உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 18

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 18


தமிழார்வம் காரணமாக தொடங்கப்பட்ட இந்த பகுதி இவ்வளவு பகுதிகள் கடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க வில்லை! கணிசமான பார்வையாளர்கள் இந்த பகுதியை படித்து வருவது மகிழ்ச்சி! முதலில் மேம்போக்காக எழுதப் பட்ட இந்த பகுதி தற்போது இலக்கண இலக்கியங்களையும் எழுதிவருகிறது. கடந்த சில வாரங்களாக சில இலக்கணப் பகுதிகளை படித்தோம். இன்று கொஞ்சம் இலேசாக இலக்கணம் தவிர்த்து சிலவற்றை பார்க்க போகிறோம்.
    தமிழில் வகைப் படுத்துதல் என்பது சிறப்பு! பொதுவாகவே மனிதர்கள் எனில் நல்லவன் கெட்டவன் என வகைப்படுத்தலாம். சினிமா என்றால் கிராமியக்கதை, க்ரைம்கதை, காதல்கதை, நகைச்சுவைகதை என வகைப்படுத்தலாம். இலக்கியம் என்றால் நாவல்கள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சங்க காலப் பாடல்கள் என வகைப்படுத்தலாம் அல்லவா?
  அதே போல தமிழின் தொன்மையான வகைப்படுத்தல் சிலவற்றை இப்போது காண்போம்.
வள்ளல்கள் என்றால் கடையேழு வள்ளல்களை நினைவு படுத்துவோம் அல்லவா? இதைப்பற்றி பிலாசபி பிரபாகரன் எழுதி இருந்தார் என்று ஞாபகம். கடையெழு வள்ளல்கள் தவிர்த்து தலை இடையெழு வள்ளல்களும் இருந்துள்ளார்கள் அவர்களை அறிந்து கொள்வோம்.

முதல் ஏழூ வள்ளல்கள் அல்லது தலைஎழுவள்ளல்கள்: குமணன், சகரன், சகாரன்,செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி.
இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கன்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன்.
கடையேழு வள்ளல்கள்:  பாரி,ஆய், காரி, நள்ளி, அதியமான், பேகன், ஓரி.

அகத்தினைகள் 7 : கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை,
அரசசின்னம்10: படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு, தேர், தார், மாலை, செங்கோல்.
அளவுவகை 4: எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்
அழகுவகை 8: அம்மை, வனப்பு,தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன் இழை.
அறுமுறைவாழ்த்து6: முனிவர், பார்ப்பனர், ஆனிரை, மழை, முடியுடைவேந்தர், உலகு
ஆறுவகை சக்ரவர்த்திகள்6: அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புரூரவன், சகரன், கார்த்தவீரியன்.
இசைவகை 3 மந்தரம், மத்திமம், தாரம்.
இசைவகை6 குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி.
மேலுலகம் ஏழு: பூலோகம்,புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்.
கீழுலகம் ஏழு: அதலம், விதலம்,சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்.
எட்டுமலைகள்: இமயம் மந்தரம், கயிலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தாமதனம்.
ஐங்கூந்தல்; கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள்.
ஐங்குரவர்: அரசன், ஆசிரியன்,தாய், தந்தை, தமையன்.
ஐங்காயம்: கடுகு ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்.
ஐஞ்சிறு காப்பியம்: நீலகேசி, சூளாமணி, யசோதரகாவியம், உதயணகுமார காவியம், நாககுமாரகாவியம்.
ஐம்பொறி: மெய், வாய், கண், மூக்கு, செவி.
கவி வகை4 ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்.
கூலவகை8 : நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, மூங்கில் நெல்.
கொடுந்தமிழ்நாடு: பொங்கநாடு, ஒளிநாடு,தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலையமாநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு.
இப்படி பலபொருள்களையும் வகைப்படுத்தி உள்ளனர் தமிழ் மக்கள் இன்னும் சிலவற்றை அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம்.
 இனி இலக்கிய சுவை

பள்ளு என்பது சிற்றிலக்கிய வகைகளுல் ஒன்று பள்ளு என்றால் பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்கு செய்யப்படும் உழவினையும் குறிக்கும். ஆகவே பள்ளு உழவர் இலக்கியம்.
  திருநெல்வேலிக்கு சிறிது வடகிழக்கில் தன்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்குமிடத்திற்கு பெயர் முக்கூடல். அங்கு உறையும் இறைவனான அழகர் மீது பாடப்பட்டது முக்கூடல் பள்ளு. அதில் தென்கரை நாட்டுவளம் குறித்து பாடப்பட்டதை கீழே காண்கிறோம்.

    காயக் கண்டது சூரிய காந்தி:
      கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்.
  மாயக்கண்டது நாழிகை வாரம்;
     மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்.

    சாயக்கண்டது காய்க்குலைச் செந்நெல்;
       தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்.
  தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்:
      சீவல மங்கைத் தென்கரை நாடே.

பொருள்:  வெயில் காயும்; வயிறுகாயாது. தயிர் கலங்கும்; மக்கள் மனங்கலங்க மாட்டார். நாழிகையும் வாரமும்  மாயும்; மக்கள் பசியால் மாயார். மறுகி ஓடுவது வெள்ளம்: மக்கள் மறுகி வாடார். தலைசாய்ந்து நிற்பது செந்நெல்; மக்கள் தலைகுனிய மாட்டார். தாபதராகிய முனிவர் தனித்திருப்பர்; கணவன் மனைவியர் தனித்திருக்க மாட்டார்கள். உரைக்க உரைக்க சந்தனம் தேயும். ஆனால் இச்செய்யுளில் பொருள் தேயாது.
    என்ன அழகான பாடல்! இத்தகைய அருமையான வளம் மிக்க நாடாய் நம் தமிழ் நாடு சிறப்புற்று விளங்கியதை இந்த பாடல்களில் அறிந்து கொள்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் மேலும் அறிவோம்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. நல்ல தொகுப்பு... முக்கூடல் பற்றிய பொருளும் அருமை... தொடரவும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. arumaiyaana thakaval sakotharaa...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2