Monday, April 30, 2012

நான் ரசித்த சிரிப்புக்கள் 10

நான் ரசித்த சிரிப்புக்கள் 10


தலைவருக்கு என்ன திடீர்னு தமிழ்மேல பற்று ? செல்போனை கைபேசின்னு தூய தமிழ்ல சொல்லுறாரு?
 செல்லுன்னா அவருக்கு ஜெயில் ஞாபகம் வருதாம்!
                          வி.சகிதா முருகன்.

திருட்டுப் பணத்தை செலவழிச்சு கபாலி வீடு கட்டறானாமே?
  ஆமா அது அவனோட களவு வீடு!
                          கவின்

அந்த நர்ஸ் என்மேல உயிரையே வச்சிருக்காங்க டாக்டர்!
எப்படி சொல்றீங்க?
ஆபரேஷணுக்கு சம்மதிக்க வேணாம்னு அட்வைஸ் பண்ணினாங்களே!
                            பி,ஜி.பி இசக்கி.

அவர் மனைவியாலே அதிகம் பாதிக்கப்பட்டவர் போலிருக்கு!
எப்படி சொல்றே?
வாய்ப்பூட்டு கிடைக்குமான்னு கேட்டு வந்திருக்காரே!
                            பெ.பாண்டியன்.
மன்னரை வெயிட் தூக்கக்கூடாதுன்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க!
சரி அதுக்காக வாளுக்கு பதில் இடுப்புல பிளேடு கட்டி தொங்க விட்டா எப்படி?
                               எஸ் பிரேமா.

தலைவருக்கு அடுத்த வருஷம் டாக்டர் பட்டம் தரப்போறாங்களாம்!
அதனால!
இந்தவருஷம் தன்பெயருக்கு முன்னால ஹவுஸ் சர்ஜன்னு போட்டுக்கலாமான்னு கேக்கிறாரு!
                           இளங்கோ

நம்ம மன்னர் வித்தியாசமானவர்னு எதை வச்சி சொல்ற?
போர்க்களத்தில் ‘கல்’லைக் கவ்விகிட்டு வந்திருக்கிறாரே!
                                 சண்முகி

என்ன சிஸ்டர் இது! ட்ரீட்மெண்ட் பீஸோட எஜுகேஷன் பீஸ்னு இருநூறு ரூபாய் சேர்த்து போட்டிருக்கீங்க?
 டாக்டர் எம்.பி.பி.எஸ் படிக்கிறார் இல்லையா?
                        வெ.ராஜா ராமன்
தலைவர் போதையில பேசுறார்னு எதை வச்சு சொல்ற?
நாட்கள் எண்ணிக்கை குறைவா இருக்குற பிப்ரவரி மாதத்தை நலிவுற்ற மாதமா அறிவிக்கனும்னு சொல்றாரே!
                           அ. பேச்சியப்பன்.
 
டாக்டர் உங்க முதல் ஆபரேஷன் அனுபவத்தை சொல்லுங்களேன்!
  கொன்னுபுட்டேன்ல!
                          தீ.அசோகன்.

முன்னாள் மின் துறை அமைச்சருக்கு இப்ப எதுக்கு பாராட்டுவிழா நடத்துறாங்க?
  அவரோட அருமை இப்பத்தானே தெரியுது!
                    கே.சி கோவிந்தராஜன்.

தலைவருக்கு புத்தி பிசகிடுச்சு!
 என்ன நடந்துச்சு!
தேர்தல்ல தோத்த கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் மானியம் தரணும்கிறாரே!
                    அம்பை தேவா.
நன்றி வாரமலர், ஆனந்த விகடன் வார இதழ்கள்!

Sunday, April 29, 2012

நம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!

மதுரை: மதுரை மக்கள் பெரும் வியப்பிலும், குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளனர். மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவுதான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.

மதம் சார்ந்த மடங்கள் எத்தனையோ தமிழகத்தில் இருந்தாலும் அதையும் தாண்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் குன்றக்குடி அடிகளாரும், அவரது மடமும் மட்டுமே. மதம் சார்ந்த ஒரு அதிபதியாக இருந்தாலும் கூட தமிழார்வலராக, தமிழ் ஊழியராக, தமிழுக்காகவும், சமுதாயத்திற்காகவும் தொண்டாற்றிய பெருமை படைத்தவர் குன்றக்குடி அடிகளார்.

தனக்காக, தான் சார்ந்த மதத்திற்காக என்றில்லாமல், தமிழுக்காகவும், தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி மக்கள் இன்றளவும் அடிகளாரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மத மாச்சரியமின்றி, அரசியல் பாகுபாடின்றி அத்தனை பேராலும் பாராட்டப்பட்டவர், மதிக்கப்பட்டவர் குன்றக்குடி அடிகளார். அவருக்குப் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது என்பதுதான் உண்மை.

குன்றக்குடி அடிகளாரைப் போல இல்லாவிட்டாலும் கூட சமுதாயம் சார்ந்த ஒரு மனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மதுரை ஆதீனம். ஈழத் தமிழர் போராட்டம், முல்லைப் பெரியாறு அணை போராட்டம் என பல போராட்டங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் முன்பு இயங்கிய டெசோ அமைப்பில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர்.

