திருப்பாலீஸா! திருவருள் செய்வாய்!

திருப்பாலீஸா! திருவருள் செய்வாய்!

திருவள்ளூர் மாவட்டத்தின் புராதனமான தலங்களுள் ஒன்று திருப்பாலைவனம். பொன்னேரியில் இருந்து பழவேற்காடு செல்லும் சாலையில் 10கி மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பாலைவனம். ஆலயத்தின் பிரம்மாண்ட மதில் சுவரும் கோபுரமும் பேருந்தில் செல்லும் போதே நம்மை வரவேற்கும். அழகான ஆலயமான இவ்வாலயம் பையூர் கோட்ட வேளாள மரபினரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துரையின் வசம்  கோயில் உள்ளது.
  
 தல வரலாறு:
               தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து பெற்ற அமுதத்தை தேவர்கள் கைப்பற்றி அசுரர்களை ஏமாற்றிவிட்டு மறைவான இடம் தேடி உண்ண முற்படுகையில், “இறைவனை பூஜிக்காமல் உண்பது பிழையாகும்” என்பதால் தாங்கள்கொண்டு வந்த அமுதத்திலேயே ஒரு லிங்கம் பிடித்து பூஜை செய்து வழிபட்டனர். எஞ்சிய அமுதத்தை இறைவனுக்கு நிவேதனம் செய்து இறை பிரசாதமாக சாப்பிட்டனர். இந்த லிங்கம் தான் பாலீசர் என்று வழங்கப்படுகிறது. இது புராணச் செய்தி.
   நாளடைவில் தேவர்கள் அமுதம் உண்ட இடம் பாலைக்காடாக மாறிவிட்டது. அந்த பாலை மரங்களில் ஒன்றில் இறைவன் மறைந்திருந்தான். வாசுகி என்ற பாம்பிற்கு தான் மறைந்திருக்கும் செய்தியை தெரிவிக்க வாசுகியும் இங்கு வந்து வழிபட்டு சென்றது. இதை மாணிக்க வாசகர்
    அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
    சுந்தர வேடத்து ஒருமுதல் உருவு கொண்டு
    இந்திர ஜாலம் வந்தருளி
    எவ்வெவர் தன்மையும் தன் வாயிற்படுத்துத் 
    தானே யாகிய தயாபரன்  எம்மிறை
    சந்திர தீபத்துச் சாத்திரனாகி
    அந்தரத்திழிந்து  வந்தழகமர் பாலையுள்
    சுந்தரத் தன்மையோடு துதைதிருந் தருளியும்

என்று தமது கீர்த்தி திரு அகவலில் பாடி வெளிப்படுத்தியுள்ளார்.
 பாடலின் பொருள்: அழிவற்ற நிலைத்த பெருமையுடைய சிவபெருமான் தமது தீவண்ணமேணியை மறைத்து அழகானத் திருமேனி தாங்கி தானே உலக முதல்வன் என்பது விளங்கத் தோன்றி இந்திர ஜாலத்தை காட்டுபவன் அந்த வித்தையில் தான் சாரது இருப்பது போல  தான் மட்டும் உலகமாயைக்கு ஆட்படாமல் நின்று மற்ற உயிர்களுக்கு மாயையுக்குள் ஆட்படுத்தி பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் , இந்திரன், ஆகியோரின் இயல்புகளை தன் பால் அடக்கி தான் மட்டுமே மேலாக உயர்ந்து நிற்கும் சுயம்புவாகி (தான்தோன்றி) குளிர்ச்சி தருகின்ற சந்திர கிரகணம் போன்ற குளுமையான இயல்பை பொழியும் வெண்மையான வடிவமாக கயிலாயத்திலிருந்து இப்பூவுலகிற்கு இறங்கி வந்து பாலை மரத்தில் மறைந்திருந்தான்.

