கனவுகள் தொலையும் தருணம்.. கார்டூனிஸ்ட் பாலாவின் பக்கத்திலிருந்து!

கனவுகள் தொலையும் தருணம்..
-----------------------------------------------------

அந்த அம்மாவுக்கு ஒரு 56 வயசுருக்கும். நெற்றியில் சின்னதா ஒரு நாமக்கோடு.. என்னநேரமும் சிரித்த முகமாக இருப்பார். அவருக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் பிறந்து இரண்டு மாத சிறுவனாக இருக்கையில் அவரின் கணவர் திடீரெனக் காலமாகிவிட்டார்.

இளம் வயதிலே கணவரை இழந்து நிராதரவாக இருந்தவருக்குப் பால்வாடியில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் வேலை கிடைத்தது. அந்த வருமானத்தில் இரண்டு பையன்களையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். அயனாவரத்தில் இருபது வருடங்களாக ஒரு சின்ன வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார்கள்.

மூத்த மகனுக்குத் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கல்பாக்கத்தில் வேலைப்பார்க்கிறார். இரண்டாவது மகனுக்கு ஓராண்டுக்கு முன் தான் திருமணமாகியிருந்தது. அவர் பெயர் ராமமூர்த்தி. சிறியளவிலான விளம்பர நிறுவனம் ஒன்றை தனியாக நடத்தி வந்தார். அவரது மனைவியும் வேலைக்குச் செல்பவர் என்பதால் ஓரளவுக்குப் பணம் வரத்துவங்கியிருந்தது. அதனால் ஒரு நல்ல வீட்டுக்குப் போகலாம் என நினைத்து கடந்த அக்டோபரில் தான் எங்கள் ஃப்ளாட்டில் வாடகைக்குக் குடிவந்திருந்தார்கள். எங்களின் எதிர் வீடு தான் அவர்களுடையது.

மூவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால் எப்போதாவது தான் அவர்களைப் பார்க்க முடியும். அதிசயமாகப் பார்த்துக்கொள்வது என்றாலும் அந்தச் சந்திப்பு அந்நியத்தன்மையற்றதாக இருக்கும். அன்பாகப் பேசுவார்கள். ராமமூர்த்திக்கு கடவுள் பக்தி அதிகம். நெற்றியில் குங்குமம், கையில் சிகப்பு கயிறு என்று பக்தி மணமாக இருப்பார். மாலை நேரங்களில் பைக்கில் கணவனும் மனைவியும் சந்தோசமாகக் கோவிலுக்குச் செல்வதைக் கவனித்திருக்கிறேன்.

அவர் மனைவி தற்போது எட்டுமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் அவர்கள் வீட்டில் சந்தோசம் நிறைந்திருந்தது. ராமமூர்த்தி மனைவி மீது அதிகப் பாசம் வைத்திருந்தார். அப்படித் தாங்குவார். அடிக்கடி உறவினர்கள் வந்து அந்தப் பெண்ணுக்கு விருந்து சடங்குகளை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

அப்படியான ஒரு தருணத்தில், ``இனி என்னம்மா.. ரெண்டு வருசத்துல எனக்கு ரிட்டயர்ட் ஆகிரும்.. அப்புறம் ரெண்டு பசங்கக்கிட்டயும் மாறி மாறி இருந்து அவங்க புள்ளைங்கள பார்த்துட்டு சந்தோசமா இருந்துருவேன்..” என்று அந்தம்மா என் மனைவியிடம் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார்..

ஆனால் ...........................................

செவ்வாய் கிழமை (7-7-12) இரவு நல்ல தூக்கத்திலிருந்த போது திடீரெனக் காலிங்க் பெல் சத்தம். எழுந்து மணி பார்த்தேன். புதன் அதிகாலை மூன்றரை மணி. இந்நேரத்துக்கு யாரு என்று கதவை திறந்து பார்த்தேன்.

``அய்யோ என் குழந்தைக்கு என்னாச்சுனு தெரியலையே’’ என்று அரற்றியபடி நின்றிருந்தார் அந்தம்மா. அருகில் அறிமுகமில்லாத இளைஞர் ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார்.