சமூக பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து அக்கறை காட்டி வந்தவர். அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பில் இருந்து வந்தவர். இவர் மீதும் சலசலப்புகள், சர்ச்சைகள் இருந்தபோதும் கூட பெரிய அளவில் மக்களிடையே களங்கப்படாதவராகவே இருந்து வந்தார்.

ஆனால் மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவு மதுரை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஆதீனமா இப்படி முடிவெடுத்தார் என்பதை மதுரை முழுக்கப் பேச்சாக உள்ளது.

ஆதீனம் இப்படிச் செய்வார்னு யாருமே எதிர்பார்க்கலைங்க, ரொம்ப ஆச்சரியமா இருக்கு என்கிறார்கள் மதுரைக்காரர்கள். மதுரை ஆதீனம் என்பது மதுரையின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறிப் போன ஒன்று, மதுரையின் அடையாளங்களில் ஒன்று, மதுரையின் வரலாற்றில் ஒன்று. எப்போது தோற்றுவிக்கப்பட்டது என்பது கூட சரியாக தெரியாத அளவுக்கு மிக மிகப் பழையான ஒரு மடம்.

சைவக் குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவித்த மடம் இது. சைவ நெறி பரப்பி வந்த இந்த மடத்தில் இதுவரை இந்த அளவுக்கு பரபரப்பான சம்பவம் எதுவும் நடந்ததில்லை. ஆனால் தற்போது மதுரை ஆதீனம் அகில இந்திய அளவில் ஆச்சரியக் குறியாக எழுந்து நிற்கிறது.

மதுரையைச் சேர்ந்த ஆசிரியரான சுப்பிரமணியம் என்பவர் ஆதீனத்தின் முடிவு குறித்துக் கூறுகையில், ஏதோ 'ஏ படம்' பார்த்தது போல இருக்கிறது ஆதீனத்தின் இந்த முடிவு. இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.இது மோசமாக கனவாக இருக்க வேண்டும் என்று இப்போது கூட நான் வேண்டுகிறேன். அன்னை மீனாட்சியை தரிசித்து விட்டு ஆதீனம் மடம் வழியாகத்தான் நான் வீட்டுக்குப் போவேன். இனிமேல் நான் இந்த மடத்தைப் பார்க்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. பார்க்கவும் பிடிக்கவில்லை. ரொமபக் கஷ்டமா இருக்கு சார் என்றார்.

மதுரையைச் சேர்ந்தவரான கதிரேசன் என்ற பேராசிரியர் கூறுகையில், மதுரை ஆதீம் என்பது மாபெரும் தலைவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட ஒரு மடம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்றோர் அரவணைத்திருந்த மடம் இது. இதன் வரலாறு 1500 ஆண்டுகளுக்கும் மேலானது. இதற்கு மதுரை ஆதீனம் நியமித்துள்ள புதிய ஆதீனத்தை எங்களால் நிச்சயம் ஏற்க முடியாது என்றார்.

எழுத்தாளர் பிரியதர்ஷனி என்பவர்க கூறுகையில், எனக்கு இந்த நியமனம், அதன் விதிகள் உள்பட எதுவுமே தெரியாது. ஆனால் மதுரை மக்களும், மதுரை நகரமும், மற்றவர்கள் முன்பு கேலிப் பொருளாகி விட்டதை மட்டும் உணர்கிறேன். மதுரையின் பெயர் நிச்சயம் மாசுபட்டு விட்டது என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றார்.

மதுரை மக்களுக்கு ஆதீனம் என்ன விளக்கம் அளிக்கப் போகிறாரோ...?

நன்றி தட்ஸ் தமிழ்!

மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு... இந்து அமைப்புகள் அவசரமாக கூடுகின்றன!

மதுரை: நித்தியானந்தாவை, 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்தியாவின் மூத்த ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக தற்போதைய ஆதீனம் நியமித்துள்ளது குறித்து பல்வேறு இந்துக் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பேச அவசரக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியிலும் மதுரை ஆதீனத்தின் இந்த திடீர் முடிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆதீனத்தை மக்கள் தற்போது கேலிப் பொருளாக பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், இன்னும் ஓரிரு நாளில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம். தற்போது நடந்து வருவது மிகவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருப்பதையே உணர்த்துகிறது. மதுரை ஆதீனம் மிகவும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். இந்துக்கள் அனைவரையும் அவர் அவமானப்படுத்தியுள்ளார், களங்கப்படுத்தியுள்ளார்.

மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டவருக்கு பெங்களூரில் வைத்து முடி சூட்டியுள்ளார். அங்கு போய் மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு யார் என்பதை அவர் கூறியுள்ளார். இது தவறான செயல் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை அவசரப்பட்டு முடிவு செய்ய முடியாது. திருப்பனந்தாள், தருமபுரம் ஆதீனங்களை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

நித்தியானந்தா போன்றவர்களுக்கான பதவி அல்ல இது. அவர் இந்தப் பதவிக்கு வர அருகதை இல்லை. தனது பெயரை முதலில் சரி செய்து விட்டுத்தான் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.

