ஒரே ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்
குட்டிக்கதை
அதோ அந்த பஸ் ஸ்டேண்டில் நின்றுகொண்டிருப்பவள்தான் லீலா. ‘பியுட்டிகுயின்’ என்று எங்கள் காலேஜில் அழைக்கப்படுபவள். எல்லா பசங்களுமே அவள் மேல் ஒரு கண் வைத்திருந்தார்கள்.
ரோஜாநிறம், பட்டுக்கண்ணங்கள் அழகான கண்கள் அளவான இடை,இனிமையான குரல் என்று ஆண்டவன் அவள் படைப்பில் குறை ஏதும் வைக்கவில்லை.
அவள் எங்கள் காலேஜில் சேரப்போகிறாள் என்றதுமே அவள் நட்பை பெறத் துடித்தது மனது. தவியாய் தவித்துப்போனேன். தவமாய் தவமிருந்த சிலர் பொறாமைப்பட அவள் என் வகுப்புக்கே வந்து என் அருகில் அமரவும் பலர் வயிற்றில் புகைச்சல்.
பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் ஆனது எனக்கு. வலியச் சென்று பேசினேன் பேரழகி என்ற கர்வம் எதுமின்றி இன்முகத்தோடு பேசினாள். விலகிப்போவாள் என்ற என் கணிப்பு பொய்க்க சந்தோஷித்தது மனது.
சில நாட்களில் நாங்களிருவரும் மிக நெருங்கி விட்டோம். தோளோடு தோள் உரசி நடந்தோம்.சினிமாவுக்கு சென்றோம் ஒன்றாய் ஒரே ஐஸ்கிரிம் சாப்பிட்டோம் எல்லோரும் வயிறெரிய கைகோர்த்து நடந்தோம்.
அப்போதுதான் எனக்கு அந்த ஆசை தோன்றியது. லீலாவின் பட்டுக்கன்னத்தில் ஒரு முத்தம் பதிக்கவேண்டும் என்பதுதான் அது.ச்சே என்ன ஆசை இது? ச்சீ வேண்டாம்! என்று மனசாட்சி தடுக்க ஆசை வென்றது.

அதோ பஸ் ஸ்டேண்டில் லீலா . வேகமாக சென்று அவளை இழுத்துக் கன்னத்தில் இதழ்களை பதித்தேன். அவள் அவசரமாக விலகி ‘ஐயோ என்னடி இது மாலா! நடு ரோட்டில கிஸ் பண்ண நாந்தான் கிடைச்சேனா ?என்னடி ஆச்சு உனக்கு என்றாள்.
Comments
Post a Comment