திருமுக்கூடலூர் பயண அனுபவங்கள்!

 திருப்பராய்துறை ஆலய முகப்பு கோபுரம்
என் மனைவியின் பிறந்தகம் கரூரை அடுத்துள்ள திருமுக்கூடலூர். அதனால் வருடம் ஒருமுறையோ இருமுறையோ திருமூக்கூடலூர் பயணம் செல்வது வழக்கம் ஆகிவிட்டது. என் மாமனார் ஸ்ரீ கிருஷ்ண சாமி குருக்கள் மாமியார் ஸ்ரீமதி ருக்மணி அம்மாள் இருவருக்கும் வயது 70ஐ கடந்துவிட்டது. மூட்டுவலி, சர்க்கரை இரத்த அழுத்தம் என்ற நோய்கள் வேறு. தள்ளாமை நோய்கள் காரணமாக அவர்கள் எங்கள் ஊர்ப்பக்கம் அடிக்கடி வர முடியாது. என் மனைவிக்கு தாய்ப்பாசம் அதிகம். அதனால் வருடம் ஒருமுறை அல்லது இருமுறை நானே திருமுக்கூடலூருக்கு அழைத்துச் செல்வது உண்டு. சிலசமயம் ஊரில் விட்டுவிட்டு உடனே திரும்பி விடுவேன். என் மனைவி ஒரு பத்து பதினைந்து தினங்கள் அங்கிருந்துவிட்டு திரும்புவார். சிலசமயம் நான் ஒரு இரண்டு மூன்று தினங்கள் வேலைகளை தள்ளிவைத்துவிட்டு உடன் தங்கி மனைவியை அழைத்து வருவதும் உண்டு.
    என் வாழ்க்கையில் இந்த மாதிரியானா தொலைதூர பயணங்கள் என்பது கடந்த 2008ம் ஆண்டுவரை கிடையாது. எங்கள் ஊரைச்சுற்றியுள்ள 50லிருந்து 100கி.மீ தொலைவுவரையே என் பயணங்கள் இருக்கும். முதல் முறையாக என் மனைவியை பெண் பார்க்கத்தான் நான் தென் மாவட்டத்திற்கு பயணப்பட்டேன். அந்த பயண அனுபவமே சுவாரஸ்யமானது. அதை பிறிதொருமுறை எழுதுகிறேன்.
    
முதல் முறை பயணிக்கும்போதே காவிரி டெல்டா பகுதியான கரூர் என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது. அதுவும் கரூரை கடந்து என் மாமனார் ஊரான திருமுக்கூடலூர் எனக்கு மிகவும் பிடித்தும் போனது. அந்த ஊரின் சாலையோர வயல்களும் தென்னந்தோப்புக்களும் கரும்பு வாழைத்தோட்டங்களும் ஜீவ நதியான காவிரியும் என் மனதை கொள்ளை  கொண்டதில் ஆச்சர்யம் இல்லை! எங்கள் பகுதியும் கிராமம் என்றாலும் காவிரி போன்ற ஆறுகள் கிடையாது. இந்த ஊரில் இன்னொரு குறிப்பிடத்தக்க வசதி ஒரு மணிக்கொரு பேருந்து வசதி. இந்த வசதி நகரம் அருகில் இருந்தும் எங்கள் கிராமத்தில் கிடையாது.
 கோயில் வெளிப்பிரகாரத்தில் என் மனைவி மகள்களுடன்

