பெல்லுக்கு வாழ்வு தந்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த தோனி!


பெல்லுக்கு வாழ்வு தந்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த தோனி!


நாட்டிங்காம்: டிரன்ட் பிரிட்ஜில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன. இங்கிலாந்து வீரர் இயான் பெல் நூதன முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார். இருப்பினும் இங்கிலாந்து கேப்டன் உள்ளிட்டோர் கெஞ்சிக் கேட்டதால் அந்தக் கோரிக்கையை இந்திய கேப்டன் டோணி திரும்பப் பெற்றார். இதனால் ரன் அவுட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஆடினார் இயான் பெல். அவரது அபார ஆட்டத்தால் தற்போது ஆட்டம் இங்கிலாந்துப் பக்கம் திரும்பி விட்டது. இதனால் டோணியின் முடிவால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நீதிமன்றம் இப்படி ஒரு விசித்திரத்தை இதுவரை கண்டதில்லை என்று பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் வசனம் பேசுவார். அதேபோல ஒரு காட்சி நேற்று நாட்டிங்காமில் நடந்தேறியது.

இயான் பெல் நேற்று ரன் அவுட் செய்யப்பட்ட விதம், அதை பின்னர் இந்திய அணி திரும்பப் பெற்ற செயல், மீண்டும் இயான் பெல் ஆட வந்த காட்சி ஆகியவை கிரிக்கெட் உலகையே பெரும் சலசலப்புக்குள்ளாக்கி விட்டது.

நாட்டிங்ஹாம்,ஆக.1:சர்ச்கைக்குரிய முறையில் ரன் அவுட் கொடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் இயான் பெல்லை மீண்டும் இந்திய கேப்டன் டோனி ஆட அழைத்தது விளையாட்டு உணர்வை மேம்படுத்தும் செயல் என்று அனைவரும் பாராட்டி உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 3வது நாளான நேற்று இங்கிலாந்து தனது 2வது இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருந்தது. தேநீர் இடைவேளைக்கு முன்பாக கடைசி பந்து வீசப்பட்டது. அப்போது இங்கிலாந்து வீரர் மார்கனுக்கு இஷாந்த் சர்மா பந்து வீசினார். அந்தப் பந்தை அடித்த மார்கன், பந்து வேகமாகப் போனதைப் பார்த்து சரிதான், பவுண்டரிக்குத்தான் போகிறது என நினைத்து விட்டார். அதைப் பார்த்த மறு முனையில் நின்றிருந்த இயான் பெல் பெவிலியனை நோக்கி நடையைக் கட்ட ஆரம்பித்தார்.

ஆனால் பந்தை தடுத்து நிறுத்திய பிரவீன்குமார் அதை பீல்டரிடம் வீச, இயான் பெல் ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் நடுவர்கள் என்ன முடிவு சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர் 3வது நடுவரின் முடிவை எதிர்நோக்கினர். அவரும் டிவியில் ரீப்ளே பார்தது அவுட் என்று அறிவித்தார். இதனால் இயான் பெல் ரன் அவுட் என அறிவிக்கப்பட்டது.

பெவிலியனை நோக்கி போய்க் கொண்டிருந்த இயான் பெல் ராட்சத ஸ்கோர்ட் போர்டுக்கு மேல் அவுட் என்று அறிவிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இங்கிலாந்து அணியும் குழப்பமடைந்தது.

பார்த்துக் கொண்டிருந்த இங்கிலாந்து ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய வீரர்களைப் பார்த்து ஆவேசமாக குரல் எழுப்பினர். திட்டினர், கிண்டலடித்தனர். தேநீர் இடைவேளைக்காக இரு அணியினரும் பெவிலியன் திரும்பி விட்டனர்.

கூடிப் பேசிய பயிற்சியாளர்கள்-கேப்டன்கள்

பெவிலியன் திரும்பிய பின்னர் இந்திய, இங்கிலாந்து அணிகளின் பயிற்சியாளர்களும், கேப்டன்களும் சந்தித்துப் பேசினர். இயான் பெல்லுக்கு கொடுக்கப்பட்ட ரன் அவுட் குறித்து ஏமாற்றம் தெரிவித்த கேப்டன் ஸ்டிராஸ், இந்தியா தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கேப்டன் டோணி தனது அணியின் மூத்த வீரர்களுடன் ஆலோசித்தார். அதன் பிறகு முடிவை திரும்பப் பெறுவதாக அவர் நடுவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பெல்லுக்குக் கொடுக்கப்பட்ட ரன் அவுட்டும் திரும்பப் பெறப்பட்டது. இதனால் அவர் மீண்டும் ஆட அழைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை முடிந்து இங்கிலாந்து வீரர்கள் களம் இறங்கியபோது பெல் மீண்டும் ஆட வந்தார். இதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர் இங்கிலாந்து ரசிகர்கள். இந்திய வீரர்களைப் பார்த்து திட்டிய வாய்கள், இந்திய வீரர்களை கைதட்டி புகழ்ந்து வரவேற்றனர்.

மேலும் இங்கிலாந்து வீரர்களும் இந்தியாவின் பெருந்தன்மையைப் பாராட்டும் வகையில் தங்களது காலரியிலிருந்து எழுந்து நின்று களத்திற்குள் வந்த இந்திய பீல்டர்களை கை தட்டி வரவேற்றனர்.

டோணி முடிவு சரியா?

