“மரணம் வேண்டும்”
“மரணம் வேண்டும்”
கி.பி 2250.

புரபஸர் ஜீவா இந்த அறிவியல் உலகத்தின் மிகப்பெரிய விஞ்ஞானி!.அவர் பல அரிய கண்டு பிடிப்புகளை உலகுக்கு அளித்தவர். லேசாக காதோரம் நரைத்த முடி, காண்டாக்ட் லென்ஸ் கண்கள்,பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரிப்படுத்தப்பட்ட முகம். இதுதான் அவரது அங்க அடையாளங்கள்.அவருக்கு என்ன வயது இருக்கும் என்று உங்களால் ஊகீக்க முடிகிறதா?
என்ன ஒரு 55 அல்லது 60 இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு!. அவருக்கு வயது 160 என்று சொன்னால் நீங்கள் நம்பவில்லை என்றால் நீங்கள் போன நூற்றாண்டுக்காரர் என்று அர்த்தம்.
ஜீவாவைப்பொல சதம் கடந்த சிலரே சைன்ஸ்பிக் வேர்ல்டில் வசிக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் விஞ்ஞானிகள்,டாக்டர்கள்,இஞ்சினியர்கள். மற்றவர்களின் சராசரி வயது 60 அதற்குள் இறக்காவிடில் தானாக இறப்பை கொடுத்து விடுவார்கள்.
புரபஸர் ஜீவாவிற்கு உறவினர் யாரும் இல்லை. அனைவரும் இறந்து விட்டனர். அவர்மட்டுமே தனிக்கட்டையாக நின்றார். பாழாய் போன விஞ்ஞானி பட்டம் அவர் இறப்பை தடைசெய்தது. அவருக்கு துணை அந்த குட்டி ரோபோ மட்டுமே!
இந்த அறிவியல் யுகத்தில் எல்லாமே இயந்திர கட்டுப்பாடுகள். கணிப்பொறிகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஆட்சி. ராணுவ ஆட்சியை விட மிக ஒழுங்கு. பேருந்துகளில் அதிக கூட்டம் கிடையாது. இயக்குவது டிக்கெட் வழங்குவது எல்லாமே ரோபோதான்.
வீதிகளில் மக்கள் கூட்டம் கிடையாது சண்டைகிடையாது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கிடையாது. திருட்டு ,கொலை கொள்ளை எதுவும் கிடையாது. அனைவரும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளை போல இயங்கிக்கொண்டிருந்தனர்.

அவருக்கு அருங்காட்சியகமொன்றில் கிடைத்த புத்தகத்தில் தற்கொலை பற்றி படித்த ஞாபகம் வந்தது. அப்புத்தகம் படித்த பின் தான் அவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். அவரது ஆராய்ச்சிக்கூடம் 150வது மாடியில் இருந்தது. இங்கிருந்து குதித்தால் நொடியில் மரணம். புரபஸர் ஜீவா கடைசியாக ஒருமுறை தன் ஆராய்ச்சி கூடத்தைப்பார்த்தார். இந்த சைன்ஸ்பிக் வேர்ல்ட் அமைய அவர் கண்டுபிடித்த பொருட்களுக்கு கிடைத்த விருதுகளை பார்த்தார். இந்த உலகத்திற்கு தன் உழைப்பு போதும் என்று மாடியின் மேல் விளிம்பிற்கு வந்து குதிக்க எத்தனித்தார்.
இரண்டு இரும்புக்கரங்கள் அவரைப்பிடித்தன. புரபஸர் ஜீவா தற்கொலை முயற்சிக்காக உங்களை கைது செய்கிறோம்.
ஜீவா விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். நீதிபதி ரொபோ ஜீவாவை நோக்கி கேட்டது. புரபஸர் ஜீவா நீங்கள் ஒரு விஞ்ஞானி நீங்கள் தான் இந்த உலகை நிர்மானித்தீர்கள் நீங்களே இந்த உலக கட்டுப்பாட்டை மீறி தற்கொலை செய்து கொள்ள காரணம்?
எனக்கு இந்த உலகம் அலுத்து விட்டது. எனக்கு மரணம் வேண்டும்.
நம் நாட்டில் விஞ்ஞானிகளுக்கு வயது 200 முன்கூட்டியே தற்கொலைக்கு முயன்றது ராஜ துரோகமாகும் அதனால்..
மரணம் வேண்டும்! மரணம் வேண்டும்! புரபஸர் ஜீவாவின் மனித கதறல் இரும்பு ரோபோக்களுக்கு புரியவில்லை!
தங்கள் வருகைக்கு நன்றி!உங்கள் கருத்துக்களை பதிவிட்டு செல்லலாமே! உங்கள் வாக்குகளை நிரலிகளில் இட்டுச் செல்லலாமே!
வித்யாசமான கற்பனை
ReplyDelete