``என்னம்மா ஆச்சு’’ என்று நான் பதற்றமாகக் கேட்க, ``அய்யோ.. என் குழந்தைக்கு அக்ஸிடண்ட் ஆயிடுச்சாம்ப்பா.. கேட் சாவி கொடுப்பா..’’ என்றார் அழுதுக்கொண்டே. நான் அதிர்ச்சியாகிப்போய்ச் சாவியை எடுத்துக்கொடுத்துவிட்டு, ``நானும் வர்றேன்..’’ என்று சட்டையப்போட்டுக்கொண்டு கிளம்ப,

இப்போது அந்த இளைஞர் என்னைத் தனியாக அழைத்துச்சென்று, `` சார்.. பைக் ஆக்ஸிடண்ட்.. ராமமூர்த்தி ஸ்பாட் அவுட்.. அந்தம்மாக்கிட்ட இன்னும் விசயத்தைச் சொல்லல”என்றார். கேட்டதும் எனக்குப் பக்குனு நெஞ்சடைச்சுப்போச்சு..

மகனுக்கு கை காலில் அடிப்பட்டிருக்கும் போல என்ற நம்பிக்கையில் அந்தம்மா இளைஞருடன் கிளம்பி சென்றார். பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் என் மனைவிக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. அதிகப் பழக்கமில்லாத எங்களுக்கே இந்தச் செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியாக இருக்கையில் அவர்களின் நிலையை யோசித்தே பார்க்க முடியவில்லை.

விளபர ஆர்டர் ஒன்றை அவசரமாக முடிக்க வேண்டிய காரணத்தால் 12 மணி வரை நண்பர்களோடு இருந்து வேலையை முடித்து விட்டு, தாயார் வீட்டுக்குச் சென்றிருந்த மனைவியிடம் வீட்டுக்குச் செல்கிறேன் என்று போனில் தகவல் சொல்லி விட்டு நண்பர்களிடமிருந்து விடைப்பெற்று வெளியே வந்திருக்கிறார்.

அரும்பாக்கம் இந்தியன் ஹாஸ்பிட்டல் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த பைக்காரன் ( ? வேறு வாகனமாகவும் இருக்கலாம்) ஒருவன் இவரின் வண்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டான். ஆள் நடமாட்டமில்லாத நள்ளிரவு நேரமென்பதால் உதவிக்குக் கூட ஆளில்லாமல் அடிவயிறு மற்றும் தலையில் ஏற்பட்ட காயத்துடன் உயிருக்குப் போராடியிருக்கிறார். சில நிமிடங்களில் அந்த வழியில் பின்னாடியே வந்த நண்பர்கள் யாரோ விழுந்துக்கிடக்கிறார்கள் என்று அருகே சென்று பார்க்க.. அது ராமமூர்த்தி என்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து போயிருந்தது.. என்று மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்த நண்பர்கள் சொன்னார்கள்.

ராமமூர்த்தியின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார்.. வளைகாப்பு நிகழ்வு நடத்த தேதி குறித்து வைத்திருந்தார்கள்.. இளம் வயதிலே விதவையாகி பையன்களுக்காக வாழ்ந்து கடைசிக் காலத்தில் மகன்களின் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற அந்தம்மாவின் ஆசை என ஒட்டுமொத்தமாக அவர்களின் எல்லாக் கனவும் காலியாகிப்போனது ஒரு சின்ன விபத்தில். இப்போது அவர்கள் தங்களது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்.

மனைவி, தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை எப்படி இருக்கும் என உயிர்போகும் அந்தக் கடைசி நிமிடங்களில் அந்த மனிதன் எதைப்பற்றியெல்லாம் யோசித்திருப்பான்.. என்று யோசித்தால் அவ்வளவு ஆற்றாமையாக இருக்கிறது..

கர்ப்பமாக இருப்பதால் தகவலை மறு நாள் காலை தான் அவரின் மனைவியிடம் சொல்லியிருக்கிறார்கள்.. அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்து.. அழுது அழுது கண்ணி வற்றிப்போயிருக்கிறார்.

அந்தம்மா, `` அப்பா இல்லாத புள்ளையா வளரணும்னு நீ வாங்கிட்டு வந்த அதே வரத்தை உன் பிள்ளைக்கும் கொடுத்துட்டுப் போய்ட்டியேடா மூர்த்தி” என்று சொல்லி அழுதபோது அவர்களுக்கு நாம் என்ன ஆறுதல் சொல்லி தேற்றிவிட முடியும்..

