பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 6

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 6
 முந்தைய பகுதிகள் படிக்க லிங்க்:


உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதை: பஞ்செட்டியில் வசிக்கும் முகேஷ் டி வியில் ஆவிகள் சீரியல் பார்க்கும் வரும் அவனது நண்பன் ரவி கிண்டல் செய்கிறான். அப்போது கரண்ட் ஆப் ஆக ரவியை பேய் பிடித்துக் கொள்கிறது. அவன் ஓட ஆரம்பிக்கிறான். இரண்டு கி.மீ தொலைவில் வீரபத்திரர் கோயில் அருகில் அவனை பிடித்து உடன் ஒரு பெரியவரையும் துணைக்கு அழைத்து வருகிறான் முகேஷ். அவனது வீடு வந்த பின் அந்த பெரியவர் மாயமாய் மறைகிறார். அதே சமயம் ராகவனின் நண்பன் வினோத் ஒரு பெண்ணை அழைத்து வருகிறான். அந்த பெண்ணும் பேய் பீடித்தார் போல வித்தியாசமாக நடந்து கொள்ள ஊரே ராகவனை துக்கம் விசாரிக்கையில் அவனது நண்பர் தனது பேத்திக்கு நடந்த சம்பவம் பற்றி கூறுகிறார். இனி.

