சித்துண்ணி கதை! பாப்பாமலர்!
சித்துண்ணி கதை!
நாடோடிக் கதைகள் வரிசையில் இதுவும் ஒரு
சிறப்பான கதை! என்பாட்டி சிறிய வயதில் சொன்னது இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை ரசிக்கும் இந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு. ஒரு நாள்
அவரு காட்டுல நடந்து போயிகிட்டிருந்தாரு. நல்ல வெயிலானதால அவருக்கு ரொம்ப களைப்பு
ஆயிருச்சு. ஒரு மரத்துக் கீழ அப்படியே படுத்து தூங்க ஆரம்பிச்சாரு. கண் அசருர
சமையத்துல வெறுங்கொட்டையா அவரோட தலை மேல விழுந்துச்சு. ‘தலையில என்னடா இப்படி
விழுதேன்னு’ மேல பார்த்தாரு.
ஒரு சின்ன சித்துண்ணி பறவை மரத்து பழத்தையெல்லாம் தின்னுட்டு கொட்டைங்களை
கீழ துப்பிக்கிட்டு இருந்துச்சு. ராஜாவுக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. இவ்வளவு
சின்ன பறவைக்கு அவ்வளவு திமிரா? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா நான் ஒரு
ராஜான்னு கூட பார்க்காம என் தலைமேல கொட்டைய போடுவேன்னு அதட்டுனாரு.
ஆனா அது பயப்படாம அப்படியே உக்காந்துகிட்டு இருந்துச்சு!
ராஜா அவசர அவசரமா மரத்துல ஏறினாரு
சித்துண்ணி கழுத்தை பிடிச்சுதூக்கிக்கொண்டுபோய் சேறும் சகதியுமா இருந்த இடத்துல
போட்டு காலால மிதிச்சாரு மிதிச்சுட்டு,
சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ? ன்னு கேட்டாரு.
“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?
என் வயிறு நிறைய பழம் சாப்பிட்டு
உன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்து
இப்ப சேத்துல உழுகிறேன்” அப்படின்னு
சித்துண்ணி துடுக்கா பதில் சொல்லுச்சு.
உடனே ராஜா, இந்த சித்துண்ணிக்கு எவ்வளவு ஆணவம்? னு அங்க இங்க பார்த்தாரு
பக்கத்துல சின்ன ஓடையில தண்ணி ஓடிகிட்டு இருந்துச்சுஅதுல கொண்டு போய் அந்த பறவையை
போட்டு
“சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?”ன்னு
கேட்டாரு.
“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?
என் வயிறு நிறைய பழம் தின்னு
உன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்து
சேத்துல உழுது
இப்ப சின்ன ஆத்துல கால் கழுவறேன்”
அப்படின்னு அது பாட்டா பாடுச்சு.
ராஜாவுக்கு கோபம் தாங்கலை! “உனக்கு இது சின்ன ஆறா? இதுல நீ கால வேற
கழுவறீயா?ன்னு கேட்டுட்டு அதை தூக்கிக்கிட்டு கொஞ்ச தூரம் நடந்தாரு பெரிய ஆறு
ஒண்ணு கண்ணுல பட்டது. அதுல சித்துண்ணிய தூக்கி போட்டாரு. இந்த ஆறு கண்டிப்பா
அடிச்சிட்டு போயிடும்னு நம்பி “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு.
““நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?
என் வயிறு நிறைய பழம் தின்னு
உன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்து
சேத்துல உழுது சின்ன ஆத்துல கால் கழுவி
இப்ப பெரிய ஆத்துல குளிக்கிறேன்”
அப்படின்னு சித்துண்ணி நிதானமா சொல்லுச்சு.
ராஜாவுக்கு கோபம் தீந்த பாடில்லை! அதிகமாகி ஆத்தங்கரையில் ஒரு பாறை
இருந்துச்சு. வெயில் அடிச்சி சூடா இருக்கவும் இதுல தூக்கி போட்டா சித்துண்ணி
செத்துடும்னு அதை பிடிச்சி பாறை மேல வீசி எறிஞ்சாரு. எப்பவும் போல கேட்கவும்
செஞ்சாரு. “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?”
“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?
என் வயிறு நிறைய பழம் தின்னு
உன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்து
சேத்துல உழுது
சின்ன ஆத்துல கால் கழுவி
பெரிய ஆத்துலகுளிச்சு
இப்ப கல்லுல துணி துவைக்கிறேன்”ன்னு
சந்தோஷமா சொல்லுச்சு.
“நீ துணி வேற துவைக்கிறயா? என்று கோபப்பட்ட ராஜா சித்துண்ணிய பிடிச்சு ஒரு
முள்ளுக்காட்டுக்குள்ளே கொண்டுபோய் போட்டாரு. பிறகு “சித்துண்ணி சித்துண்ணி
செத்தாயோ?” ன்னு கேட்டாரு.
“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?