மதுரை ஆதீனம் தற்போது பெங்களூரில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். தனது பாதுகாவலர்களைக் கூட அவர் பெங்களூருக்குக் கூட்டிச் செல்லவில்லை. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

எந்தவிதமான முறையான அம்சங்களும் இந்த விவகாரத்தில் கையாளப்படவில்லை. இது பெரும் நகைச்சுவையான ஒரு சம்பவமாக மாறியுள்ளது. அதேசமயம், இந்து மக்கள் மனதளவில் புண்பட்டுப் போயுள்ளனர் என்றார் சம்பத்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் கூறுகையில் தனது வாரிசாக மதுரை ஆதீனம் தேர்ந்தெடுக்கும் நபரை ஏற்கவே முடியாது. இதுகுறித்து நாங்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதேபோல விஸ்வ இந்து பரிஷத்தும் மதுரை ஆதீனத்தின் முடிவை விமர்சித்துள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

பசுமை நிறைந்த நினைவுகள் பகுதி 9பசுமை நிறைந்த நினைவுகள் பகுதி 9

வாசகர்களுக்கு இந்த தொடர் சற்று இடைவெளி விட்டுவிட்டது வருத்தமாக இருந்திருக்கும். இன்னும் சிலருக்கு அறுவை தொலைந்தது என்று இருந்திருக்கும்! சுமார் ஒரு இருபது இருபத்தைந்து நபர்கள்தான் இதை படிக்கிறீர்கள் என்று கூகுள் கூறினாலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை! உங்களுடன் ரம்பம் போட மீண்டும் வந்து விட்டேன்! என்ன செய்வது இனி காப்பி பேஸ்ட் செய்யமாட்டேன் என்று சூளுரைத்தும் விட்டேன். இனி என் எழுத்துக்களை நீங்கள் சகித்துதான் ஆக வேண்டும்.
   நாடெங்கும் ஐ.பி.எல் மோகத்தில் இருக்க அதற்கு டிவியில் டி.ஆர்.பி கிடைக்கவில்லை என்றுசெய்தித்தாள்கள் நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக சுவையான செய்திகளை போட்டு வாசகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சமயத்தில் எங்கள் ஊரிலும் உள்ளூர் டோர்ணமெண்ட் ஒன்று இன்று ஆரம்பித்து இருக்கிறார்கள் சுமார் இருபது டீம்கள் கலந்து கொள்கின்றனவாம் 300ரூபாய் நுழைவுக் கட்டணமாம்.எங்கள் கொள்ளைப்பக்கத்தில் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் காலையில் இருந்து ஒரே கும்மாளம்தான்!
   இதை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள் கிளர்ந்து வந்தன. அது 1987 இந்தியாவில் முதன் முதலில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்த சமயம் அப்போது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். அதுவரை எனக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாது. கண்ணாமூச்சியும் ஐஸ்பாயும் விளையாடிக் கொண்டிருந்த எனக்கு வானொலியும் தொலைக்காட்சியும் கிரிக்கெட்டை அறிமுகப் படுத்தின. அதைவிட என்னுடைய நண்பன் இளங்கோவன் தான் அறிமுகப்படுத்தினான் என்றால் மிகையாகாது.
   அப்போது ஆசான பூதூரில் என் தாத்தா வீட்டில் படித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக விடுமுறை நாட்களில்விளையாட வரும் இளங்கோ என்ற செல்லா வரவில்லை! மறுநாள் ஏண்டா வரலை! என்று கேட்டேன் வோர்ல்ட்கப் கிரிக்கெட் டிவியில பார்த்தேன்! அதான் வரலைடா என்றவன், நாளைக்கு ஆஸ்திரேலியா இந்தியா மேட்ச் இருக்கு நீயும் வா பார்க்கலாம் என்று அழைத்துச் சென்று காட்டினான்.
    கிரிக்கெட்டின் அரிச்சுவடியை அவன் தான் கற்றுக் கொடுத்தான். கவாஸ்கர் கபில்தேவ், அமர்நாத் ஸ்ரீகாந்த், சித்து, பின்னி கிரன்மோரே வெங்சர்க்கர் ,ரவிசாஸ்திரி என்றுபிளேயர்களையும் அறிமுகப்படுத்திவைத்தான். ஸ்ரீகாந்த் உன்னைப்போல ஐயிருதான்! ஆனா முட்டை மட்டன்லாம் சாப்பிடுவான்! அதான் பின்னி எடுக்கிறான் என்று ஏதோ அறிந்தவன் போல் விளக்கம் தருவான்.
   கிரிக்கெட் பார்த்த நாங்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். அங்கு போதுமான மைதான வசதிகள் இல்லாததால் கோயில் பின்புறம் சிறிய இடத்தில் ஆட ஆரம்பித்தோம். சிறிய இடமாதலால் பந்தை உருட்டிவிட்டு ஆடினோம். எங்களுக்கு பேட்டாக தென்னை மட்டைகள், தாத்தாவின் பழைய மர செருப்புக்கள் உதவின. அப்போது ரப்பர் பந்துகள் 1ரூபாய் விற்றன. அதை வாங்க எங்களுக்கு காசு கிடைக்காது. பெரும்பாலும் நான் தான் வாங்கி வருவேன். இப்படி எங்கள் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. இரண்டு டீம் பிரித்து ஆட வேண்டும் என்பதால் பெண்களையும் உடன் சேர்த்து ஆடுவோம் அப்படியும் பத்துவிக்கெட் வேண்டுமாதலால் சிலருக்கு இரண்டு விக்கெட் என்று இரண்டுமுறை ஆடவிடுவோம்.