   முகேஷ் மிகவும் பயந்து போயிருந்தான். அவனுடன் வந்த பெரியவரை காணவில்லை! உள்ளே நுழையும் போது ரவியை பார்த்து நாய்கள் பயங்கரமாக குரைக்க ஆரம்பித்தது. அவனுக்கு வேர்த்து வழிந்தது. இன்று யார் முகத்தில் முழித்தோமோ தெரியலை? வீட்டுல அப்பா அம்மாவும் இல்லே சரியான சமயத்தில இந்த ரவி பயல் வந்து நம்மை இந்த ஆட்டு ஆட வைக்கிறானே என்று மனதில் புலம்பிக் கொண்டிருந்தான். வேறு என்ன செய்ய முடியும் உள்ளே நுழைந்தான். வா ரவி என்று அழைத்தான்.
   ரவி அதை காதில் வாங்காதது போல இருந்தான். ரவி உன்னை தான்! வா! காலையில நீ வீட்டுக்கு போகலாம்.இப்ப இங்கேயே படுத்து தூங்கு என்றான்.  ரவி அரை மனதாக உள்ளே வந்தான். முகேஷ் பாத்ரூம் போய் கால் கழுவி வந்தான். ரவி நீயும் போய் கழுவி வா என்றான்.
  ரவி பாத்ரூமிற்குள் சென்றான். முகேஷ் சுவரில் தொங்கிய கடியாரத்தை பார்த்தான். மணி நள்ளிரவு 1ஐ கடந்து இருந்தது. ஆங்கில கணக்குப்படி விடிந்து விட்டது. நாய் இன்னும் குரைத்துக் கொண்டே இருந்தது. இவனுடைய வாழ்நாளில் இந்த நேரத்திற்கு முழித்துக்கொண்டு இருந்ததில்லை. அத்துடன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததும் இல்லை.
   அவன் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. பூஜையறைக்குள் சென்றான். சுவாமி படம் முன் காமாட்சி விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அவன் வீட்டில் சதா விளக்கு எரிந்து கொண்டு இருக்கும். ஒரு ஊதுபத்தியை கொளுத்தி சாமி படம் முன் வைத்து விட்டு சிறிது கற்பூரம் ஏற்றி சாமிக்கு காட்டினான். பின் அங்கிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டான்.
   திடீரென முதுகில் எதுவோ குத்துவது போல தோன்ற திரும்பினான் முகேஷ். அங்கு இவனை வெறித்துப்பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ரவி.
   ஒரு முறுவலுடன். ரவி இந்தா விபூதி என்று அவன் நெற்றியில் பூசிவிட்டு வா படுத்துக்கலாம் என்று பெட் ரூமிற்குள் நுழைந்தான் முகேஷ். மவுனமாக பின் தொடர்ந்தான் ரவி.
   நேரம் ரொம்ப ஓடிப்போயிடுச்சு! காலையில் வேளைக்கு போகனும் சீக்கிரம் எழுந்துக்கணும். படுத்துக்கோ ரவி என்று கட்டிலில் ஒரு ஓரமாக விழுந்தான் முகேஷ்.
சிறிது நேரத்தில் முகேஷ் தூங்கி போனான். மாலையில் இருந்து நிகழ்ந்த நிகழ்வுகள் அவனுக்கு அலுப்பை தந்து உறங்க வைத்தன. ரவியால் தூங்க முடியவில்லை! அவனுக்குள் ஏதோ ஒன்று புகுந்தார் போல தோன்றியது.
   உடலே பாரமானது போல உணர்ந்தான். அரைமயக்க நிலையில் அவன் இருந்தான். அப்போது ஒரு குரல் அவனை எழுப்பியது. ரவி நீ ஏன் தூங்கறே உனக்கு நிறைய வேலை இருக்கு வா என் கூட என்று அது அழைத்தது.
      ரவியின் வாய் குழறியது.. நீ. யாய்!.. யாருய்.. என்று உளறினான்.
  நான் தான் உன் உடலில் இருக்கிற நண்பன் ஆவி! நீ பயப்படாதே என் காரியம் முடிஞ்சதும் நானே போயிடுவேன். எனக்கு உன்னோட ஒத்துழைப்பு வேணும் என்று குரல் அவன் காதில் ஒலித்தது.
   எ.. என்ன.. ஒத்துழைப்பு?
நான் பழிவாங்கணும் !
யா.. யாரை ?
அது இப்ப உனக்கு தேவையில்லை! நீ எழுந்திரு! என் கூட வா! அவனை உனக்கு காட்டறேன்! தனியா வசமா வந்திருக்கான்! வா போயி சாச்சிட்டு வந்துருவோம்!
  என்னால மு.. முடியா.. து!
  இந்த நண்பனுக்கு உதவ மாட்டியா? கண்டிப்பா நீ வருவே!
வா! நண்பா! அவனை முடிச்சதும் உனக்கு விடுதலை! உன்னை விட்டு போயிடறேன்!
  எ.. எப்படி நம்பறது?
நம்பிக்கைதானே வாழ்க்கை நண்பா!
வா ரவி! இன்னிக்கு அமாவாசையா இருந்தா விசேஷமா இருக்கும்! அஷ்டமியா போச்சு! இருந்தா என்ன? வா போகலாம் வா!
  இது எதுவும் முகேஷிற்கு தெரியவில்லை அவன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். ரவி மெதுவாக அவனை பார்த்தான்.
  நீ ஏன் அவனை பார்க்கிறே! வேண்டாம்! அவன் இப்ப எழுந்துக்க மாட்டான்! வா நமக்கு நேரம்  போயிட்டே இருக்குது. வா?
   ரவி எழுந்தான். நடக்க ஆரம்பித்தான். கதவை திறந்து கொண்டு அங்கிருந்த ஸ்பெலண்டரை ஸ்டார்ட் செய்து கிளம்ப ஆரம்பித்தான். இது எதுவுமே அறியாது ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தான் முகேஷ்.


