ராகுல் காந்தி பிரதமராக மக்களிடம் ஆதரவு அதிகரிப்பு: சிஎன்என்- ஐபிஎன் கருத்துக் கணிப்பு


ராகுல் காந்தி பிரதமராக மக்களிடம் ஆதரவு அதிகரிப்பு: சிஎன்என்- ஐபிஎன் கருத்துக் கணிப்பு




  டெல்லி: நேருவின் கொள்ளுப் பேரனும், இந்திரா காந்தியின் பேரனும், ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி அடுத்த பிரதமராக மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி நடத்தியக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர்களிலேயே ராகுல் காந்திக்குத்தான் அதிகபட்சமாக 42 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாம். நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளதாக கூறினார் முன்னணி கருத்துக் கணிப்பாளரும், டெல்லியைச் சேர்ந்த சிஎஸ்டிஎஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான யோகேந்திர யாதவ்.

கடந்த மாதம் இந்தக் கருத்துக் கணிப்பை சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்காக யாதவின் நிறுவனம் நடத்தியது. மொத்தம் 19 மாநிலங்களில், 39 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்டு அதன் முடிவுகளை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

மன்மோகன் சிங்கை நீக்கினால் அவருக்குப் பதில் யாரை பிரதமராக நியமிக்கலாம் என்ற கேள்விக்கு 42 சதவீதம் பேர் ராகுல் என்று கூறியுள்ளனர்.

அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல் பெயரை கூறியுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு 6 சதவீதமாக இருந்த ஆதரவு தற்போது 19 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.

அடுத்த இடத்தை மன்மோகன் சிங்கும், சோனியாவும் தலா 10 சதவீத ஆதரவுடன் பகிர்ந்து கொள்கின்றனர். .சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தலா 7 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே இல்லை என்றும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

ராகுலுக்குப் போட்டியாக ஒரு காங்கிரஸ் தலைவரும் இல்லை என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 34 சதவீதம் பேர் மன்மோகன் சிங்கை நீக்கி விட்டு ராகுலை பிரதமராக்க வேண்டும் என்று கூறியுள்ளனராம். செயல்படாத பிரதமர் என்ற 'நற்பெயரை' மன்மோகன் பெற்றுள்ளதால் இவ்வளவு அதிக அளவிலான அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று 22 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

காங்கிரஸ் தரப்பில் 33 சதவீதம் பேரும், கூட்டணிக் கட்சிகளில் 25 சதவீதம் பேரும் மன்மோகன் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 54 சதவீதம் பேர் ராகுல் காந்தி நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்றும், ஏழைகள் மீது உண்மையான அக்கறை கொண்டவர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மன்மோகன்சிங்கின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 56 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் இது கடந்த 2009ல் 70 சதவீதமாக இருந்தது. தற்போது அது வெகுவாக குறைந்துள்ளது.

பிரமதர் நல்லவர், ஊழலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் என்று 27 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் ஊழலை ஒழிக்க ஒன்றும் செய்யவில்லை என்று 31 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மன்மோகன் சிங் மீது அதிருப்தியுடன் இருப்பதாக 24 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இது கடந்த 2007ல் 16 சதவீதமாகவும், 2009ல் 17 சதவீதமாகவும் இருந்தது.

பாஜகவுக்கு செல்வாக்கே இல்லை

பாஜகவைப் பொறுத்தவரை மக்கள் மனதில் அக்கட்சிக்கு நல்ல இடம் இல்லை என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு தெளிவாக்கியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு அத்வானிக்கு 15 சதவீத ஆதரவாவது இருந்தது. இப்போது அது வெறும் 4 சதவீதமாக குறைந்து போய் விட்டது.

பிரதமர் பதவிக்கு பாஜகவில் யார் தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என்று கடந்த 2009ல் 2 சதவீதம் பேர் கூறியிருந்தனர். ஆனால் அது தற்போது 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2014
ல் லோக்சபா தேர்தலை யார் தலைமையில் பாஜக சந்திக்கலாம் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என்று 19 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மேலும் பாஜக தொண்டர்கள் மத்தியிலும் மோடிக்கே அதிக ஆதரவு காணப்படுகிறது. கிட்டத்தட்ட 33 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுஷ்மா சுவராஜுக்கு 15 சதவீதம் பேரும், ராஜ் நாத் சிங்குக்கு 7 சதவீதம் பேரும், அருண் ஜேட்லிக்கு 4 சதவீதம் ஆதரவும் கிடைத்துள்ளது.

ஏன் இந்த திடீர் கருத்துக் கணிப்பு?

அமெரிக்காவுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக சோனியா காந்தி சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. திரும்பி வர ஒரு மாதமாகும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த வாரம் அவர் ராகுல் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவே காங்கிரஸ் நிர்வாகத்தைக் கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மூத்தவர்களான பிரணாப் முகர்ஜியோ, மன்மோகன் சிங்கோ இடம்பெறவில்லை. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் முனுமுனுப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று கூறி ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ் தமிழ்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!