இந்தியாவின் பெருந்தன்மையால் மீண்டும் ஆட வந்த இயான் பெல் அடித்து நொறுக்கி சதத்தைக் கடந்து 159 ரன்களைக் குவித்து இங்கிலாந்துக்கு வலுவான நிலையை ஏற்படுத்தி விட்டார். இதை சலனமில்லாமல் இந்திய வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி இந்தியாவை விட 374 ரன்கள் முன்னிலை பெற்று விட்டது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றால், இந்தியா தனது முதலிடத்தை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தியாவின் முடிவு குறித்து இரு விதமான கருத்துக்கள் எழுந்துள்ளன. பலர் இந்த முடிவைப் பாராட்டியுள்ளனர். பலர் விமர்சித்துள்ளனர்.

இந்தியாவின் முடிவு தவறு-மைக்கேல் ஹோல்டிங்

முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், என்னைப் பொறுத்தவரை இயான் பெல் ரன் அவுட் ஆகி விட்டார். மீண்டும் அவரை ஆட அழைத்த முடிவு தவறானது. ஏன் டோணி இந்த முடிவை எடுத்தார் என்பது புரியவில்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இயான் பெல் பந்து பவுண்டரிக்குப் போவதாக நினைத்து நடக்க ஆரம்பித்து விட்டார். அதாவது அவரே நடுவராக மாறி விட்டார். இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்கு இந்தியா பொறுப்பேற்க முடியாது. உண்மையில் களத்தில் இருந்த நடுவர்கள்தான் இந்தக் குழப்பம் ஏற்படாத வகையில் செயல்பட்டிருக்க வேண்டும். அவர்களே இதை 3வது நடுவரின் முடிவுக்கு விட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றார்.

டோணி முடிவு பாராட்டுக்குரியது-கவாஸ்கர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் டோணியைப் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், விளையாட்டுதான் இங்கு முக்கியமானது. அதன் நெறிகள், மதிப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டோணியின் முடிவு பாராட்டுக்குரியதே.

அதேசமயம், இந்தியாவின் முடிவை இயான் பெல் வரவேற்றுப் பாராட்டி, நல்லது, அதேசமயம், நான் தவறு செய்து விட்டேன். எனவே நான் விளையாட மாட்டேன் என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இது இந்தியாவின் முடிவை விட மிகச் சிறந்ததாக மாறியிருக்கும் என்றார் கவாஸ்கர்.

வார்ன் பாராட்டு

டோணியின் முடிவால் கிரிக்கெட் ஆட்டத்தின் பெருமையும், கவுரவமும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாக ஷான் வார்ன் கூறியுள்ளார். இது 20 நிமிடத்தில் நடந்த ஒரு நிகழ்வு. இதில் தொடர்புடைய அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். விளையாட்டின் பெருமையை நிலை நிறுத்தியுள்ளனர் என்றார்.

டோணியின் செயல் இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வரும் கசப்புணர்வுகள், பதிலுக்குப் பதில் பேட்டிகள் ஆகியவற்றை அடியோடு தணித்திருப்பதாக பல்வேறு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய அணிக்கும் சர்வதேச அளவில் பெரும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய அணியைப் பாராட்டியுள்ளது.

இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் தலைவர் ஹாரூண் லோர்காட் கூறுகையில், கேப்டன் டோணி மற்றும் அவரது அணியினரின் முடிவு பெரும் பாராட்டுக்குரியது, முதிர்ச்சியானது. கிரிக்கெட்டின் பெருமையை அவர்கள் நிலை நிறுத்தியுள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இது மிகவும் சிறப்பானது என்றார்.

இந்தக் குழப்பத்துக்கெல்லாம் காரணமான இயான் பெல் இந்த விவகாரம் குறித்து பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், பந்து பவுண்டரிக்குப் போவதாக நான் நினைத்து நடக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் நான் அவசரப்பட்டு விட்டதை ஒப்புக் கொள்கிறேன். இது எனக்கு நல்ல பாடம். எனது பக்கம்தான் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். விதிப்படி நான் அவுட்தான். இருப்பினும் இந்திய வீரர்கள் கிரிக்கெட்டின் பெருமையை நிலை நிறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். இதனால்தான் நான் மீண்டும் ஆட முடிந்தது என்றார்.

பெல்லுக்கு புதுவாழ்வு கொடுத்து விட்டார் டோணி. ஆனால் பெல்லோ, இந்திய அணிக்கு 'மணி' அடித்து விட்டார் தனது அபார ஆட்டத்தால்.

வாழ்க கிரிக்கெட்!
நன்றி தட்ஸ் தமிழ்!

டிஸ்கி  நான் சொந்த வேலையாக வெளியூர் செல்வதால் இரண்டு நாட்களுக்கு பதிவிட இயலா நிலையில் உள்ளேன். எனது கொடுமையான பதிவுகளை படிப்பதிலிருந்து உங்களுக்கு இரண்டு நாட்கள் விடுதலை அளிக்கிறேன். ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த தங்கள் கருத்தினை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

  1. போட்டியில் வெற்றி தோல்வியை விட மிகவும் முக்கியம் தகைமை.

    தோனி எடுத்த முடிவால் இந்தியா போட்டியில் தோற்றாலும், உலக கிரிக்கெட் ரசிகர்கள் மனதை வென்றது..
    இந்திய ஆதரவாளர்கள் வீறுநடை போடலாம் தங்கள் அணித் தலைவரின் பெருந்தன்மையினால்!!

    மக்கள் மனதை வெல்வதை விட பெரிய வெற்றி ஏது?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!