உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 12


உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 12

அன்பான வாசக பெருமக்களே! ஏதோ விளையாட்டாக இந்த பகுதியை தொடங்கினேன். தமிழ் சொற்களையும் பொருட்களையும் இலக்கியங்களையும் படித்து அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்பது உண்மை! இன்றைய பகுதிக்கு எதை எழுதலாம் என்று யோசித்து தமிழ் நூல்களை புரட்டியதில் சுவாரஸ்யமான பகுதி ஒன்று கிடைத்தது. அதை கீழே தந்துள்ளேன். படித்து கருத்திடுங்கள்!

திசைச்சொற்கள்:
    திசைச்சொற்கள் என்றால் என்ன என்று தெரியுமா? படிக்கிற காலத்தில் படித்து இருப்போம்! இப்போது மறந்து போயிருக்கும். சரி அதை அப்புறம் பார்ப்போம். இப்போது கீழே உள்ள பத்தியை படியுங்கள்.
      நம்பி குல்லா வாங்க ரிக்சாவில் ஏறி பஜாருக்குச் சென்றான். கடைக்குள் நுழைந்தவுடன் அலமாரியில் எக்கச்சக்க குல்லா இருப்பதை பார்த்தான். விற்கும் நபரிடம் “குல்லா என்ன விலை?” என்று கேட்டான். விலை இருபத்தைந்து ரூபாய். ஒரு குல்லா வாங்கினால் ஒரு பேனா இனாம் என்றான் கடைக்காரன். விலை ஜாஸ்தியாக உள்ளது என்று கூறிக்கொண்டே துட்டை எண்ணிக் கொடுத்தான் நம்பி. பீரோவில் இருந்து குல்லாவை எடுத்து கடுதாசியில் கட்டிக்கொடுத்தான் கடைக்காரன்.
    படித்து விட்டீர்களா? இது என்ன மொழி? தமிழ் மொழிதான் என்கிறீர்களா? மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள். புரியவில்லையா? இது தமிழில் எழுதப்பட்டு இருந்தாலும் இதில் பல மொழிச் சொற்கள் கலந்து இருக்கின்றன. தாய் மொழி தமிழ் பிற மொழிகளையும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இப்படி தமிழ் இல்லாமல் பிற மொழிகளில் இருந்து வந்து கலந்த சொற்களை திசைச் சொற்கள் என்கிறோம்.  இந்த பத்தியில் திசைச்சொற்களையும் அது எந்த மொழியில் இருந்து  வந்துள்ளது என்று அறிய முடிகிறதா? முடியாவிடில் பரவாயில்லை! கீழே கொடுத்துள்ளேன் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
      
1.   குல்லா - பார்ஸி
2.   ரிக்ஷா- ஜப்பானி
3.   பஜார்-பார்ஸி
4.   அலமாரி-போர்ச்சுகீசியம்
5.   எக்கச்சக்கம்- தெலுங்கு
6.   நபர்- அரபி
7.   பேனா- போர்ச்சுகீசியம்
8.   இனாம்- உருது
9.   ரூபாய்-இந்துஸ்தானி
10. ஜாஸ்தி-உருது
11. துட்டு- டச்சு
12. பீரோ-பிரெஞ்சு
13. கடுதாசி-போர்ச்சுகீசியம்.

திசைச்சொற்களை அறிந்து கொண்டீர்களா இனி இலக்கியம்.


புறநானூற்றில் இருந்து ஒரு பாடல்

சிற்றில் நற்றூன் பற்றி நின்மகன்
யாண்டுள னோஎன வினவுதி என்மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்றவயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.
                             காவற் பெண்டு.


விளக்கம்   இந்த சிறிய இல்லத்தின் தூணை பற்றிக் கொண்டு என்மகன் எங்கு உள்ளான் என்று கேட்கிறாய்? என் மகன் எங்கு இருப்பான் என்று நான் அறிய மாட்டேன். காடுகளில் வசிக்கும் புலி ஓய்வெடுக்க வரும் குகை போன்றது அவனை ஈன்ற என் வயிறு. வீரம் மிக்க அவன் போர்க்களத்தில் இருப்பான்.

தன்னுடைய வீர மகனை போர்க்களத்தில் இருப்பான் என்று கூற இந்த தாய் பயன் படுத்தும் உவமையினை ரசியுங்கள்! புலி சேர்ந்து போகிய கல்லளை. புலி ஓய்வெடுக்க வரும் குகை. அதற்கு ஈடாக தன் வயிற்றினை கூறிய தாய் மகனை புலி என்று வீர மகனாக உருவகம் செய்கிறார். அழகிய வீரம் மிக்க பாடல்!  படித்ததும் பிடித்த ஒன்று.

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! அதுவரை வணக்கங்களுடன் விடை பெறுகிறேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. சுரேஷ் நல்ல முயற்சி, தொடருங்கள்.

    ReplyDelete
  2. தாயின் பெருமை மிக்கப் பேச்சு
    அருமை.

    ReplyDelete
  3. தாய் சொல்லும் உவமை அருமை...

    ReplyDelete
  4. தாயின் பேச்சு பெருமை மிகுந்தது அய்யா. நன்றி. திசைச் சொல் விளக்கமும் அருமை. தொடருங்கள். காத்திருக்கின்றேன். நன்றி

    ReplyDelete
  5. அவசியமான பதிவு . தொடருங்கள் தொடர்கிறோம் .

    ReplyDelete
  6. sako...!

    unmaiyil thisai sol enakku theriyaathu...

    neengal vilakkiyathu mikka payanullathaaka irunthathu...

    ilakkiyam arumaiyaaka irunthathu...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2