திருமுக்கூடலூர் பயண அனுபவங்கள்!2

திருமுக்கூடலூர் பயண அனுபவங்கள்!2

முதல் நாள் திருப்பராய்த்துறை சென்று வந்த அலைச்சலில் அசதியாக உறங்கிய என்னை விடியலில் எழுப்பினாள் என் மனைவி. என்னங்க! 5 மணிக்கெல்லாம் கார் வருதாம். எந்திரிச்சு ரெடியாகுங்க! நாமக்கல் போகலாம் என்றாள். முன்பே நான் மனைவியிடம் சொல்லியிருந்ததுதான் மைத்துனனிடம் சொல்லி ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து கொண்டால் வசதியாக இருக்கும் குழந்தைகளை அழைத்து சென்று வர என்று சொல்லியிருந்தேன்.  எனவே உடனே எந்திரகதியாக எழுந்து குளித்து ரெடி ஆனேன்.
     என் பெரிய மகள் வேத ஜனனி எழுந்திருப்பதாய் இல்லை! அப்படி இப்படி அவளை தாஜா செய்து எழுப்பவும் கார் வரவும் சரியாக இருந்தது. உடனே அவளை பிரஷ் பண்ண வைத்து காரில் ஏற்றிக் கொண்டோம். மைத்துனன் உதவிக்கு வழிகாட்டுதலாக வர அவருடைய அண்ணன் மகளும் வந்தார். அது ஒரு மாருதி ஆம்னி வேன். சரியாக 5.45க்கு கிளம்பி விட்டோம். அங்கிருந்து ஒரு குறுக்குச் சாலை வழியாக வெகு விரைவில் 7.30 மணிக்கெல்லாம் நாமக்கல் அடைந்து விட்டோம்.