இப்படிச் சாலை விபத்துகள் குறித்து நாளிதழ்களில் தினமும் எத்தனையோ செய்திகள் இடம்பெறுகின்றன. நமக்குத் தெரியாதவர்கள் என்றால் அது வெறும் செய்தி நமக்கு.. அதே நாம் அறிந்தவர்கள் என்றால் எத்தனை அதிர்ச்சியடைகிறோம்..

ஒவ்வொரு விபத்திலும் பலியாகும் ஒவ்வொருத்தர் பின்னாடியும் இப்படிப் பல கதைகள் இருக்கும். குறைந்த பட்சம் சாலை விபத்துகளை எங்குப் பார்த்தாலும், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவ வேண்டும் என்பதை நம் கடமையாகக் கொள்ளவேண்டும்.

சாலைகளில் பைக் ரேஸ் போகும் புண்ணியவான்களே உங்களின் போதைக்கு அப்பாவிகளின் உயிரை பலிகடாவாக்காதீர்கள். ரேஸ் நடத்துவதற்கு என்று தனியாக இடமிருக்கிறது. அங்கு உங்கள் சாகஸங்களைக் காட்டுங்கள்.. ராமமூர்த்தியை இடித்துவிட்டு தப்பிச்சென்ற அந்தப் நபர் நினைத்துக்கொள்ளலாம்.. தன்னை யாரும் பார்க்கவில்லை என்று.. ஆனால் சாகும் வரை உனது மனசாட்சி விடாது துரத்தும்.. :(
 
நன்றி ஃபேஸ்புக், கார்டூனிஸ்ட் பாலா.
 
டிஸ்கி} இது போன்ற விபத்துக்கள் சாலைகளில் சகஜமாகி விட்டன. பல பேர் வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசிக் கொண்டும் எங்கோ பார்த்தபடியும் இன்னும் சில இளைஞர்கள் இளைஞிகளுடன் வேகமாகவும் போகும் போது இவர்கள் ஒழுங்காய் வீடு போய் சேர வேண்டுமே என்று தோன்றும். இவர்கள் ஜாலியாக இருக்கலாம். இவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் என்னாகும் கொஞ்சம் யோசிக்கலாம். 
 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்குவிக்கலாமே!

Comments

 1. விபத்தை உருவாக்குபவர்கள் பாதிக்கப்பட்டதை விட, இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான் மிக அதிகம், சிறிது நேரம் யோசித்து விட்டு பொறுமையாகவே செல்லலாம்...

  நல்ல தகவல் நண்பரே, தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   Delete
 2. வேதனை தரும் சம்பவம்...

  இவ்வளவு வேகமாக சென்று, என்ன தான் சாதிக்க போகிறார்களோ...?

  ReplyDelete
 3. குறைந்த பட்சம் சாலை விபத்துகளை எங்குப் பார்த்தாலும், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவ வேண்டும் என்பதை நம் கடமையாகக் கொள்ளவேண்டும்.//

  இப்போ புது சட்டமே வந்துருக்கு, ஆஸ்பத்திரி கொண்டு சேர்த்தால் போலீஸ் கோர்ட்டு என்று அலைய தேவையில்லை...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிநண்பரே!

   Delete
 4. சாலைகளில் பைக் ரேஸ் போகும் புண்ணியவான்களே உங்களின் போதைக்கு அப்பாவிகளின் உயிரை பலிகடாவாக்காதீர்கள். ரேஸ் நடத்துவதற்கு என்று தனியாக இடமிருக்கிறது. அங்கு உங்கள் சாகஸங்களைக் காட்டுங்கள்.. ராமமூர்த்தியை இடித்துவிட்டு தப்பிச்சென்ற அந்தப் நபர் நினைத்துக்கொள்ளலாம்.. தன்னை யாரும் பார்க்கவில்லை என்று.. ஆனால் சாகும் வரை உனது மனசாட்சி விடாது துரத்தும்.. :(//


  அருமையான வாசகம்
  சாகசம் என்கிற பெயரில் எமனை
  விருந்துக்கு அழைக்கும் இளைஞர்கள்
  அவசியம் இதை மனதில் கொள்ளவேண்டும்
  அருமையான கட்டுரையை பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

   Delete
 5. சாலை விதிகளை நாமும் கடை பிடித்து ,முடிந்த வரை ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ளலாமே.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வந்து கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி!

   Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2