உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 9
உங்களின் தமிழ் அறிவு எப்படி?
பகுதி 9
அன்பான வாசக பெருமக்களே!
கடந்த சில வாரங்களாக தமிழின்பெருமைகளையும் நல்ல தமிழ் சொற்களையும் அறிந்து வருகிறோம்.
சென்றவாரத்தில் ணகர னகர வேறுபாடுகளை கண்டோம்.அத்துடன்
தமிழ் இலக்கியத்தையும் சுவைத்தோம். இன்றைய பகுதியில் நாம் காண இருப்பது பண்டைத் தமிழர்கள்
வகுத்த நில வேறுபாடுகளையும் கால வேறுபாடுகளையும்
பற்றி அறிய இருக்கிறோம்.
பண்டைத் தமிழர்கள் நிலங்களை ஐவகையாக பிரித்தனர்.
இதை நாம் பத்தாம் வகுப்பில் படித்து இருப்போம் அப்போது பாடமாக படித்தமையால் மறந்திருப்போம்
இப்போது வாழ்க்கையாக படிக்கையில் மறக்க மாட்டோம் என்று நினைக்கிறேன். இப்போது ஐவகை
நிலங்களை பார்ப்போம்.
1.குறிஞ்சி- மலையும் மலைசார்ந்த இடமும்
2. முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
3.மருதம் - வயலும் வயல்
சார்ந்த இடமும்
4.நெய்தல்- கடலும் கடல்
சார்ந்த இடமும்
5.பாலை வெப்பம் மிகுந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும்
ஐவகை நிலங்களை பார்த்தோம்
கால நிலையையும் ஆறுவகையாக பிரித்தனர்.
1.கார்காலம் - ஆவணி,புரட்டாசி
2 கூதிர்காலம்- ஐப்பசி,
கார்த்திகை
3. முன்பனிகாலம்- மார்கழி,
தை
4.பின்பனிக்காலம்- மாசி,
பங்குனி
5.இளவெனில்காலம்- சித்திரை,வைகாசி
6.முதுவெனில்காலம்- ஆனி,
ஆடி
இவை பெரும்பொழுதுகள் என்று
அழைக்கப்பட்டன. ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு மாத கால அளவை கொண்டது.
இதேபோல ஒரு நாளை ஆறுவகையாக
பிரித்தனர்
1.மாலை – கதிரவன் மறைந்த
பிறகு இரவுப்பொழுதின் முதல் பகுதி
2.யாமம்- நள்ளிரவு, இரவுப்பொழுதின்
நடுப்பகுதி
3.வைகறை- கதிரவன் தோன்றுவதற்கு
முன் இரவுப் பொழுதின் இறுதிப்பகுதி
4.காலை- கதிரவன் தோன்றியதற்கு
பிறகு பின் பகற்பொழுதின் முதற்பகுதி விடியற்காலம்
5.நண்பகல் – பகல்பொழுதின்
நடுப்பகுதி
6. ஏற்பாடு- பகற்பொழுதின்
இறுதிப் பகுதி, கதிரவன் மறைகின்ற காலம்.
இவ்வாறு தமிழர்கள் காலத்தையும்
நிலத்தையும் பொழுதையும் அழகுத் தமிழில் அழைத்து பகுத்து வந்தனர். இவை இன்று வெறும்
தேர்வுகளில் மட்டும் இடம்பெறுவதாக அமைந்து விட்டது காலத்தின் மாற்றம் என்று எண்ணாமல்
இவைகளை பயன்படுத்த துவங்குவோம்.
இனிக்கும் இலக்கியத்தில்
இன்று ராமச்சந்திர கவிராயர் இயற்றிய பாடலை பார்ப்போம்!
வஞ்சகர்பால் நடந்தலைந்த காலில் புண்ணும்
வாசல்தோறும் முட்டுண்ட
தலையில் புண்ணும்
செஞ்சொல்லை நினைந்துருகும்
நெஞ்சில்புண்ணும்
தீருமென்றே சங்கரன்பால்
சேர்ந்தேன் அப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின்
புண்ணும் வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும்
கோபமாகக்
பஞ்சவரில் ஒருவன் வில்லால்
அடித்த புண்ணும்
பார் என்றே காட்டி நின்றான்
பரமன் தானே!
புலவர் ஒருவருக்கு ஏற்பட்ட
ஏமாற்றத்தை இப்படி பாடுகிறார் கவிஞர். பாடலின் தரம் அறிந்து ஆதரிக்காத வஞ்சக மனம் கொண்டோரின்
வீடுகளுக்கு நடந்து நடந்து அவரின் கால்களில் புண் உண்டானது. அவர்களது வீட்டு வாசலில்
நுழையும் போது பசி மயக்கத்தால் அடிக்கடி முட்டிக் கொண்டதால் தலையிலும் புண் ஏற்பட்டது.
சிறந்த தமிழ் பாடல்களை சுவைப்போர் இல்லையே என்று
வருந்தியதால் மனமும் புண் ஆனது. தன்னுடைய குறையை தீர்க்க வேண்டும் என்று சிவபெருமானிடம்
முறையிட சென்றாலோ சிவனோ, பாண்டியனின் பிரம்படி
பட்ட புண்ணையும் கண்ணப்பனின் கால் பட்டதால் தோன்றிய புண்ணையும் அர்ச்சுனன் வில்லால்
உண்டான புண்ணையும் இதோ பார் என்று புலவரிடம் காட்டினாராம்.
தாம்தான் அடிபட்டோம் என்றால் சிவனும் இப்படியா அடிபட்டு
நிற்கிறாரே என்று நகைச்சுவையாக மேற்கண்ட பாடலை பாடி முடித்தார் புலவர்.
வறுமை நிலையிலும்
என்னமாய் இருக்கிறது இலக்கிய சுவை! இதுதான் தமிழ் சுவை!
மீண்டும் அடுத்த பகுதியில்
சந்திப்போம்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
சுவையை சுவைத்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது பழைய (பகிர்வுகளின்) சுவைகளை சுவைப்பேன்...
nalla muyarchi vaazhthukkal..!
ReplyDelete