கனிமொழியின் கைதும் மீடியாக்களின் ஆவலும்!
கனிமொழியின் கைதும் மீடியாக்களின் ஆவலும்!
எத்தனை நாளுக்குத்தான் கதை, கவிதை என்று எழுதிக்கொண்டிருப்பது இப்படியும் எழுதிப்பார்ப்போமெ என்று இந்த பதிவு.
இந்த பதிவை எழுதுவதாலேயே என்னை சிலர் தி..மு.க அனுதாபி என்று சிலர் முத்திரை குத்தக் கூடும் ஆனால் மனதில் பட்டதை அப்படியே சொல்லி பழக்கமாகி விட்டது. இந்த பதிவு எழுத காரணமாக இருந்தது ஆனந்த விகடன். வெள்ளியன்றே வரும் அவ்விதழை நேற்றுதான் படிக்க நேர்ந்த்து. நான் விகடனின் 25 வருட வாசகன் இடையில் சில பிரேக்- அப்கள். இருந்தாலும் விகடனின் இப்போதைய ட்ரண்ட் எனக்கு அவ்வளவாக பிடித்தமில்லை.
கனிமொழி ஒரு எம்.பி. ஒரு ஊழல் குற்றவாளி, தமிழக முக்கிய கட்சியின் தலைவருடைய மகள்,முன்னாள் முதல்வரின் மகள் என்றெல்லாம் பாராமல் ஒரு பெண்ணாக மட்டும் பாருங்கள். இந்தியாவில் எல்லா அரசியல் வாதிகளும் செய்வதைப் போலத் தான் அவரும் ஊழல் செய்து மாட்டிக் கொண்டார். இதில் கண்டிப்பாக காங்கிரஸ் அரசுக்கும் பங்குண்டு,என்று இளிச்சவாய் தமிழனுக்குக் கூட தெரியும். மன்மோகன் ஐயயோ எனக்கு எதுவுமே தெரியாது எல்லாம் ராசாதான் என்று புலம்பினால் நம்பி விடுவோமா நாம்?
சரி கனிமொழி விஷயத்திற்கு வருவோம். அவர் எப்போது கைதாவார் என்று மீடியாக்கள் காத்திருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்தன. கைதானதும் அவருக்கு ஒதுக்கப் பட்ட சிறை அதிலுள்ள வசதிகளை பற்றி எழுதித் தீர்த்தன.
இப்பொழுது மீடியாக்களுக்கு கருணாநிதி- கனிமொழி சந்திப்புதான் பசி ஆற்றிக் கொண்டிருக்கின்றன.நேரில் சென்று பார்த்தது போல இந்த வார ஆ-வியில் வந்த தலைப்பு நான் இங்கேயே தங்கிடட்டுமாம்மா ! கருணாநிதி தழுதழுப்பு என்று போட்டு கலெக்சன் பார்த்துள்ளது.
இதில் நான் வருத்தப்படுவது என்னவென்றால் ஒரு தகப்பனும் மகளும் சந்தித்துக் கொள்வதை அது சிறைச்சாலையே என்றாலும் இப்படி நியுஸ் போட்டுத் தான் ஆக வேண்டுமா? இது மாதிரி வரும் செய்திகள் பின்னாலில் கனிமொழியின் மகனை பாதிக்காதா? அவர் விரோதியாக இருந்தாலும் கூட இந்த மாதிரி நிலை வரக்கூடாது என்பது என் அபிப்பிராயம்.பிரபலமாக இருப்பதனாலேயே இந்த மாதிரி சங்கடங்களுக்கு ஆளாக வேண்டுமா?
இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான மற்றவர்களைப் பற்றி விலாவாரியாக எழுத வேண்டியதுதானே? பிரபலத்துக்கு மகளாக பிறந்தால் அவருக்கு உணர்ச்சியிருக்காதா? அவர்கள் கண்ணீர் சிந்தக் கூடாதா?