      முதலில் மலைமீது உள்ள சுதர்சனரை தரிசிக்க சென்றோம். 9.30க்குத்தான் நடை திறப்போம் என்று சொல்லிவிட அங்கிருந்து கிளம்பி நரசிம்மரை தரிசித்தோம். அருமையான தரிசனம். பின்னர் தாயாரை தரிசித்து ஆஞ்சநேயரை தரிசிக்க இறங்கினோம். இந்த நரசிம்மர் ஒரு குடைவரை சிற்பமாக மிகவும் சிறப்பாக காட்சி அளித்தார். நரசிம்மரை தவிர இன்னும் சில அவதார சிற்பங்கள் அந்த குடைவரை ஆலயத்தில் சிறப்பாக இருந்தன.
பட்டாச்சாரியாரும் சிறப்பாக விளக்கி பூஜை செய்வித்தார். அவர் சொன்னது இப்போது நினைவில் இல்லை. ஆனாலும் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு அற்புத ஆலயம் இந்த நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயம் சிறப்பாகவும் அழகாகவும் பராமரிக்கப் படுகிறது.
    நரசிம்மர் இருந்த மலைக்கு கீழே அவரைப் பார்த்தபடி வானளாவ உயர்ந்து நின்றார் அஞ்சனை மைந்தன் ஸ்ரீ ஆஞ்சநேயர். நரசிம்மர் ஆலயத்தை விட இங்கு கூட்டம் கொஞ்சம் அதிகம். வெளியே தும்பிக்கை ஆழ்வாரை தரிசித்து பின்னர் வெற்றிலை மாலைகள் துளசி மாலைகள் வாங்கிக் கொண்டு ஆஞ்சநேயரை தரிசிக்க கியுவில் நின்றோம். ஓங்கி உயர்ந்து நிற்பதால் கியுவில் நகரும்போதே நிம்மதியாக
தரிசனம் செய்ய முடிகிறது. அருகில் நெருங்கும் போது நமது பூஜைப் பொருள்களை வாங்கி சார்த்துகிறார்கள். ஆனால் ஒரு இரண்டுநிமிடம் நிற்பதற்கு கூட விடவில்லை. துரத்தி அடிக்கிறார்கள்.  இருந்தாலும் நாமக்கல் ஆஞ்சநேயர் பார்க்கவேண்டும் என்ற என் ஆவல் பூர்த்தியானது.  இங்கு இன்னொரு குறை வண்டி பார்க்கிங் செய்ய போதுமான இட வசதி இல்லை என்பது. தாறுமாறாக தெருக்களில் கார்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. வெளியே வர கொஞ்சம் நேரம் எடுக்கிறது.
      அங்கிருந்து புறப்பட்டு கொடுமுடி வந்தடைந்தோம். அப்போது பத்து மணி இருக்கும். கொடுமுடியில் காவிரியில் நீர் இல்லை. இது அந்த பக்கத்தில் பெரிய பரிகாரஸ்தலம் போல் உள்ளது. வண்டியை விட்டு இறங்கும் போதே புரோக்கர்கள் போல இந்த பரிகாரமா அந்த பரிகாரமா? நான் செய்து வைக்கிறேன் என்று மடக்குகிறார்கள். அவர்கள் கையில் சிக்காமல் தப்பித்தால் காசு தப்பிக்கும். பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் எழுந்தருளும் ஆலயம் இது.மிகப்பெரிய ஆலயம் புணரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது. இந்த மூவரை தவிர ஆஞ்ச நேயர்,
சனிபகவான் சன்னதிகளும் உண்டு. அம்மாவின் அன்னதான திட்டம் இந்த கோயிலில் செயல்படுத்த படுகிறது. நாங்கள் சென்றபோது சமையல் நடந்து கொண்டிருந்தது.இதை தவிர குரங்குகள் தொல்லை அதிகமாக இருந்தது. நிறைய சன்னதிகள் அதற்கேற்ற அர்ச்சகர்கள் இல்லை. இருப்பவர்களும் சரியாக இல்லை.
      வன்னி மரத்தடியில் பிரம்மா வீற்றிருந்தார். நாங்கள் இங்கு பூஜை எதுவும் செய்ய வில்லை! அர்ச்சனை செய்யுங்கள் அது பண்ணுங்கள் இது பண்ணுங்கள் என்றவர்களை விலக்கி பிரம்மாவை தரிசனம் செய்து ஆஞ்சநேயரை தரிசிக்க சென்றோம். அங்கு பட்டர் இல்லை. அப்படியே ஆதிநாராயணப் பெருமாள் , தாயார், மற்றும்  மகுடேஸ்வரரைதரிசித்து சனிபகவானை தரிசிக்க சென்றோம். அங்கு நிறைய கூட்டம். கோயிலிலேயே எள் முடிச்சும் விளக்கும் தருகிறார்கள். இதை வெளியில் இருந்து கொண்டுவரக்கூடாதாம். ஒரு விளக்கும் எள் முடிச்சும் ஆறு ரூபாய் தேவைப்படுபவர்கள் வாங்கி தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். ஒரு சிறு அறையில் அடைந்து கிடக்கிறார் சனிபகவான். பக்தர்கள் படைக்கும் வஸ்திரங்கள் தேங்காய் பழங்கள் அவரை சுற்றி இரைந்து கிடக்க அர்ச்சகர் பிஸியாக இருந்தார். சனிபகவான் தரிசனம் முடித்து. பிரகாரம் வலம் வந்து அங்கேயே ஒரு இடத்தில் அமர்ந்து எடுத்து சென்ற இட்லிகளை உண்டு முடித்து  வெளியே வந்தோம். இப்போது பிச்சைக்காரர்கள் தொல்லை. ஒருவருக்கு போட்டால் பலர் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களிடம் இருந்து மீண்டு வந்தால் யானை ஒன்று நின்றிருந்தது. சில்லரை கொடுத்து ஆசிர்வாதம் கேட்டாள் என் மகள்.சில்லரையெல்லாம் கொடுக்காதீங்க பத்துரூபா கொடுங்க ஆசிர்வாதம் வைக்கும் என்றார் பாகன் பத்து ரூபாய் கொடுக்க யானை வாங்கி பாகனிடம் தந்து ஆசிர்வாதம் வைத்தது.

    பின்னர் அங்கு ஒரு ஓட்டலில்  காபி சாப்பிட்டு விட்டு காரில் ஏறி அமர்ந்தோம். இன்னும் சில இடங்கள் குறிப்பாக திருச்செங்கோடு ஐயர் மலை போன்ற இடங்கள் சுற்றி பார்க்க ஆசை இருந்தாலும் குழந்தைகள் களைப்பாக இருந்ததாலும் மைத்துனனுக்கு வேறு வேலை இருந்ததாலும் அங்கிருந்து புறப்பட்டு விட்டோம்.

    காலையில்  எழுந்தது கலைப்பாக இருக்க உறக்கம் சொக்கி வந்தது. ஒரு தூக்கம் போட்டு முழிக்க கார் கரூர் வந்து விட்டிருந்தது. அங்கு மைத்துனன் இறங்கி விட நாங்கள் திருமுக்கூடல் வந்து இறங்கி கொண்டோம். மணி மதியம் ஒன்று ஆகி இருந்தது. மதிய உணவு அருந்தி ஒரு குட்டி தூக்கம் போட்டபின் திருமுக்கூடலூரில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் பார்க்க  மாலையில் சென்றோம்.

