நான் ரசித்தப் பூக்கள்


முன் உதாரணம்!
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்; அவருக்கு ஒரே மகன்தான். தற்போது, பி.காம்., முடித்து, வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான். வேலை கிடைக்காவிட்டால், சுயதொழில் செய்யவும் வங்கி லோனுக்கு விண்ணப்பித்துள்ளான். சமீபத்தில், நண்பரை சந்தித்த போது, அவர் மகனைப் பற்றி விசாரித்தேன். நண்பர் மனம் நெகிழ்ந்து, கண் கலங்க கூறிய தகவல், என்னையும் நெகிழ வைத்து விட்டது.
அவர் கூறியது... "காலையில் எழுந்தவுடன், நாளிதழ்களைப் பார்க்கிறான். அதன்பின், எனக்கும், வீட்டிற்கும் தேவையானவற்றை வாங்கி வருவான். பிறகு குளித்து, டிபன் முடித்தவுடன், 10:00 மணியளவில் தலைமை அஞ்சல் அலுவலகம் சென்று, அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களை அனுப்பி விட்டு, ஒரு மணி நேரம், அங்கு வருபவர்களுக்கு மணியார்டர் மற்றும் படிவங்களை நிரப்பிக் கொடுத்து உதவுகிறான்.
'
அதன்பின், வட்டாட்சியர் அலுவலகம் சென்று, மாலை, 5:00 மணி வரை, அங்கு வருபவர்களுக்கு மனுக்களை எழுதிக் கொடுக்கிறான். மாலையில் வீடு திரும்பும் போது, மறுநாளைக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வருவான். அத்துடன், அவன் அம்மாவிடம், குறைந்தது, நூறு ரூபாயாவது கொடுத்து விடுவான். ஒரு நாள் கூட, அவன் சோர்ந்து போனதே கிடையாது.
"
இப்படி ஒரு மகன் எனக்கு கிடைத்தது, நான் செய்த புண்ணியம் என்றே நினைக்கிறேன்...' எனச் சொன்னவர் கண்களில் நீர் வடிந்தது.
இன்றைய வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு, இந்த இளைஞனை முன்னுதாரணமாக கொள்ளலாம் தானே!
.பொன்னுசேகரன், சிவகாசி.
நன்றி வாரமலர்.
இன்றைய இளைஞர்கள் வெட்டியாய் சுத்தி திரியாமல் மேலே கண்ட கடிதத்தில் உள்ள இளைஞசரைப் போல் மாறுவார்கள் எனில் நிச்சயம் நம் தமிழ் நாடு முன்னேறும்.

இந்த வார ஆனந்த விகடனில் ஷோபா சக்தி எழுதிய ரூபம் என்ற சிறுகதை படித்தேன்.  சற்று முன் தான் கதைக்களம் இலங்கை தமீழீழ போராளியைப்பற்றியது. வெகு நாள்வரை இந்த மாதிரிக் கதைகள் என்னை கவர்ந்ததில்லை. பொழுதுபோகாமல் அசுவாரசியமாய் படிக்க ஆரம்பித்தவனுக்கு படித்து முடிக்கும் போது கண்களில் அசாதரணமாய் கண்ணீர்.
     அந்த அளவுக்கு எழுத்தாளர் அந்த கதையின் பாத்திரமான கானகனை சித்தரித்து இருந்தார். சிறு வயதில் தொலைக்காட்சிக்கு ஏங்கும் சிறுவனாக பக்கத்து வீட்டில் அக்கா துனையுடன் தொலைக்காட்சி பார்க்கும் நிகழ்வை ஆசிரியர் விவரித்த விதம் அப்படியே என் சிறுவயது ஞாபகத்தை ஏற்படுத்திவிட்டது. தீப்பெட்டியில் டி.வி செய்து விளையாடுவதை அவர் வர்ணித்த விதம் அருமை. ஒரு இலங்கைப்போராளியின் வாழ்க்கையை அருமையாக சித்தரித்து நம்மை இலங்கைக்கே அழைத்துச் செல்கிறார்,ஆசிரியர் ஷோபாசக்தி கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய கதை இது.
 அதே இதழில் வெளிவந்த ஆழியாளின் கவிதை இது.
என்ர ஊர் சின்ன ஊர்
பெரியம்மா,பெரியப்பாக்களாலும்-மாமா
அத்தை,சித்தி,சித்தப்பாக்களாலும்,
கிளிமாமி,விஜி மாமி
வடிவுஅன்ரி,வனிதாஅன்ரி
சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர்.

அம்மம்மா,அம்மப்பாவும்
அப்பப்பா அப்பம்மாவும்
தாத்தா,பாட்டி,ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள்.
ஒருநாள்
மீன் விக்கப்போனசெல்லம்மா பாட்டியை
மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு கீழே கூறாக்கி வீசினார்கள்

பெரிய மாமாவும் ராஜி அத்தையும்
வெள்ளவத்தை பெற்றொல் நெருப்பில் கருகினர்.
பிறகு
ரவி சித்தப்பா இயக்கத்துக்குப் போனார்.
வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்திற்குப் போனார்.
சேகர் சித்தப்பா காணாமல் போனார்.
சித்தி சின்னாபின்னமாகி செத்துப் போனா.
(என்ரை ஆசை சித்தி )
ஆச்சியையும் போட்டுத் தள்ளினாங்கள்.

சொக்கா அங்கிள் துரோகியாய்த் தொங்கினார்.

நோர்மல் சாவு அப்பாவுக்கு
சுவிஸில் கிளி மாமி
விஜி மாமியும் மாமாவும் கனடா

இரண்டு பக்கமும் ஷெல் அடிச்சு
பல தலைகள் சிதறிப் போச்சு

இப்ப
பென்னாம்பெரிய உலகத்தில் இருக்கிறேன் நான் - –ன் போல
நிறையச் சிறுவர்களோடு.

எங்களைச் சுற்றிலும்  முள் வேலி
கண்டுபிடி எங்களைக் கண்டுபிடி- எங்க
கண்டுபிடி எங்களைக் கண்டுபிடி!


படித்தவுடன் மனதை பிழிந்த கவிதை இது. கவிதையின் தலைப்பை அவசரத்தில் மேலே இட மறந்து விட்டேன். கொப்பித் தாளில் கிடந்த (பான் கீ மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது?
    இலங்கை தமிழர்களின் சோகத்தை சொல்லில் அடக்கிய இந்த கவிதையும் கதையும் என் நெஞ்சை என்னவோ செய்தன. இனியாவது தமிழக அரசும் மத்திய அரசும் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு விஷயத்தில் உறுதியாக தலையிடுமா எனத் தெரியவில்லை. ஊம் இவர்களுக்கு தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவே நேரம் சரியாயிருக்கே!.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!