 கோயில் படிக்கட்டில் அமர்ந்து தனது பேத்திக்கு நடந்ததை சொல்லிக் கொண்டிருந்த மணி, சில நொடிகள் பேச்சை நிறுத்தினார். ஏம்பா ராகவா! நம்ம  மூணு பேருதானே இங்க இருந்தோம். வேற யாரும் இல்லயே? என்றார்.
   எதுக்கு கேக்கறீங்க? இதை நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்ற ராகவன். வித்தியாசமாக உணர்ந்தான். ஏதோ மல்லிகைப் பூ வாசம் அடிக்கிறாப்பொல தெரியுது! வினோத் நீ ஏதாவது செண்ட் பூசி  இருக்கியாடா? என்றான்.
  அட நீ வேற! நானே நொந்து கிடக்கேன்! இதுல செண்ட் எங்க அடிக்கிறது?
மணி ராகவனை பார்த்து சிரித்தார்! தம்பி நான் கேட்டது இதுக்குத்தான்! இங்கன யாரோ கண்ணுக்கு தெரியாம இருக்காங்க! அதான் மல்லி வாசம் வீசுது!
  இதென்ன பெரியவரே பீதியை கிளப்பறீங்க!
ஆமாம் தம்பி! பேய் பிசாசுகளோட வேலையே இப்படி வாசம் வீசுறதுதான்! அதனாலதான் இந்த மாதிரி செண்ட் அடிச்சிகிட்டு மல்லிப்பூ வச்சிகிட்டு வெய்ய நேரத்துலயும் இருட்டுன பொழுதிலயும் தனியா போகக்கூடாதுன்னு சொல்லுவாங்க தம்பி!
   அட இது வித்தியாசமா இருக்கே!
இதுல என்ன வித்தியாசம் இருக்கு தம்பி! பேய்ங்களுக்கு இந்த மாதிரி வாசனையும் பிடிக்கும் கருவாடு மீன் வாசனையும் பிடிக்கும் இதுக்கும் ஒரு கதை இருக்கு தெரியுமா என்றார்.
   நீங்க உங்க பேத்தி கதையே சொல்லி முடிக்கல அதுக்குள்ளே வேற சப்ஜெக்டுக்கு தாவுறீங்களே? என்றான் வினோத்.
  பேத்தி கதை அப்பறம் பேசிக்கலாம்! இப்ப நாம பேசறதை யாரோ ஒட்டு கேக்கிறாங்க! அதனாலதான் மாத்தி பேசறேன் என்று குரல் தாழ்த்தி சொன்ன பெரியவர் மணி தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
   நம்ம ஊருல நடந்த கதை தான் இது. ரைஸ்மில் தாண்டி கொத்தவால் சாவடியார் தோப்பு இருக்கு இல்லை!
  ஆமாம் இருக்கு அங்க ஒரு பெரிய புளிய மரமும் இருக்கு என்றான் ராகவன்.
 ஆம்! அந்த புளிய மரத்துலதான் ஒரு பேய் இருக்கு! ராத்திரியிலே தனியா வர்ரவங்களை அது படுத்துற பாடு இருக்கே!
  நீங்க எப்பவாவது அதுங்கிட்ட மாட்டியிருக்கீங்களா?
நான் மாட்டலை நான்வேற விதமா மாட்டியிருக்கேன்! இந்த பொம்பளை பேயி கதையை கேளுங்க!
  பொம்பளை பேயின்னு உங்களுக்கு எப்படி தெரியும் பெரியவரே?
இப்படித்தான் இடக்கு மடக்கா கேள்வி கேக்கப்படாது! பாத்தவங்க சொன்னதுதான் நானா போயி நேரடியா பாத்து வந்தேன்!
  நீங்க சொல்லுங்க பெரியவரே! இவன் கிடக்கான் என்றான் ராகவன்.
அந்த புளிய மரத்துல ஒரு பொம்பளை பேயி இருக்குன்னு ஊரெல்லாம் ஒரே பேச்சா இருந்துச்சு ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாலே  ராவாணா பதினோறு மணிக்கு மேல அந்த பக்கம் தனியா போகவே எல்லோருக்கும் பயம் கையில தடி டார்ச் கால்ல செருப்பு இத்தனையும் கூட ஒரு பேச்சு துணையும் இருந்தாத் தான் அந்த பக்கம் போவாங்க!
