லாராவுக்கு பிடித்த கங்குலியும்! இஷாந்துக்கு பிடித்த தோனியும்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின்
"பேட்டிங் ஜீனியஸ்' பிரையன் லாரா, 44.
கடந்த 2007ல் ஓய்வு பெற்றார். நேற்று மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லாரா கூறியது: இந்திய கேப்டன்களில் சவுரவ் கங்குலி தான் எனக்கு பிடித்த வீரர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அதன் சொந்த மண்ணில் நடந்த போட்டியில், இவரது
"கேப்டன்ஷிப்' பிரம்மிப்பாக இருந்தது. இவர் மீது பெரிய மரியாதை வைத்துள்ளேன்.
கடந்த 1983ல் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை பைனலில், வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக வெற்றி பெற்று கோப்பை வென்றுவிடும் என நினைத்து போட்டியை பார்க்காமல் விளையாட சென்றுவிட்டேன். ஆனால் வீடு திரும்பியதும் இந்திய அணி வெற்றி பெற்றதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். இத்தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல கேப்டன் கபில்தேவின் பங்களிப்பு முக்கிய பங்குவகித்தது.
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், எனது மிகச் சிறந்த நண்பர். இவர், கிரிக்கெட்டுக்காக செய்ததை, வேறு எவராலும் திரும்ப செய்ய முடியாது. கிரிக்கெட் அரங்கில் இவரது பங்களிப்பை அளவிட முடியாது.
தற்போதைய இந்திய கேப்டன் தோனிக்கு எதிராக விளையாடியது கிடையாது. எனவே இவரை பற்றி, பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். "சகவீரர்களின் ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்பது தோனியின் மிகப் பெரிய பலம்" என்றார்.
இளம் வயதில், எனது சகோதரர் தென்னை மட்டையில் "பேட்' செய்து கொடுத்தார். குடும்பத்தினரும், என்னை கிரிக்கெட் வீரராக வர விரும்பினர். இதற்காக எனது தந்தைக்கு நன்றி. பள்ளிப்பருவத்தில் நான் எங்கு கிரிக்கெட் விளையாட சென்றாலும், என்னுடன் வந்து போட்டியை காண்பார். ஆனால் முதன்முதலில் வெஸ்ட் இண்டீசுக்காக விளையாடிய போது, அவர் உயிரோடு இல்லை. நான் விளையாடிய சர்வதேச போட்டிகளை காணாவிட்டாலும், சிறந்த வெஸ்ட் இண்டீஸ் வீரராக மாற, எனது தந்தை முக்கிய காரணமாக இருந்தார்.
இவ்வாறு லாரா கூறினார்.
""அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீச நான் ஒன்றும் கடவுள் இல்லை. வேகப்பந்துவீச்சு பிரிவுக்கு நான்தான் தலைவன் என சொல்ல மாட்டேன்,'' என, இஷாந்த் சர்மா தெரிவித்தார்.
இந்திய அணியின் புயல் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா. தற்போது இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்துகிறார். இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் 3 விக்கெட் வீழ்த்திய இவர், அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார். நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான பைனலில் இவரது அபார செயல்பாடு தொடரும் பட்சத்தில் இந்திய அணி, முதல் முறையாக கோப்பை கைப்பற்றலாம்.
இஷாந்த் சர்மா கூறியது:
இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அன்றைய தினம் சரியான இடத்தில் துல்லியமாக பந்துவீசினேன். இதே போல அனைத்து போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்த, நான் ஒன்றும் கடவுள் இல்லை. விக்கெட் கைப்பற்ற சக வீரர்கள், பவுலிங் பயிற்சியாளர் உதவினர்.
அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவுக்கு நான்தான் தலைவன் என சொல்ல மாட்டேன். நான், புவனேஷ் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் இணைந்து செயல்படுகிறோம். இது ஒரு கூட்டு முயற்சிதான்.
தோனியின் ஆதரவு:
அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால், ஒவ்வொருவரும் தனிப்பட்ட திட்டமிடலுடன் களம் காண்கிறோம். ஒருவருக்கொருவர் உதவி புரிகிறோம். இது ஒரு அணிக்கு தேவையானது. பிரிமியர் கிரிக்கெட் தொடரில் விளையாடிய அனுபவமும் கைகொடுக்கிறது.
கேப்டன் தோனி எப்போதும் எனக்கு ஆதரவு அளிப்பார். இவரைப்போல கேப்டன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது பவுலிங், பீல்டிங்கில் நல்ல திறமையுடன் உள்ளோம். பைனலில் இங்கிலாந்தை வெல்ல எந்த ஒரு சிறப்பு திட்டமும் இல்லை. தற்போதைய "பார்ம்' தொடர்ந்தால், எந்தவொரு அணியையும் வீழ்த்துவோம்.
இவ்வாறு இஷாந்த் சர்மா கூறினார்.
நன்றி: தினமலர்.
தினமலர் செய்தியா நடக்கட்டும் நடக்கட்டும்.
ReplyDeleteநடக்கட்டும்,,,, நன்றி.........
ReplyDelete