    ஆசானபூதூரில் இருந்து நான் நத்தத்திற்கு பெயர்ச்சி ஆனதும் சிறிது நாள் எனது கிரிக்கெட் வாழ்க்கை தடைபட்டது. இங்கு எனது சகோதரிகளுடன் ஆடிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு ஆறுமாத காலம் கழிந்ததும் இங்கும் எனக்கு நண்பர்கள் சேர்ந்தார்கள். அவர்களுடன் இங்குள்ள கோயிலில் தரையில் பந்தினை உருட்டிபோட்டு விளையாடி வந்தோம். நான் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்த சமயம் அங்கு வந்த எங்கள் ஊர்பையன் கருணா, உங்க டீமுக்கும் எங்க டீமுக்கும் பெட் மேட்ச் வைச்சுக்கலாமா என்று அழைத்தான். நண்பர்களுடன் கலந்து ஒத்துக் கொண்டேன்.
   ஒரு ஞாயிற்று கிழமையில் எங்களூர் குளக்கரையில் போட்டி என்று தீர்மானமானது. எங்களிடம் பேட் இல்லை! பந்துதான் உள்ளது என்றதற்கு கருணா பேட் எடுத்துவருவதாக கூறினான். ஐந்து ரூபாய் பந்தயக்காசாக முடிவானது. டாஸ் வென்று பேட் செய்ய முடிவெடுத்தேன். அதற்கு முன் உங்களுக்கு பவுலிங் போட ஆளில்லை அதனால் எங்கள் டீம் பையன் நாகராஜை அனுப்புகிறேன் என்று அனுப்பி வைத்தான் கருணா. அவனும் வேண்டா வெறுப்பாக வந்து சேர்ந்தான்.
      கருணாவிற்கு நாங்கள் வெத்து வேட்டு என்று நன்றாக தெரியும். எங்களுக்கு மட்டை பிடிக்கவும் தெரியாது. பந்துவீசவும் தெரியாது என்பதை நன்கு அறிந்தே போட்டிக்கு அழைத்தான். நாங்களும் இப்படியே தரையில் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி கபில்தேவ் கவாஸ்கராய் உருவெடுப்பது என்று போட்டியில் கலந்து கொண்டோம்.
   முதன் முதலில் அப்போதுதான் பந்து வீசி ஆட உள்ளோம்! பேட் செய்ய தீர்மாணித்த என்னை தடுத்து பவுலிங்க் செய்யலாம் என்று ஆலோசனை கூறினான் நண்பன் ஜெயேந்திரகுமார். எப்படியோ தட்டு தடுமாறி பந்து வீசினோம் நாங்கள். இது ஓவரே அல்ல மாங்கா பால்! என்று அவனது டீம் ஏளனம் செய்ய அந்த டீமிலிருந்து வந்த நாகராஜிம் வேண்டா வெறுப்பாக போட பீல்டிங்கிலும் நாங்கள் பதட்டத்தில் சொதப்ப பத்து ஓவர்களில் அறுபது ரன்களை அவர்கள் குவித்து விட்டனர்.
 அடுத்துநாங்கள் ஆடினோம்! மரத்தால் ஆன அந்த பேட்டை தூக்கவே சிரமப்பட்டனர் எங்கள் வீரர்கள் நாகராஜ் மட்டும் சற்று நின்று ஆடினான். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் திரும்ப நான் சற்று போராடினேன். நானும் ஹிட் விக்கெட்டாகி அவுட்டாக தோல்வியை தழுவினோம் நாங்கள்
  ஐந்து ரூபாயை கருணாவிடம் மனமில்லாமல் கொடுத்தேன்! இன்னொரு மேட்ச் வச்சிக்கிலாமா? ஜெயிச்சா உன் காசு உனக்கே வந்திரும் தோத்தா  அப்புறமா காசு கொடு என்று தூண்டில் போட்டான் கருணா. இல்லைடா கடனெல்லாம் வேண்டாம்! அடுத்தவாரம் திரும்பவும் மேட்ச் வச்சிக்கலாம் என்றேன் சூடுபட்ட பூனையாக!
   அதுமுதல் அவன் ருசி கண்ட பூனையாக துரத்த நான் சூடுபட்ட பூனையாக தள்ளி போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் விதி யாரை விட்டது. ஒரு கோடைக் கால ஞாயிறில் குளத்தங்கரையில் பசங்க விளையாடுவதை பார்க்க சென்றேன். ஆள் குறையுது  நீயும் வாடா! என்று அழைத்தனர். மிட்விக்கெட் திசையில் பீல்டிங் நின்றிருந்தேன்! ஒருவன் அடித்த பந்து கைக்கு நேராக வர கேட்ச் என்று ஒரே சத்தம் பதட்டத்தில் கைவிட்டேன்! பந்து கையில் பட்டு எகிறியது! பார்த்து கொண்டிருந்த ஒருவர் கையை விரித்து காட்டி இப்படி பிடிச்சா நிக்குமா? என்று ஏளனம் செய்ய அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பேட்டிங்கிலும் நான் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை ஒரு ஏழோ எட்டொ ரன்கள் தான் எடுத்தேன்! எங்கள் டீம் தோல்வியையை தழுவியது.
     எனக்கு வருத்தமாகி போய்விட்டது. அன்று மாலை மீண்டும் மேட்ச். காலையில் என்னை சேர்த்துக் கொண்ட டீம் இப்போது தள்ளிவைத்தது. கருணாதான் சேர்த்துக் கொண்டான் முதலில் அவனது டீம் பவுலிங்க் செய்ய எதிரணியில் முக்கிய வீரனாக நாகராஜ் இருந்தான். முதல் ஓவரிலேயே நாகராஜ் பந்தை தூக்கி அடிக்க சுமார் இருபதடி தூரம் ஓடிவந்து ஒரு மின் கம்பத்தின் ஸ்டே வயர் தடுக்கினாலும் அதையும் தாண்டி அந்த கேட்ச்சை நான் பிடிக்க கருணா ஓடோடி வந்து என்னை தழுவிக் கொண்டான். அந்த போட்டியில் மேலும் சில கேட்ச்களை நான் பிடிக்க ஒரே நாளில் ஹீரோவாகிப் போனேன் நான்!
         அடுத்த பதிவில் மீண்டும் தொடர்கிறேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