என் வயிறு நிறைய பழம் தின்னு
உன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்து
சேத்துல உழுது
சின்ன ஆத்துல கால் கழுவி
பெரிய ஆத்துலகுளிச்சு
கல்லுல துணி துவைச்சு
இப்ப முள்ளுல காயப்போடுறேன்”ன்னு
அலட்சியமா பதில் சொல்லுச்சி அந்த சின்ன சித்துண்ணி குருவி.
சித்துண்ணி சொன்ன பதில் கேட்டு ராஜாவுக்கு கோபம் உச்சிக்கு ஏறிடுச்சு.
ஆத்திரத்துல மூக்கு சிவக்க சித்துண்ணிய
எரியற அடுப்பில கொண்டு போய் போட்டாரு போட்டுட்டு வழக்கம் போல “சித்துண்ணி
சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு.
அதுக்கு சித்துண்ணி,
என் வயிறு நிறைய பழம் தின்னு
உன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்து
சேத்துல உழுது
சின்ன ஆத்துல கால் கழுவி
பெரிய ஆத்துலகுளிச்சு
கல்லுல துணி துவைச்சு
முள்ளுல காயப்போட்டு இப்ப அடுப்பில
குளிர் காயறேன்” அப்படின்னு சொல்லுச்சு.
ராஜாவுக்கு ஆத்திரம்னா அப்படி ஒரு ஆத்திரம் என்ன
செய்யறதுன்னே தெரியலை அதை பிடிச்சு கொண்டு போய் காத்துக்கூட போக முடியாத ஒரு
பெட்டியில போட்டு மூடி “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு.
“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?
என் வயிறு நிறைய பழம் தின்னு
உன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்து
சேத்துல உழுது
சின்ன ஆத்துல கால் கழுவி
பெரிய ஆத்துலகுளிச்சு
கல்லுல துணி துவைச்சு
முள்ளுல காயப்போட்டு
அடுப்பில குளிர் காய்ஞ்சு
இப்ப பொட்டிகுள்ள உட்கார்ந்து
பொட்டு இட்டுகிட்டு இருக்கேன்
அப்படின்னுகொஞ்சம் கூட பயப்படாம
சொல்லுச்சு.
“நீ அடங்கவே மாட்டியா?”ன்னு ராஜா
சித்துண்ணிய தூக்கிட்டு ரொம்ப தூரம் போனாரு. “இனி இத விடக்கூடாது”ன்னு
வைராக்கியத்தோட போனாரு.
அங்க ஒரு பெரிய அரிசி ‘மில்’ இருந்துச்சு. “சித்துண்ணிய இந்த மில்லுல போட்டு
பொடிப்பொடியா அரைச்சிட வேண்டியதுதான்!” ன்னு அதுல போடப் போனாரு.
போடற சமயத்துல அது ‘விர்ரு’ண்ணு பறந்து போய் மில்லு கூறை மேல
உட்கார்ந்துகிச்சு! ராஜா அங்க இங்க தேடிப்பார்த்துட்டு பரிதாபமா மீண்டும் கேட்டாரு
“சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?”
“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?
என் வயிறு நிறைய பழம் தின்னு
உன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்து
சேத்துல உழுது
சின்ன ஆத்துல கால் கழுவி
பெரிய ஆத்துலகுளிச்சு
கல்லுல துணி துவைச்சு
முள்ளுல காயப்போட்டு
அடுப்பில குளிர் காய்ஞ்சு
பொட்டிகுள்ள உட்கார்ந்து
பொட்டு இட்டுகிட்டு இப்ப
ஜாலியா சுதந்திரமா பறந்து போறேன்!
இனிமே உன்னால என்ன ஒண்ணும் செய்யமுடியாது”
அப்படின்னு சொல்லிட்டு பறந்தே போயிடுச்சு.
ராஜா ரொம்ப ஏமாந்து போய் பேசாம அவரு ஊருக்கே
திரும்பி போயிட்டாரு.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! திரட்டிகளில் வாக்களித்து
பிரபலப்படுத்துங்கள்! நன்றி!
குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் இந்தக் கதையை.ஆனால் என்ன நீதி இருக்கிறது இந்தக் கதையில் ?அது தெரிந்தால் இன்னும் நல்லது !
ReplyDeleteசின்ன பசங்க குறும்பை பெருசா எடுத்துக்க கூடாது என்பது தான் நீதி!
Deleteகருத்துக்கு நன்றி சகோ!
:))))))))
ReplyDeleteஎன்ன சொல்றீங்க? புரியலை! நன்றி!
Deleteகதை நல்லா வீட்டிருக்கீறர்கள். “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?”
ReplyDeleteநன்றி நண்பா! முதல் வருகைக்கு நன்றி!
Deleteகத நல்லாத்தானே இருக்கு! குழந்தைகளுக்கு போரடிச்சா சொல்லலாமே!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!
Deleteகருத்துமிக்க கதை அண்ணா பகிர்வுக்கு மிக்க நன்றிகள்
ReplyDeleteஎப்படி அண்ணா தினமும் புதுசு புதுசாய் வாழ்த்துகள் அண்ணா தொடருங்கள்