ரயில் சினேகம்!
ரயில் சினேகம்!
ருஸ்கின் பாண்ட்
தமிழில்:தளிர்அண்ணா.
நான் எனது கல்லூரியின் கோடை விடுமுறையின் நாட்களை கழிக்க எனது பாட்டியின் மலை சூழ்ந்த ஊரான ‘ஷிவாலிக்’ குன்றுக்கு செல்வது வழக்கம். ‘மே’ மாதத்தில் டெல்லியை விட்டு விலகி இருக்கவே நான் விரும்புகிறேன். ‘ஷிவாலிக்’கில் விடுமுறையை கழித்து விட்டு ஜூனில் டெல்லிக்குத் திரும்புவேன். ‘ஷாம்லி’ எனும் அந்த ரயில் நிலையம் எனது ஊரிலிருந்து நாற்பது மைல் தொலைவில் இருந்தது. அங்கிருந்துதான் ‘ஷிவாலிக்’ குன்றுகள் தொடங்குகிறது.
நான் செல்லும் ரயில் எப்பொழுதும் ஷாம்லியை சென்றடையும்பொழுது காலை 5 மணியாகிவிடும்.அப்பொழுது அந்த ஸ்டேஷன் மங்கலாக ஒரு40 வாட் பல்ப் வெளிச்சத்தில் அல்லது ஹரிக்கேன் விளக்கினொளியோடு காட்சி தரும் அந்த ஒளியையும் அந்த ரயில் நிலையத்தைசுற்றியுள்ள காடுகள் மறைத்து விடும். அது ஒரு சிறிய ரயில் நிலையம் ஒரே பிளாட்பார்ம் கொண்ட அந்த ஸ்டேஷனில் ஒரு ஸ்டேஷன்மாஸ்டர்,டீக்கடை,பழக்கடை ஒரு சிலநாய்களோடு காட்சியளிக்கும் இங்கு ரயில் 10நிமிடமே நிற்கும்.
அப்படி ஒருநாள் நான் பயணப்பட்டு ஷாம்லி ரயில் நிலையத்தை அடைந்தபோதுதான் அவளைச் சந்தித்தேன்.ஒர் குளிர்ந்த காலைப்பொழுதில் அப்பெண் ஓர்சால்வையை தனது மார்பின் மேல் தோள்களுக்கு குறுக்காக போர்த்தியபடி நடந்துகொண்டிருந்த்தாள்.அந்த சால்வை அவளது ஆடையில் இருந்த கிழிசல்களை மறைப்பதற்காக அணிந்திருந்தாள்.அவளது ஆடைகள் அழுக்கடைந்து பழசாக இருந்தாலும் அவள் இளமையாக இருந்தாள்.அவளது நடையில் நளினமிருந்ததுஅதே சமயம் ஒர் கண்ணியமிருந்தது.
அவள் நேராக என்னுடைய பெட்டியின் ஜன்னலருகே நின்று என்னை உற்றுப்பார்த்தாள்.ஆனால் பார்க்காததுபோல் பாசாங்கு செய்தாள். அவள் மாநிறமாக கருத்த பளபளப்பான கூந்தலோடு பிறரை கவர்ந்திழுத்து சங்கடத்திலாழ்த்தும் விழிகளோடு இருந்தாள். முடிவில் அந்த விழிகள் வலிமையுடன் என்னைத் தேடின. தொடர்ந்து அப்பெண் என்னைக் கவனித்தாலொழிய எதுவும் கூறாததால் நான் எழுந்து ரயில் பெட்டியின் கதவருகே நின்று அவளைக் கவணித்தேன். அப்பொழுதும் அவள் தயங்கி நிற்க நான் பெட்டியைவிட்டு இறங்கி டீக்கடை முன் சென்றேன்.
டீக்கடையில் வியாபாரம் மும்முரமாய் இருக்க நான் அப்பெண்ணை கவனிக்கலானேன். அந்தப் பெண் என்னருகே வந்து நீங்கள் ஒரு கூடை வாங்கிக் கொள்ள முடியுமா? ரொம்பவும் உறுதியானது,நல்ல பிரம்பால் முடையப்பட்டது என்றாள். நான் வேண்டாம் என்றேன். அவளுக்கு என்னுடய வயதுதான் இருக்கும் எனவே கூச்சத்துடன் நம் வயதொத்த வாலிபனிடம் இப்படி நிற்க வேண்டியுள்ளதே என்று வெட்கத்துடன் தயங்கித் தயங்கி உங்களுக்கு கண்டிப்பாக கூடை தேவைப்படாதா? என்றாள்.
