமும்
அம்பிகைக்கு பிரியமானது. க்ருஷ்ண பட்ச அஷ்டமி திதிக்கு ஸ்ரீ மஹாலஷ்மி அதி தேவதையாவாள்.
நவமி திதிக்கு மஹா சரஸ்வதி அதி தேவதையாவாள்.
“மாத்ரு தேவோ பவ” அன்பு அருள், அரவணைப்பு, ஆதரவு,
பந்தம், பாசம், பிரிவு, பணிவு, தயவு, தாட்சண்யம் எனும் தாய்மைக்குரிய குணநலம் நிறையப்
பெற்றவள் திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை.
அம்பிகை - அம்பாள் - அம்மன் என்றாலே அன்னை என்றுதான் பொருள். தகுந்த
நேரத்தில் உடலுக்கு அன்னமூட்டி பலமளிப்பவள். அருளும் பொருளும் சம்பாதிக்க உரிய காலத்தில்
உணர்வூட்டி ஆதரவளிப்பவள். காரணம் எதுவும் இல்லாமல் கருணை காட்டுபவள். கன்றைவிட்டு பிரியாமல்
பின் தொடர்ந்து செல்லும் கோமாதா போல “வாத்ஸல்யத்துடன்” பக்தர்களை தொடர்ந்து ரட்சிப்பவள்
ஸ்ரீ லலிதாம்பிகை.
“ஸ்தோத்திர ப்ரியாயை நமஹ:”
இந்த விஞ்ஞான மயமான கலிகாலத்தில் எக்கணமும் காத்து ரட்சிக்கும் அம்பிகையை மனமார போற்றி
துதிக்க ஒரு பிடிப்பு வேண்டும்! மனம் லயிக்க வேண்டும்! அதற்காகவே “ஸ்ரீபுரமாகிய திருமீயச்சூரில்”
தெற்கு நோக்கி சாந்த ஸ்வரூபியாக பஞ்சாசன பீடத்தில், ஸ்ரீ மேருவின் மீது அழகிய திருமேனி
கொண்டு ஸர்வ அலங்காரத்துடன் எழில் ததும்பும் மலர்ந்த முகத்துடன் கண்ணையும் கருத்தையும்
விட்டு நீங்காத கோலம் கொண்டு அமர்ந்த நிலையிலும் கால்களில் கொலுசு அணிந்து கொண்டு அவரவர்
மன நிலைக்கு ஏற்ப திருக்காட்சி தந்தருள்கிறாள். ஒரு முறை கண் குளிரப் பார்த்தாலே நம்மை
அறியாமல் ஸ்தோத்திரங்கள் நாவிலிருந்து வெளிவரும்.
திருமீயச்சூர் திருத்தலத்தினை தரிசிப்பதும் ஸ்ரீ
லலிதா ஸஹஸ்ரநாமத்தை அர்ச்சிப்பதும் அல்பமான தவத்தின் பலன் அல்ல! இமயமலை போல குவிந்த
தவத்தின் பயனே ஆகும். ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் ஜபம் - பாராயணம் -அர்ச்சணை செய்யும் உபாசகர்கள்
திருமீயச்சூர் சந்நிதிக்கு வந்து சமர்ப்பணம் செய்தால்தான் ஸர்வ பூர்த்தி காரி ஆகும்
என்பது நியதி.
திருமீயச்சூர் திருத்தலத்தின் பரம்பரை அறங்காவலர்
வேளாக்குறிச்சி ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சத்யஞானமகாதேவ தேசிக பரமாச்சர்ய
சுவாமிகளின் திருவுளப்பாங்கின் அருளாணையின் வண்ணம் 10வது ஆண்டு ஏகதின லெட்சார்ச்சனை
அபிஷேக ஆராதனை வைபவம் நிகழும் நந்தன வருஷம் மாசி மாதம் 21ந்தேதி 5-3-2013 செவ்வாய்க்கிழமை
அஷ்டமி-நவமி திதியும் கேட்டை நட்சத்திரமும் சித்த அமிர்த யோகமும் கூடிய அஷ்டகா தினத்தன்று
காலை 8.மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
அன்று மாலை அம்மனுக்கு அபிஷேக அலங்காரத்துடன் திருப்பாவாடை
எனும் 50கிலோ சர்க்கரை பொங்கல் 50 கிலோ புளியோதரை,50 கிலோ தயிரன்னம், மற்றும் பழங்கள்
பலகாரவகைகளுடன் படையல் நடைபெறும் அதுசமயம் அம்மனை நெய்க் குளத்தில் தரிசிப்பது காணவேண்டிய
ஒன்று.
லட்சார்ச்சனை தினத்தன்று அம்பாளுக்கு தங்க கவசம்
சார்த்தப்படும். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம புத்தகம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானத்தால் வெளியிடப்படும்.
இப்பெரும் விழாவை தமிழகம் எங்கிலும் உள்ள ஆதிசைவ
சிவாச்சார்யார்கள், மற்றும் அன்னையின் உபாசகர்கள், ஆன்மிக அன்பர்கள், பக்த கோடிகள்
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
நாடு நலம் பெறவும் நல்ல மழை பொழியவும், நாட்டு
மக்கள் மகிழ்வுடன் வாழவும் ஸ்ரீ லலிதா உபாசனை ஒன்றே எளிய தலைச்சிறந்த மார்கமாகும்.
இப்பெரும் விழாவில் ஆன்மிக பெருமக்கள் கலந்து கொண்டு அன்னையின் அருள் பெற வேண்டுகிறோம்!
தொடர்புக்கு: கடலூர் எஸ்.
கைலாச சிவாச்சார்யர் ,விழுப்புரம். செல்: 9443189253
டி.வி ரவிச்சந்திர சிவாச்சார்யர் நாராயணவரம்
செல் 9440180621
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments
Post a Comment