Saturday, April 28, 2012

தளிர் ஒரு முக்கிய அறிவிப்பு!

அன்பார்ந்த வலைப்பூ வாசக பெருமக்களே! வலைப்பூவில் புதிய மாற்றங்களை கண்டு இருப்பீர்கள்! இதுவரை அலேக்ஸா ரேங்க் மற்றும் அதிக வாசகர்களை இழுப்பதற்காக மற்ற இணையதளங்களில் குறிப்பாக தட்ஸ் தமிழ்! தினமலர் போன்றவற்றில் இருந்து காப்பி பேஸ்ட் செய்து வந்தேன்!
      இனி இவற்றை தவிர்க்கலாம் என்று எண்ணியுள்ளேன்! படைப்புகள் அதிக புகழை அடையவேண்டுமே தவிர அதிக எண்ணிக்கை படித்திருக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்! இனிமேல் எண்ணிக்கையை நம்பாமல் என்மேல் நம்பிக்கைவைத்து எழுதலாம் என்று எண்ணுகிறேன்!
    அதே சமயம் சுவாரஸ்யமான சினிமா பொழுது போக்கு தகவல்களையும் என்பாணியில் தரலாம் என்று இருக்கிறேன். இனி முக்கிய செய்திகள் தகவல்கள் மட்டுமே இந்த வலைப்பூவில் வெட்டி ஒட்டப்படும். படங்களை பொறுத்தவரை கூகிள் இமேஜ்தான் எனக்கு வழி!
     இதனால் நாள்தோறும் பதிவிட முடியாமல் போகலாம்! வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்! செய்திகள், சினிமா, சிறுவர்பகுதி, ஆன்மீகம், பொதுஅறிவு என்று பிரித்து அந்தவகையில்  எழுதலாம் என்று எண்ணுகிறேன்!
  உங்களின் மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
                                                                                   அன்புடன்
                                                                தளிர் அண்ணா சா.சுரேஷ்பாபு!

உரிமையடையும் நாள் என்னாளோ?

உரிமையடையும் நாள் என்னாளோ?

வீடிழந்தோம்! குடியிருந்த ஊரிழந்தோம்!
நாடிழந்தோம்
நல்ல நண்பர்களை இழந்தோம்!
உறவிழந்தோம்
உற்றதுணைஇழந்தோம்!
பெற்ற மண்ணிழந்தோம்!
அகதிகளாம் நாங்கள்!
மாற்றாந்தாய் அரவணைப்பில்
மறந்திடுமா எங்கள் சோகங்கள்!
சொல்லிழந்தோம் மொழியிழந்தோம்
சோற்றுக்கும் நிற்க நிழலுக்கும்
போராடி போராடி சுமையாகிப்போனோம்!
மொழியாலே ஒன்றிணைந்தாலும்
விழியாலே வேறுபட்டு பாழும்
அரசியலில் பகடையாய் அடிபட்டு
வேறிழந்து தவிக்கிறோம் நாங்கள்!
எத்தனைதான் வசதிகள் கொடுத்திடினும்
எங்கள் சோகம் தீர்ந்திடுமா?
என் நாடு கிடைக்குமா? என்ற ஏக்கம்தான்
தீர்ந்திடுமா? இழந்தவனுக்குத்தான் தெரியும்
இழப்பின் வலி! எங்கள் வலி கொஞ்சமல்ல!
வீதீயிலே விளையாடும் எங்கள் பிள்ளைகளுக்கு
எங்கள் நாடு மறந்து போகும் முன்னே
எங்கள் விதி மாறுமா?
எத்தனைதான் இழந்தாலும் இன்னும்
உணர்விழக்கவில்லை நாங்கள்! இதை
உணராமல் தமிழர்கள் எங்களை
தள்ளி வைப்பது ஏனோ? உணர்வாலே
ஒன்றுபட்டு உரிமையடையும் நாள்
என்னாளோ அன்னாளே எங்கள் பொன்னாள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகரலாமே!
Friday, April 27, 2012

கர்வம் பிடித்த கிளி! பாப்பாமலர்!

கர்வம் பிடித்த கிளி!