    இதனால் நானும் இந்த கிராமம் செல்ல ஆர்வப்படுவது உண்டு. என்ன அதிகநேர மின்வெட்டு தொந்தரவு தரும். டிவி ஒன்றுதான் பொழுது போக்கு. என்றிருக்கும். பக்கத்தில் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆலயம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகான ஆலயம். சில சமயம் அங்கு செல்வதும் உண்டு.
   இந்த முறை கடந்தமாதம் 29ம் தேதி இரவு புறப்பட்டு 30ம் தேதி விடியற்காலையில் கரூர் சென்று அடைந்தோம். அப்போதுதான் கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா முடிவு பெற்று இருந்தது. ஆங்காங்கே மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வருகை தருமாறு ப்ளக்ஸ் போர்டுகளில் வரவேற்பு தந்து கொண்டிருந்தார்கள் முக்கியஸ்தர்கள். அங்கிருந்து திருமுக்கூடலூர் காலை 6.00 மணிக்கு சென்று விட்டோம்.
 நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஆலய நுழைவு வாயில்
   அன்று முழுவதும் ரெஸ்ட் எடுத்துவிட்டு மறுநாள் அங்கிருந்து திருப்பராய்த் துறை சென்றோம். இங்கு விவேகானந்தர் ஆஸ்ரமம் ஒன்றும் பராய்துறை நாதர் எனும் தாருகா வனேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை தரிசிக்க வேண்டும் என்பது என்னுடைய ஐந்து ஆண்டுகால ஆவல். கரூர் முதல் முறை செல்லும் போதே பஸ்ஸில் இருந்து இந்த ஆலயத்தை பார்த்தது உண்டு. அப்போதே செல்லவேண்டும் என்று நினைத்து தள்ளிப் போனது. அதை இந்த ஆண்டு பூர்த்தி செய்தேன். கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் குளித்தலை தாண்டி இருக்கிறது பராய்த்துறை. இதன் அருகில் தான் முக்கொம்பு படகுத்துறையும் இருக்கிறதாம்.
   கரூர் திருச்சி வழியில் சாலையோரம் காவிரிக் கரை வாய்க்கால்கள் எப்போதும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். இந்த ஐந்து ஆண்டுகளில் இவை வறண்டு போனதை இந்தமுறைதான் கண்டேன். அதே போல் இந்த சாலையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அகலப்படுத்தி வருகிறார்கள் இன்னும் முழுதும் முற்று பெறவில்லை என்பது வருத்தமாக உள்ளது. அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளை மக்கள் அதிகம் நம்புகிறார்கள். இதில் வீடியோ ஆடியோ வசதியுடன் சினிமா படங்கள் போட்டுக்கொண்டு ஒரு இரண்டு மணி நேரத்தில் திருச்சிக்கு கொண்டுவந்து சேர்க்கிறார்கள் கட்டணம் 35ரூபாய். கரூரில் இருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளுமே நிரம்பி வழிகின்றன. நிறைய பேர் திருச்சி குளித்தலை போன்ற நகரங்களில் பணி செய்கின்றனர் போலும். சீட் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.
  