ஆலயம் தோன்றிய வரலாறு:  முதலாம் ராஜேந்திர சோழ மன்னன் தனது பெரும்படையுடன் வடபுலம் சென்று வெற்றிக் கொடி நாட்டி திரும்பிய போது இப்பாலைமரக்காட்டில் தங்கி ஓய்வெடுத்தான். அது சமயம் ஒரு பாலைமரத்தில் கட்டிவைக்கப்பட்ட யானை மூர்ச்சை அடைந்து விழுந்தது. அம்மரத்தில் ஏதோமர்மம் இருப்பதை மன்னன் உணர்ந்து அம்மரத்தை வெட்டுமாறு வீரர்களை பணித்தான். கோடாலி பட்ட இடத்திலிருந்து குருதி வெளிப்பட்டது. உடனே அரசன் மரத்தை வெட்டுவதை நிறுத்திவிட்டு அகழ்ந்து பார்த்தான்.  அங்கு தேவர்களால் பிடிக்கப்பட்ட லிங்கத்தில் கோடாலி பட்டு குருதி வழிவதைக் கண்டு மனம் பதைத்தான். பெரும் தவறு செய்து விட்டோமே என்று வருந்தி  அதற்கு பிராயச்சித்தமாய் ஒரு கோவிலை எழுப்பி ஆராதனைகள் செய்தான். இறைவனின் முகத்தில் இன்றும் கோடாலி பட்ட தழும்பு காணப்படுகிறது.
  லிங்கம்பால் வடிவில் வெண்மையாக காட்சி தரும்.
தூங்கானை மாட வடிவில் ஆலய்த்தின் கருவறை உள்ளது. கஜபிருஷ்டம் என்று சம்ஸ்கிருதத்தில் கூறுவார்கள்.
   அன்னை லோகாம்பிகா கருணை வடிவாக காட்சி தருகிறாள். அன்னை சன்னதி மற்றும் சுவாமி சன்னதிக்கும் தனித்தனி  உட்பிரகாரங்கள் உண்டு. பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி துர்க்கை போன்ற தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது.ஆலய மண்டபத்தில் உள்ள கதவிற் கணபதியின் மூர்த்தி சிறிதாகிலும் கீர்த்தி பெரிதாகும். இவரை வணங்கி செய்யும் காரியங்கள் விக்கினமின்றி நிறைவேறும்.நினைத்ததை கொடுக்கும் வல்லமை இந்த கணபதிக்கு உண்டு.
  வெளிப்பிரகாரத்திலும் வினாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், பைரவர், நவகிரகம்  போன்ற சன்னதிகள் உள்ளன.இவைகள் தற்போது புதுப்பிக்கபட்டு புது விமானங்களுடன் காட்சி தருகின்றன. பிரதோஷ நாயகர் நந்தியெம்பெருமான்  உள்ளார்.  நவதள வில்வம், பாலை, ஆல மரங்கள் உள்ள இவ்வாலயத்தில் நந்த வனமும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.
   கோசாலை ஒன்றும் உள்ளது. ஆலயத்தின் முகப்பில் பதினாறு கால் மண்டபம் சிறப்பாக உள்ளது. எதிரில் அமைந்துள்ள அமிர்த புஷ்கரணி தீர்த்தம் செவ்வல்லி மலர்களால் நிரம்பி உள்ளது. இந்த குளத்தில் மீன்கள் இல்லை என்பது பெரும் விசேஷம் ஆகும்.
   நுழைவாயில் கோபுரமும் சிற்பங்களும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கண்ணுக்கு இனிமையாகவும் மனதிற்கு நிறைவு தருவதாகவும் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பெருமானை தரிசனம் செய்து திருவருள் பெறுவோமாக!

ஆலயத்திற்கு செல்லும் வழி: போன்னேரி பேருந்துநிலையத்தில் இருந்து செல்லும் பழவேற்காடு செல்லும் பேருந்துகள்திருப்பாலைவனம் வழியாக செல்கின்றன. செங்குன்றத்திலிருந்தும் 558பி என்ற பேருந்து திருப்பாலை வனம் செல்கிறது.
558,558பி, 58சி, 56பி, 95 ஏ, சுந்தரம் 28 என்ற எண்ணுள்ள பேருந்துகள் .

ஆலயம் திறந்திருக்கும் நேரம்: காலை 8. மணிமுதல் 12 மணி வரை
                           மாலை 5 மணி முதல் 7 மணிவரை.

திருப்பாலைவனம் செல்வோம்! திருப்பாலீசன் அருள் பெறுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே!


Comments

  1. கிரஹ கோளாறினால் தலைமறைவு வாழ்க்கை மற்றும் இடம் பெயர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பவர்களுக்கு இவ்வாலய இறைவனை பரிஹாரமுறைப்படி வழிபட மும்மண்டல காலத்தில் மாற்றம் நிகழும் அற்புத திரு ஆலயத்தினை பகிர்ந்த எம் தோழருக்கு மனமார்ந்த நன்றி! தொடருங்கள் தோழரே!

    ReplyDelete
  2. நல்ல புதிய தகவல்கள்

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு... பேருந்து விவரம் கொடுத்ததற்கும் நன்றி...

    திரு கிருஷ்ணா ரவி ஐயா அவர்களின் கருத்தும் அறிந்தேன்...

    ReplyDelete
  4. சிறப்பான பகிர்வு...

    ReplyDelete
  5. நானும் தரிசனம் கண்டேன் சிறப்பான பகிர்வு அண்ணா

    ReplyDelete
  6. முதல் படத்தில் உள்ள குளம் மன நிறைவை தருகிறது. குளங்கள் பராமரிக்கபட்டால் நிலத்தடி நீர் வற்றாமல் இருக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2