இதையெல்லாம் எழுதி சம்பாதிக்கத்தான் வேண்டுமா? முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா கைதான போது கூட மீடியாக்கள் இதே தவறை செய்தன. இது கூட பரவாயில்லை. எஸ்.எம்.எஸ் ஸில் வரும் கனிமொழி பற்றிய தகவல்கள் படு கேவலமாக உள்ளன.
ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசித்துஎழுத அவர் பிரபலமாயிருந்தால் போதும் என்பது போல இந்த இதழ்களின் கருத்தாய் உள்ளது. இந்த நிலையை ஏடுகள் மாற்றிக் கொள்ள வேண்டும்.ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவரும் ஒரு குற்றவாளி என்பதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.
கனிமொழி ஒரு நல்ல படைப்பாளி அவரது கவிதைகளை வாங்கி பிரசுரித்த இதழ்கள் இன்று அவருடைய முதுகில் குத்துவதை பார்க்க சகிக்கவில்லை. காங்கிரஸுக்கு முதுகில் குத்துவது கை வந்த கலை. இன்று அந்த குத்து கலைஞ்சருக்கும் கனிமொழிக்கும் கிடைத்துள்ளது.
ஒரு படைப்பாளி என்பதைவிட ஒரு பெண்ணாகவும் ஒரு குழந்தைக்கு தாயாகவும் பார்த்து இனியாவது தமிழேடுகள் பரபரப்பான செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு குடும்பத்தார் தன் குடும்பத்திலுள்ள சிறைபட்ட ஒருவரை சந்திப்பதை எல்லாம் செய்தியாக விடுவதை தவிர்க்கவேண்டும்.
இனி ஒரு அதிமுக செய்தி! ஜே. ஜெயிக்க வேண்டும் என்று ஒரு பெண் நாக்கை அறுத்துக்கொண்டு நேர்த்திக் கடன் செய்ய அடித்தது ஜாக்பாட். உயர்தர சிகிச்சை, வீடு, அரசு வேலை, லட்சரூபாய் நிதி உதவி என அம்மா அள்ளி வீச இப்போது இந்த டெக்னிக்கை எல்லோரும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள் போலுள்ளது. சேலத்தில் நெசவுத்தொழிலாளியின் மனைவியான வாணி(45) தனது கட்டை விரலை வெட்டி தாதகாப் பட்டி காளியம்மன் கோயிலில் காணிக்கை செலுத்தியுள்ளார்.
தீவிர அதிமுக விசுவாசிகளான வாணியும்.அவரது கணவர் பழனிச்சாமியும் ஜே முதல்வராக வேண்டும் என்று பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்து வந்தனர். தாதாகா பட்டி காளிக்கு வலதுகை கட்டைவிரலை காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டனராம். அதன்படி இப்போது விரலை வெட்டி காணிக்கை செலுத்தி உள்ளார்.
இம்மாதிரி முரட்டு தொண்டர்களை ஜே கண்டிக்க வேண்டும். வேலை பணமுடிப்பு என தந்துகொண்டிருந்தால் எதிர்காலத்தில் காதறுத்துக் கொண்ட அதிமுக தொண்டர். கண்ணை குத்திக் கொண்ட அதிமுக விசுவாசி,காலை வெட்டிக் கொண்ட அதிமுக அனுதாபி என்று பல்வேறு செய்திகள் வரக்கூடும். ஜே கவனிப்பாரா?
தங்கள் வருகைக்கு நன்றி! பிடித்திருந்தால் கருத்திடலாமே! செய்தி பிடித்திருந்தால் கீழுள்ள நிரலிகளில்வாக்களித்து செல்லலாமே!
தங்கள் வருகைக்கு நன்றி! பிடித்திருந்தால் கருத்திடலாமே! செய்தி பிடித்திருந்தால் கீழுள்ள நிரலிகளில்வாக்களித்து செல்லலாமே!
Comments
Post a Comment