 கோயிலின் தலவிருடசம் பராய் மரம்

 ஒருவழியாக வெள்ளியன்று திருப்பராய்த்துறை நாதரை மதியம் 12 மணி அளவில் தரிசித்தோம். இந்த ஆலய குருக்கள் நடந்து கொண்ட முறை கொஞ்சம் வருத்தம் அளித்தது. நானும் ஒரு குருக்கள் என்ற முறையில் எனக்கு மிகவும் ஆதங்கமாக இருந்தது. ஆலயத்திற்குபுதிதாக வருபவர்களுக்கு தல வரலாறு சுருக்கமாக கூறி மந்திரங்கள் ஓதி பிரசாதங்கள் அளித்து வழி அனுப்புவோம் நாங்கள். ஆனால் இந்த குருக்கள் எங்களை கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் அந்த சமயத்தில் ஆலயத்தில் வேறு யாரும் இல்லை. அவர் பாட்டிற்கு கோபுர வாசல் படியில் அமர்ந்து இருந்தார். நாங்கள் அழைத்த பிறகு வந்தார். ஆலயத்தில் போதுமான வெளிச்சம் இல்லை! கருவரையில் சிறிய விளக்கொன்று மட்டும் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது.  கொடுத்த பூஜைப் பொருள்களை வாங்கிக் கொண்டு ஒரு ஆரத்தி மட்டும் செய்தார். 
   நாங்களாகவே கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். அங்குசில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஆலய வெளிப் பிரகாரத்தில் விவேகானந்தா மடத்தின் ஆரம்ப பள்ளி ஒன்றும் உயர்நிலை பள்ளி ஒன்றும் இயங்குகின்றன போலும். புதிதாக கட்டிடங்களும் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு ரிசல்ட் பற்றி சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டு இருந்தார்கள். இந்த கோயில் முகப்பு கோபுரத்தில் ஐந்து விமான தரிசனம் இங்கு காணவும் என்று ஒரு அறிவிப்பு இருந்தது. அங்கிருந்து பார்க்கையில் ஒன்றூம் தெரியவில்லை! யாரையும் கேட்கலாம் என்றால் ஒருவரும் இல்லை. அதனால் அங்கிருந்து கிளம்பினோம். அங்கு உணவகம் எதுவும் இல்லை. அதனால் குளித்தலை வந்தோம். மணி 1.30 ஆகிவிட்டது. அங்கு  சங்கர் கபே என்ற உணவகத்தில் உணவருந்தினோம்.
  இங்கே எல்லாம் டிபன் என்றால் தட்டில் கொடுப்பார்கள். அங்கு தலை வாழை இலையில் கொடுத்தார்கள். டிபன் தான் சாப்பிட போகிறோம் சாப்பாடு இல்லை என்ற போதும் இது டிபன் இலைதான். சாப்பாட்டு இலை இன்னும் பெரிசாக இருக்கும் என்று கூறி ஆச்சர்யப்படுத்தினர். விலையும் மலிவாக இருந்தது ஒரு பரோட்டா பத்து ரூபாய். சப்பாத்தியும் பத்து ரூபாய் தான். மற்றவையும் சென்னை விலைக்கு குறைவுதான். சுவை சுமார் ரகம்.  அங்கிருந்து கிளம்பி குளித்தலை கடம்ப வன நாதர் ஆலயம் சென்றோம். ஏறக்குறைய குளித்தலை பஸ் நிறுத்தத்தில் இருந்து
 வெளிப்பிரகார கணபதி
அரைகிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலயம். ஆனால் கதவடைத்து இருந்தார்கள் நாங்கள் சென்ற சமயம்.
   அங்கிருந்தவர்கள் வெளிப்பிரகாரம் சிறு வாசல் வழியாக சென்று பார்க்கலாம் என்று சொன்னார்கள். அருகில் சென்று கேட்டபோது அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். மாலை 5 மணிக்கு திறப்பார்கள் என்று சொன்னார்கள் அப்போது மணி இரண்டுதான் ஆகியிருந்தது. அதனால் கோபுரதரிசனம் கண்டுவிட்டு திரும்பினோம். குளித்தலை பஸ் நிறுத்தம் வந்து அங்கிருந்து கரூர் வரும் போது 4 மணி ஆகிவிட்டது.
 கோயில் பிரகாரத்தில் இயங்கிவரும் ஆரம்ப பள்ளி
    கரூரில் சில பொருள்கள் பர்சேஸ் செய்துவிட்டு வீடு திரும்ப 9 மணி ஆகிவிட்டது. இத்தனைக்கும் 5.30க்கெல்லாம் பர்ச்சேஸ் முடிந்து விட்டது. என் மனைவி சொன்னபடியால் அங்கிருந்த சர்ச் வாசல் முன் பஸ்ஸிக்கு காத்திருந்தோம். அரை மணி நேரம் ஓடியது தவிர ஒரு பஸ்ஸிம் அங்கு நிற்க வில்லை. அதற்கப்புறம் நாங்கள் ரொம்ப நேரமாய் நிற்பதை பார்த்து அருகில் இருந்த டீக்கடைக்காரர் வந்து விசாரித்தார். நாங்கள் விவரத்தை சொல்லவும் அடடா! இங்கு பஸ் நிற்காது. அடுத்த திருப்பத்தில் நிற்கும் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் ஊர் பஸ் வந்துவிட்டது. அதன் பின் ஓடியும் பிடிக்க முடியவில்லை. பின்னர் அங்கிருந்து பேருந்து நிறுத்தம் சென்று பஸ் இல்லாமல் 7 மணிக்கு பஸ் பிடித்து ஊர் செல்லும் போது 9 மணி ஆகிவிட்டது. பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. என் மனைவிக்கு மட்டும் இடம் கிடைத்தது. பாதி தூரம் செல்கையில் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. அதன் அழுகை நிறுத்த எவ்வளவு முயற்சித்தும் பலனில்லை. பஸ்ஸில் ஆளாளுக்கு ஆலோசனை சொல்ல எனக்கு எரிச்சல் வேறு. கட்டுப்படுத்திக் கொண்டு பதில் சொல்லிக் கொண்டு இருந்தேன். எப்படியோ கூட்டம் சற்று குறைந்ததும் அழுகையும் குறைந்து அப்புறம் நின்றது. ஒரு வழியாய் வீடு சென்று சாப்பிட்டு உறங்கினேன். காலெல்லாம் ஒரே வலி நடந்தது பஸ்ஸில் நின்றது என்று ஒரே அலுப்பு.  எப்படியோ உறங்கிப் போனேன்.
 வெளியே நுழைகையில் எதிர்படும் விநாயகர் மாவு காப்பில் உள்ளார்
 கோயில் பிரகாரத்தில் நான்
  விடியற்காலை திடிரென இட்லி வேகும் வாசனை மூக்கை துளைத்தது. என்னங்க எழுந்திருங்க! ஐந்து மணிக்கு நாமக்கல் போக கார் வந்திரும்  ரஜினி பட ராதிகா போல என் அதிகாலை தூக்கத்தை கலைத்தால் என் மனைவி.
       ரொம்ப நீண்டு போகிறது என்று நினைக்கிறேன்! மீதி அடுத்த பதிவில் பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




Comments

  1. படங்களுடன் இனிய பயணம்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... விரைவில் சுவாரஸ்யமான முக்கியமான பயணத்தையும் எதிர்ப்பார்க்கின்றேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. படங்களும் பயண விவரங்களும் அருமை.

    ReplyDelete
  3. அட...நானும் திருமுக்கூடலூர் தான்.என் வீட்டிற்கு பக்கம் தான் உங்கள் மாமனார் வீடு...வெங்கடேசன் எனக்கு சீனியர்.

    ReplyDelete
  4. பயண அனுபவத்தை சுவை குன்றாமல் கூறி இருக்கிறீர்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!