செல்வபுரி என்ற சிற்றூரின் எல்லையில் ஒரு பெரிய மாமரம் வளர்ந்து இருந்தது. அந்த அழகிய மாமரத்தின் கிளைகள் விரிந்து இலைகள்பச்சை பசுமையாக இருந்தது. பூக்களும் கனிகளும் நிறைந்த அந்த மாமரத்தில் பறவைகள் சில கூடு கட்டி வாழ்ந்து வந்தன. அந்த மாமரத்தில் ஒரு கர்வம் கொண்ட கிளியும் வசித்துவந்தது.
   அது எப்போதும் தன் அழகையும் தன்னுடைய பேச்சு திறமையையும் எண்ணி பெருமைப் பட்டுக் கொள்ளும். இங்கு வசிக்கும் மற்ற பறவை இனங்களை அது சுத்தமாக மதிப்பதே இல்லை! அவை தன்னுடன் வசிக்க லாயக்கற்றவை என்று அது எண்ணியது.மற்ற பறவைகளை கிளி சற்றும் லட்சியம் செய்வது இல்லை! தன்னுடைய அழகின்மீது கர்வம் கொண்ட அது அழகே ஆபத்தாக முடியும் என்பதை அறியாமல் மற்ற பறவைகளை ஏளனம் செய்து கொண்டு இருந்தது.
    அங்கு வசிக்கும் மற்ற பறவைகள் எல்லாம் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று கிளி விரும்பியது. எனவே அது மற்ற பறவைகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து கடுஞ்சொற்களை கூறி அவமான படுத்திவந்தது. கிளியின் குணம் அறிந்த மற்ற பறவைகள் அதனிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டன. கிளியை கண்டாலே கூண்டில் போய் அடங்கிக் கொண்டன. இது கிளிக்கு மேலும் கர்வத்தை கொடுத்தது. தன்னை கண்டு மற்ற பறவைகள் பயப்படுவதாக அது நினைத்துக் கொண்டது.
   அந்த கிளி வசித்த கிளைக்கு பக்கத்து கிளையில் காகம் ஒன்று வசித்துவந்தது. வயதில் மூத்த அந்த காகம் கிளிவசிப்பதற்கு முன்பிருந்தே அந்த மரத்தில் வசித்துவந்தது. அதற்கு கிளியின் செய்கை பிடிக்காது ஆனாலும் தன் வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும். இந்த காகத்தை வம்பிழுத்து பார்க்க கிளி நினைத்தது,
   ஒருநாள் கிளி, ஏ கறுப்பு காகமே! என்னைப் பார் என் சிவந்த மூக்கும் பச்சை உடம்பும் மெத்தென்ற இறகுகளும் எவ்வளவு அழகு? நீயும் உன் கறுப்பு உடம்பும் கரகரத்த குரலும்! என்னைப்போல் உன்னால் பேசமுடியுமா?நீ என் பக்கத்து வீட்டுக்காரன் என்பதில் எனக்கு அவமானமாக உள்ளது. உன்னால்தான் இந்த இடத்திற்கே அசிங்கம்! நீ இங்கிருந்து சென்று விட்டாயானால் இடம் சுத்தமாகும் என்று வம்பிழுத்தது!.காகம் பதில் ஏதும் பேசாமல் மவுனித்தது. உடனே கிளி ஏ திமிர் பிடித்த காகமே நான் கேட்டதற்கு பதில் சொல்! ஏன் மவுனமாய் இருக்கிறாய்? உனக்கு அவ்வளவு திமிரா எனக்கு மரியாதை தரமாட்டாயா? என்று கத்தியது.
   உடனே காகம், ஏய் கிளியே நீதான் மரியாதை இல்லாமல் பேசுகிறாய்! நீ வருவதற்கு முன்பிருந்தே இங்கு வசிப்பவன் நான். அத்துடன் வயதிலும் மூத்தவன்.கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பை கொடுத்திருக்கிறான். அதே சமயம் பலவீனத்தையும் கொடுத்து இருக்கிறான். வீணாக பெருமைப் பட்டுக் கொள்ளாதே! நீ அழகாய் இருந்தாலும் உன்னை யாரும் கூப்பிட்டு உணவளிப்பது இல்லை! ஒரு பண்டிகை விசேஷ தினங்களில் எங்களைத்தான் கூப்பிட்டு உணவளிக்கிறார்கள் மனிதர்கள். அதை புரிந்து கொள் என்று மூக்குடைத்தது காகம்.
  அப்போதும் அடங்காத கிளி ஏ காகமே என்னையே எதிர்த்து பேசுகிறாயா? உன்னை கூடிய விரைவில் விரட்டுகிறேன் பார் என்றது. என்னை விரட்ட உன்னால் முடியாது! உண்மையை சொன்னால் உனக்கு உறுத்துகிறது. நாம் ஒன்றுபட்டால் நம் பகைவர்களிடமிருந்து தப்பிக்க முடியும் உன் அகந்தையை விட்டொழி என்றது காகம்.
  ஆனால் கிளியோ ஆணவத்தை விடாமல் போதும் உன் அறிவுரை காது கிழிகிறது என்று வெறுப்பேற்றியது. காகம் இதை திருத்த முடியாது என்று பறந்து சென்றுவிட்டது.
  அப்போது அந்த மரத்தின் அடியில் வேடுவர் இருவர் வந்தனர். ஆ அழகிய பச்சைக் கிளி இதை பிடித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பேசிக் கொண்ட அவர்கள் சிறிது தானியங்களை கீழே எறிந்து வலை விரித்தனர்.
   கிளிக்கு மிகவும் சந்தோஷம்! காகத்தை கூப்பிட்டு உணவளிக்கிறார்கள்! ஆனால் நமக்கோ தேடிவந்து கொடுக்கிறார்கள்! சாப்பிடுவோம் என்று கீழே இறங்கியது. அப்போதுதான் திரும்பிய காகம், ஏ கிளியே என்ன செய்கிறாய்? தெரிந்துதான் செய்கிறாயா? இது பகைவர்கள் விரித்த வலை! வீணாக மாட்டிக் கொள்ளாதே என்று தடுத்தது.
   கிளியோ ஆணவத்தில் முட்டாள் காகமே என்னை தேடிவந்து உணவளித்தது உணக்கு பொறுக்கவில்லை! உன் பேச்சை கேட்க முடியாது! ஓடிப்போ என்று கீழே குதித்து தானியங்களை கொத்த ஆரம்பித்து வலையில் சிக்கிக் கொண்டது.
  அப்போது காகம் கிளியே! சொன்ன பேச்சை கேட்காமல் ஆணவத்தால் வலையில் சிக்கிக் கொண்டாயே என்று வருந்தியது. வலை வீசியவர்கள் வந்து கிளியை கூண்டில் அடைக்க தன் அழகே தனக்கு எதிரியானதை முதன் முதலில் உணர்ந்தது கிளி!
  இப்போது வருந்தி என்ன பயன்?


உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் மிக உயரமான மலை நந்தா தேவி!

Thursday, April 26, 2012

நான் கை கால் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார்! - அஜீத் 'ஓபன் டாக்'!

என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜித் குமார்.

சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...

செல்ப் புரமோஷன் கிடையாது...

"நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''

மனதை பாதித்த விமர்சனம்...

''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.

நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''

நெகடிவ் விமர்சனங்கள் குறித்து...

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.

கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''

ரசிகர்களுக்கு...

''இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க.

உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி தட்ஸ் தமிழ்

தளிர் ஹைக்கூ கவிதைகள்! 7

சங்கீதத்தில்
சங்கேதம் பேசுகின்றன
இரவு பறவைகள்!

ஓசை சத்தத்தில்
உறங்கவில்லை இரவு
புல்லினங்கள்!

சலனப்பட்டு
வாழ்க்கை இழக்கிறது
நீர்!

மரங்களின் பின்னால்
மறைந்திருக்கின்றன
ஊர்கள்!

ஓசை எழுப்பினாலும்
சுகம்தான்!
காற்று!

காற்றில் காதல்தூது!
பூத்தன
மரங்கள்!


இச்சை கொண்டன
கண்கள்
பச்சையான பூமி!

மின்னியது
கூசவில்லை!
மின்மினி!

வெட்டியதும்
பாராட்டினார்கள்!
குளம்!

துரத்திக்கொண்டே இருக்கிறது
தெரியவில்லை!
காலம்!

 

வெள்ளை தேவதை விஜயம்
பெருமூச்சுவிட்டது பூமி
நிலா

கட்டிவைத்தார்கள்
மணத்தது!
கூந்தலில் பூ!

தங்கள் வருகைக்கு நன்றி கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!

Wednesday, April 25, 2012

நான் ரசித்தசிரிப்புகள் 9

நான் ரசித்தசிரிப்புகள் 9

சோப்பு விளம்பரத்துல நடிக்க ஒரு பொண்ணு தேவை!
பொண்ணு அழகா இருக்கணுமா?
இல்ல அழுக்கா இருக்கணும்!
               உஷா சாரதி

தலைவர்கள் மேலே ஊழல் புகார் வந்ததும் நிருபர்கள் எல்லோருக்கும் வெள்ளைப்பேப்பரை வரிசையா கொடுத்தாரே என்ன விஷயம்?
வெள்ளை அறிக்கை தர்றாராம்!.
                       தேனி முருகேசன்

டாக்டர் பட்டம் கொடுக்க வந்தவங்க கிட்ட நம்ம தலைவர் எதுக்கு பல் டாக்டர் பட்டம் கேக்கறாரு?
  அப்பத்தானே எல்லோரட சொத்தையெல்லாம் பிடுங்கலாம்!
                        வி.சாரதிடேச்சு

ஆனாலும் அவரைப்போல ஒரு முன் யோசனைக்காரரை பார்க்க முடியாது!
  ஏன்?
கல்யாணபத்திரிக்கையோட கூடவே ஒரு மொய்கவரையும் குடுக்கிறாரே!
                         ஜா.ரவி
அரண்மணை ஆராய்ச்சிமணியை ஏன் ஒரே தடவை அடித்தாய்?

மிஸ்டு கால் கொடுத்தேன் மன்னா!
                     தீபிகா சாரதி

மனைவி ஒரு மந்திரி சரிதானே!
இல்லப்பா மந்திரியை அடிக்கடி மாத்தலாமே!
                        ருக்மணி தேசிகன்.

பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை!
நிஜமாவா?
 செக்கிங் ஏறினால்தான் கவலை!
                  வி. சாரதி டேச்சு
ஏன் உன் வீட்டு வேலைக்காரியை வேலையை விட்டு நிப்பாட்டிட்டே?
அவளும் என் புருஷனை கேவலமா திட்டுறது சந்தேகத்தை குடுத்தது!
                            டி.சேகர்.
தலைவரோட தமிழ் மொழிபெயர்ப்பு தாங்க முடியலை!
எப்படி?
பேங்க் பாஸ் புக்கை ‘தேர்ச்சிபுத்தகம்’னு சொல்றாரு!
         பி.அப்பாதுரை
அவரு ரொம்ப டுபாக்கூரா?
ஆமா!குற்றப்பத்திரிக்கைக்கு பொறுப்பாசிரியரா இருக்கறதா சொல்றாரு!
                          லெ.நா.சிவகுமார்

தலைவருக்கு வாஸ்து நம்பிக்கை ரொம்ப ஜாஸ்திப்பா!
என்ன?
கன்னத்துல விழுந்த அறைக்கு வாஸ்து பார்க்க வாஸ்து நிபுனரை தேடுறாரே!
                 பி.ஜி.பி இசக்கி


கட்சி ஆபிஸுக்கு எதிரே ஓட்டல் நடத்தறவனுக்கு ரொம்ப கொழுப்புத் தலைவரே!
ஏன்யா என்னாச்சு!
ஜெயில் சாப்பாடு கிடைக்குமுனு போர்டு வச்சிருக்கான்!
                            பா.தீபன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Sunday, April 22, 2012

பூமி எனும் சாமி: இன்று சர்வதேச பூமி தினம்

சூரியக் குடும்பத்தில், பல் உயிரினங்களும் வாழத் தகுதியான ஒரே கிரகம் நாம் வாழும் பூமி மட்டுமே. அப்படிப்பட்ட பூமியை, பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சர்வதேச பூமி தினம் ஏப். 22ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் "கைலார்ட் நெல்சன்' என்பவரின் தீவிர முயற்சியால் 1970ல், இத்தினம் தொடங்கப்பட்டது. தற்போது "எர்த் டே' 175க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. பூகம்பம், சுனாமி,வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல், எரிமலை வெடித்தல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு காரணம், பூமியின் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தான்.

அதிகரிக்கும் வெப்பநிலை: தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவால் ஓசோன் பாதிக்கப்படுகிறது. வெப்பநிலை மற்றும் பருவநிலையிலும் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் காற்று, நீர் மாசுபடுகிறது. அதிக மழை அல்லது வறட்சி என இயற்கை சீரழிவுகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க கரியமில வாயுவின் அளவை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

தடுக்கும் வழிகள்: ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்க வேண்டும். அனைத்து வகை குப்பைகளையும் குறைக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சி பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும். "புளோரெசன்ட்' பல்பினை பயன்படுத்த வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது "பாலிதீன்' பயன்படுத்துவதை, முடிந்தவரை குறைக்க வேண்டும். குறைந்த தூரம் செல்ல மோட்டார் வாகன பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மாசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்சசாலைகள், தேவையான மின் சக்தியை காற்றாலைகள் மூலம் பெறலாம். பாடப்புத்தகங்களில் சுற்றுச்சுழல் தொடர்பான பாடங்களை சேர்த்து, வருங்கால சந்ததியினர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளச் செய்யலாம். 

thanks to dinamalar

சென்ரியுவாய் திருக்குறள் 11-15

குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
கலைஞர் உரை:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
மு. உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

தளிரின் சென்ரியு

அமிழ்தம் உண்டும்
இறக்கின்றன
மரங்கள்.

அமிழ்தாகிய மழையை உண்டும் வெட்டப்பட்டு இறக்கின்றன மரங்கள்.

உயிர்கள் உய்ய
வானம் பெய்யும்
அமிழ்தம்!


 
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.
மு. உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

தளிர் சென்ரியு

ஆக்குவித்து
ஆகுதியாகும்
மழை!

உணவுப்பொருளை விளைவித்து உணவாகவும் ஆகும் மழை!
ஆகுதி= உணவு

விளைநிலம்
விவசாயியின் உணவு
மழை!

விளைபொருளுக்கும் விவசாயியிக்கும் உணவாகக் கூடியது மழை!

குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
கலைஞர் உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
மு. உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

தளிர் சென்ரியு


பொய்த்த மழை
தவித்தது
பசித்த வயிறுகள்

மழை பொய்த்தால் பசியால் உலகம் தவிக்கும்.

ஆழீ நீர்
அகற்றுமா
ஆழியின் பசி!

கடலளவு நீர் இருப்பினும் உலகத்தின் பசியை கடலால் தீர்க்க முடியாது

குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
கலைஞர் உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
மு. உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 14

வெடித்த நிலம்
மழுங்கிய ஏர்
பெய்யா மழை!

மழை பெய்யாவிட்டால் நிலம் வெடித்து ஏர் மழுங்கி கிடக்கும்

குன்றிய மழை
குதூகலித்தன
பூண்டுகள்!

மழை குன்றியமையால் விளை நிலத்தில் புல் பூண்டுகள் மண்டின.

குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கலைஞர் உரை:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
மு. உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.


தளிர் சென்ரியு


நன்மை தீமை
நன்றாய் தருகிறது
மழை!

மழையால் விளைச்சல் பெருகி நன்மை! அதே சமயம் தொற்று நோய்கள் பரவி தீமையும் ஏற்படுகிறது.

மகிழ்வு வருத்தம்
ஒருங்கே சேர்ந்தது
மழை!

மழையால் சிலருக்கும் மகிழ்வும் சிலருக்கு வருத்தமும் ஏற்படுவது இயல்பு
 தங்கள் வருகைக்கு நன்றி கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...