   அப்படி என்ன பண்ணுச்சு அந்த பொம்பளை பேயி?
  அது நைட் ஷிப்ட் முடிஞ்சு சைக்கிள்ள வரவங்க பின்னாடி ஏறி உக்காந்துக்குமாம்! சைக்கிள் மிதிக்க மிதிக்க நகரவே நகராதாம் நம்ம ஆளுங்க மிதிச்சி களைச்சி போயி திரும்பி பார்த்தா இது சைக்கிளை இழுத்து புடிச்சிகிட்டு நிக்குமாம் தலையை விரிச்சு போட்டுகிட்டு ஆளுங்க அப்படியே மிரண்டு சைக்கிளை போட்டுட்டு ஓடுவாங்களாம்! ஆனாலும் அது துரத்திகிட்டே நம்ம போரியம்மா கோயில் வரைக்கும் ஓடியாருமாம்.
 அதுக்கப்புறம் காணாம போயிருமாம்.
  மிரண்டு வந்தவங்க  காய்ச்சல்ல விழுந்து திரும்ப வேலைக்கு போக ஒரு வாரம் ஆகிடுமாம்! அதுக்கப்புறம் அவங்க நைட் ஷிப்ட் போனாலும் பொழுதோட கிளம்பி போயிடுவாங்க காலையில தான் வருவாங்க என்றார் மணி.
  ஆச்சர்யமா இருக்கே!
  இதுல என்ன ஆச்சர்யம் தம்பி! ஆத்மா கெட்டதுங்க! இப்படித்தான் ஆவியா அலையும் அதுங்க ஆசை நிறைவேறாம அறைகுறையா போயிடுது இல்லே அதனால இப்படி அலைஞ்சிகிட்டு இருக்குதுங்க!
   இன்னொரு கதை கேளு! என் ப்ரெண்ட் ஒருத்தனுக்கு கருவாடுன்னா உசுறு! ஒருநா மெட்ராஸ்ல ஏதோ வேலையா போனவன் திரும்ப வரும்போது மார்க்கெட்ல ஒரு கிலோ கருவாடு வாங்கிட்டு கடைசி பஸ்ஸீக்கு பஞ்செட்டியில வந்து இறங்கி இதே போல சைக்கிளை எடுத்துகிட்டு வந்து இருக்கான்.
  ராத்திரி பதினோரு மணி ஆயிருச்சு அவனுக்குஇந்த நேரத்துல ஆவிங்க நடமாட்டம் இருக்குமுன்னு தெரியலையோ இல்லை தெனாவட்டோ தெரியலை!
 அப்படியே எம். ஜி. ஆர் பாட்டு பாடிகிட்டு அந்த புளியமரம் கிட்ட வந்துட்டான். அதுவரைக்கும் நல்லா போயிகிட்டிருந்த சைக்கிள் அப்படியே ஸ்லோ ஆயிடுச்சு! என்னடா சைக்கிள்ல காத்து இல்லையோன்னு இறங்கி பாத்துருக்கான். சரியாத்தான் இருக்கு. திரும்பவும் ஏறி மிதிக்க சைக்கிள் நகரவே இல்ல!
 இறங்கலாம்னு திரும்பி பாத்துருக்கான்!
  அந்த பேயிதான் அவன் பின்னாடி சைக்கிளை பிடிச்சி இழுத்தபடி! எங்கே அவசரமா போறே எனக்கு ரெண்டு கருவாட்ட தந்துட்டு போ! ன்னு கேட்டுச்சாம்!
பெரியவர் சொல்ல சொல்ல ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தனர் ராகவனும் வினோத்தும்!
                                     மிரட்டும் (6)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ரொம்ப தான் மிரட்டுறீங்க சார்... நன்றி... தொடருங்கள்...

    ReplyDelete
  2. நீங்கள் எத்தனை தரம் எழுதினாலும் நம்பவே மாட்டேன்.இது ஒரு நகைச்சுவையாகவே இருக்கு எனக்கு !

    ReplyDelete
    Replies
    1. சுவிஸ்ட்சர்லாந்துக்கு பேய் ஒரு பார்சல்! இதில் வரும் சம்பவங்கள் பல உண்மை சகோதரி!

      Delete
  3. ம்ம்ம் தொடர்ந்து மிரட்டுங்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2