அவள் அப்படி கேட்டவிதம் பரிதாபமாக இருந்தது. சரி ஒரு கூடை வாங்கிக்கொள்கிறேன் என்றபோது அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.நான் பணம் தருகையில் அவளது மென்மையான விரல்கள் என்னைத் தீண்டின, அவள் வாய் திறந்து எதோ கூறும் முன் கார்டு விசில் ஊதவே நான் அவசரமாக என்னுடைய பெட்டிக்குள் ஏறி அமர ரயில் குலுக்கலுடன் நகரத்தொடங்கியது.
நான் ஜன்னல் வழியே பிளாட்பார்மை நோக்க அப்பெண் அங்கேயே நின்று என்னைப்பார்த்துக்கொண்டிருந்தாள் அவள் முகத்தில் புன்னகையுடன் உள்ளத்தில் களிப்புடனும் காணப்பட்டாள். அவளது பார்வை என்னை தடுமாறச் செய்தது. அவளது கண்கள் என்னவோ கூறிற்று?. அவள் என்னை விரும்புகிறாளோ?. ரயில் அவளை கடந்துவிட்டது. ஆனால் என் நினைவுகள் அவளையே சுற்றிவந்தது. அந்த மாசற்ற முகமும் கதை சொல்லும் கண்களும் இயல்பான புன்னகையும் என்னுள் ஒர் விவரிக்க இயலா சூழலை உருவாக்கி விட்டது.
பாட்டி வீட்டிற்கு சென்ற பின்பும் அவளது நினைவுகள் என்னை சில நாட்களுக்கு துன்புறுத்தியது.அப்புறம் மறந்து விட்டேன் ஆனால் திரும்பும் சமயம் மீண்டும் அவள் நினைவு வந்துவிட்டது. ஷாம்லி வருகிறதா? என்று பார்த்துக்கொண்டே வந்தேன்.ஷாம்லி வந்துவிட்டது. அதோ அவள் கூடைகளோடு !
நான் கீழே குதித்து அவளருகே சென்று அடுக்கி வைத்திருந்த கூடைகளில் ஒன்றை எடுக்க அடுக்கப்பட்டிருந்த கூடைகள் சரிய அவள் அதை தடுக்க கை வைத்தபோது அவளது கரங்களைப்பற்றி நான் டெல்லி செல்கிறேன் என்றேன். பின்னர் நான் அப்படி கூறியது முட்டாள்தனம் என்றுணர்ந்தேன். ஏனேனில் அந்த ரயில் டெல்லிக்குத் தானே செல்கிறது.
போய்த்தானே ஆகவேண்டும் அவள் கேட்க ஆனால் நீ என்றேன். பிறகு சரி அடுத்த வருடம் வந்து உன்னை அழைத்துச்செல்கிறேன்.வருவாயா? அப்புறம் நான் கேட்க அவள் தலைகவிழ்ந்தாள். அதே சமயம் கார்டு விசில் ஊதவே நான் மனதார கார்டை சபித்தேன். அவசரமாக சென்று பெட்டியில் அமர்ந்தேன்.
இந்த முறை என்னால் அவளை மறக்க முடியவில்லை அவள் எனது எண்ணங்களில் பவனி வந்தாள் அதற்குபின் வந்த மாதங்களில் எனக்காக ஓர் அன்புத் தேவதை ஷாம்லியில் காத்திருப்பதாக உணர்ந்தேன். என் கல்லூரி வாழ்க்கை முடிந்து அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளோடு அவளைச் சந்திக்க பயணமானேன்.
ரயில் ஷாம்லியை நெருங்க நெருங்க என்னுள் ஒர் இனம் புரியா கலவரம் ஏற்பட்டது. அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டிருக்குமோ? இல்லை அப்படி ஆகாது. என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு நிலையில்லாமல் தவித்தேன். ஏனேனில் அவள் என் மனைவியாகப் போகிறவள். நான் திரும்பும் சமயம் அவளையும் என்னோடு அழைத்துச்சென்று திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். ஆனால் அவளைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது. அவள் ஒரு கூடை விற்கும் பெண், அழகானவள், அடக்கமானவள் என்பதைத் தவிர.ஆனால் ஏதோ ஒன்று என்னை அவள் பால் ஈர்த்து விட்டது.அதுதான் காதலா? இந்த உணர்வை கண்டிப்பாக காதலிப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
ரயில் ஷாம்லியை வந்தடைந்தது. நான் இறங்கினேன். அங்கு என்னை வறவேற்பதற்கு யாரும் இல்லை அவள் உட்பட.நான் ஆதரவற்றவனாய் நின்றேன். அங்கு அவளில்லாததை என்னால் நம்பமுடியவில்லை.சோர்வடைந்தேன். என் முன்வினைப் பயன் தான் இப்படி சோதிக்கிறதோ? ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று விசாரித்தேன். இங்கு கூடை விற்கும் பெண்ணொருத்தி... முடிக்கும் முன் தெரியாது என்ற அவர் என்னை ஏற இறங்க ஏளனமாக பார்த்து நீங்கள் என்னிடம் ரயில்களைப் பற்றி மட்டும் விசாரிக்க வாருங்கள் என்றார்.