    திருமுக்கூடலூர் அகத்தீஸ்வரர் ஆலயம் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது.சுமார் 100 வருடங்கள் முன் ஆற்று வெள்ளத்தில் மண் மேடிட்டு இந்த ஆலயம் மண்ணில் புதைந்து விட்டதாம். 1936ம் ஆண்டில் மண் தோண்டி ஆலயத்தை வெளியில் எடுத்துள்ளார்கள். சோழர்கள் நாயக்க மன்னர்கள் இந்த ஆலயத்தை கட்டியும் பராமரித்தும் வந்துள்ளார்கள் என்பதுஇங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.


   மிக அழகான ஆலயம் பழமை வாய்ந்த ஆலயம் பராமரிப்பு இன்றி இப்போது சிதிலமாகி கிடக்கிறது. இதற்கு மானியங்கள் இருக்கின்றனவாம். அவை பயிரிடப்படுகிறதா குத்தகை ஒழுங்காக செலுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஆன்மீக அன்பர்கள் சிலர்கள் முயற்சியால் ஒருகால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. சிறப்பானதொரு ஆலயம் இதைப் பற்றி நண்பர் கோவை ஜீவா ஒரு முறை எழுதி உள்ளார். இங்கு ஒரு சித்தரின் சமாதியும் இருப்பதாக சொல்கிறார்கள். வெளியே வீரப்பத்திரர் சிலைக்கு அன்று அஷ்டமி அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஆலயத்தை சுற்றிப் பார்த்துவிட்டு இருட்டிப் போனமையால் விரைவில் வீட்டிற்கு திரும்பி விட்டோம். இந்த ஆலயத்தை பற்றி விரிவாக வேறொரு பதிவு எழுத எண்ணம்.



    அடுத்த இரண்டு பொழுதுகள் வெட்டியாக கழிந்தது. என் மனைவி பிறந்தவீட்டில் அளவளாவ ஆசைப்பட்டமையால் வேறு எங்கும் செல்லவில்லை. மனைவியின் அக்காக்கள் அண்ணன்கள் அங்கு வந்து எங்களை பார்த்து சென்றார்கள். திங்களன்று மாலையில் புறப்பட்டு கரூர் வந்து சென்னைக்கு டிக்கெட் கேட்டால் நான்கு வண்டிகளும் நிறைந்து விட்டதாக கூறினார்கள். அதனால் திருச்சிக்கு பயணப்பட்டு அங்கிருந்து சென்னை வந்து ஊர் வந்து சேர்ந்தோம். வரும்போது சற்று அலைச்சலாக இருந்தாலும் பயணக் கட்டணம் குறைந்தது.
  திருச்சியில் சென்னைக்கு  கூவி கூவி அழைத்து பஸ்ஸில் ஏற்றுபவர்கள் சென்னை வந்ததும் கோயம்பேடு மாநகர பேருந்து நிறுத்தத்திலேயே வலுக்கட்டாயமாக இறக்கி விட்டார்கள். நான் பேருந்து நிறுத்தம் உள்ளே இறங்க வேண்டும் என்று மறுத்தபோது சிடுசிடுப்பாய் மறுத்தார்கள். விதியே என்று அங்கேயே இறங்கி லக்கேஜ் குழந்தைகளை தூக்கிக் கொண்டு நிறுத்தம் உள்ளே வர வேண்டியதாகிப் போனது. அந்த அதிகாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளே பயணிகள் குறுக்கும் நெடுக்குமாக படுத்து கிடக்க எங்கள் ஊர் பஸ் நிற்கும் நடை மேடைக்கு நடந்து வர மிக சிரமப்பட்டுவிட்டோம்.
    டாய்லெட்களும் முன்பு போல் சுத்தமாக பராமரிக்கப்படவில்லை! என்ன ஒன்று அதிகவிலைக்கு விற்பவர்கள் இப்போது எம். ஆர். பி விலைக்கே பொருட்களை விற்றார்கள் இது ஒன்றுதான் எனகு அதிசயமாக இருந்தது.
    நான்கு நாள் திருமுக்கூடலூர் பயணம் இனிதே நிறைந்தது.                                         டிஸ்கி: நாமக்கல், கொடுமுடியில் புகைப்படம் எடுக்க முடியவில்லை! படங்கள் கூகூள் இமேஜஸில் தேடியதில் கிடைத்தவை.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. உங்கள் எண்ணம் போல் இறை தரிசனமும் கிட்டியதையிட்டு மகிழ்ந்து எழுதிய ஆக்கத்தினை வாசிக்கும் போதே எமக்கும் அதே உணர்வு கிட்டியது சகோதரரே என்ன ஒன்று எவ்வளவு இருந்தாலும் இப்போதெல்லாம் ஆலயங்களில் எல்லாமே
    வியாபாரமாகிவிட்டத்தை இட்டு மனதில் ஆதங்கமும் எழுகிறது என் செய்வது ! வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. இனிதான தெய்வீக பயணம்... நாங்களும் கூடவே பயணப்பட்ட திருப்தி... படங்கள் அருமை... நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2