அவமானமடைந்த நான் திரும்பி ரயில் பாதையைக் கடந்து தூசி படர்ந்து கிடந்த மாமரங்களையும் ஓர் சாலையைக் கண்டேன். இந்த சாலை என்னை என் காதலியிடம் அழைத்துச்செல்லுமா? அதற்குள் ரயில் கிளம்பிவிட ஓடி ஏறி ஜன்னலோரமாய் அமர்ந்து அவளது நினைவுகளில் ஆழ்ந்தேன். நான் அவளை இருமுறைதான் பார்த்தேன் நாங்களிருவரும் சில வார்த்தைகளைத்தான் பறிமாறிக்கொண்டோம் அது அப்பெண்ணின் மீது ஓர் காதலை ஏற்படுத்திவிட்டதே?
இம்முறை நான் பாட்டியின் இல்லத்தில் சில வாரங்களுக்குத் தங்கியிருந்தேன். அப்பெண்ணுக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று பதட்டப்பட்டுக்கொண்டு என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.ஊருக்குத் திரும்பினேன். ஷாம்லியில் புதிய ஸ்டேஷன் மாஸ்டர் வந்திருந்தார். அவருக்கு அப்பெண்ணைப்பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. இம்முறை என் விசாரணையை டீக்கடை உரிமையாளரிடம் தொடங்கினேன்.
இங்கே கூடை விற்றுக்கொண்டிருப்பாளே ஒர் பெண்? ஆம் அவள் ஒரு அகதி, ஆதரவற்றவள் கூடை விற்று பிழைத்துவந்தாள்.ஆனால் பல மாதங்களாக அவளைக் காண வில்லை. ஏன் என்ன ஆயிற்று? உடல்நலமில்லாமல் போனாளா? அல்லது யாராவது மணந்து கொண்டுவிட்டார்களா?
அது பற்றி யாருக்குத் தெரியும்? என்றான் அவன் அலட்சியமாக. யாரும் அவளை மணப்பார்களா என்ன? அவள் ஒரு அனாதை.கூடை விற்பது லாபகரமான தொழிலும் இல்லை அவள் நோயுற்று இருக்கலாம் ஆனால் நீங்கள் எதற்கு அவளைப்பற்றிக் கேட்கிறிர்கள்? அவன் திருப்பி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுமுன் ரயில் கிளம்ப ஓடும் ரயிலில் ஏறினேன்.ரயில் ஷாம்லியை விட்டு நகரத்தொடங்கியது.
மீண்டும் பலமுறை ஷாம்லிக்கு வந்து என் இதயத்தை திருடிய புன்னகைஅரும்பிய முகத்தோடு கூடிய அந்த ஆவல் ததும்பும் கருப்புக் கண்ணழகியை தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவள் கிடைத்தபாடில்லை. ஆனாலும் நான் ஷாம்லிக்கு வருவதை நிறுத்தவில்லை. என்ன பைத்தியக்காரத்தனம் அவள் நோயுற்று இறந்திருப்பாள் என்று ஒதுக்கித்தள்ள என்னால் முடியவில்லை.
சிலவருடங்களில் நான் பல முறை ஷாம்லிக்கு பயணப்பட்டுவிட்டேன். எப்பொழுதும் ஜன்னல் வழியே அவள் தென்படுகிறாளா என்று பாதி எதிர்பார்ப்போடு பார்ப்பேன் ஆனால் இதுவரை எந்த ஆச்சர்யமும் ஏற்படவில்லை. எனக்காக என் கனவு தேவதைஅங்கு காத்திருப்பாள் என்று நம்பி பலமுறை பயணித்து விட்டேன். என் கனவை கலைத்துக்கொள்ள என்னால் இயலாது. அவள் எனக்காக காத்திருப்பாள் என்று இன்னமும் நம்புகிறேன். ஷாம்லியை பலமுறை கடந்து விட்டேன். இன்னமும் கடக்க விரும்புகிறேன். ஏனேனில் அவள் எனக்காக காத்திருப்பாள்.
(ருஸ்கின் பாண்ட் எழுதிய தி ட்ரெயின் ஸ்டாப்ஸ் அட் ஷாம்லி என்ற ஆங்கில கதையின் தமிழாக்கம்)
அருமையான எழுத்து நடை பாராட்டுக்கள் ரொம்ப அருமையான கதை
ReplyDeleteஅருமையான கதை
ReplyDelete