அமானுஷ்ய அனுபவங்கள்! பகுதி 2
அமானுஷ்ய
அனுபவங்கள்!
அமானுஷ்யங்கள்
அனுபவிப்பவருக்குத்தான் புரியும்! என்னுடைய வாழ்க்கையில் இந்த அமானுஷ்யங்கள்
நிறையவே நடந்து எனக்கு நல்லதும் நடந்து இருக்கிறது. எங்கள் வீட்டிற்கு அருகே
திருவாலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. விழித்தெழுந்தாலே ஆலய தரிசனம்தான். இந்த ஆலயம்
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் புதர் மண்டி உள்ளே நுழைய முடியாதபடி இருக்கும்.
கார்த்திகை மாதத்தில் ஐயப்பமாலை போட்டுக் கொள்பவர்கள் இங்கு வந்து வழிபடுவார்கள்.
அப்போது மட்டும் ஆலயத்தை சுத்தம் செய்வார்கள். அவர்களின் ஒண்றரை மாத வழிபாட்டுக்கு
பின்னர் மீண்டும் கோயிலில் புதர் மண்டிவிடும்.
என் அப்பாதான் கோயில் குருக்கள். பிரதோஷ
வழிபாடு எதுவும் கிடையாது. எங்களுக்கு வருமானமும் கிடையாது என்ற சூழல்.இரவுப்
பொழுதில் கோயிலில் நுழையவே பயமாய் இருக்கும். ஆனாலும் பூஜையை விடாமல் செய்தோம்.
பக்தர்கள் வருகிறார்களோ இல்லையோ காலையில் பூஜையும் தீபமும் ஏற்றி வழிபடுவோம். அந்த
சமயத்தில் நான் ப்ளஸ்டூ முடித்து இருந்தேன். காலை மாலை இருவேளையும் கோயில் பூஜை
செய்ய ஆரம்பித்தேன். இப்படி ஒரு மாதம் கடந்திருக்கும். ஒரு நாள் இரவில் நான் என் அறையில்
படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென விழிப்பு வந்தது. முழித்தேன்.
அறைவாசலில் யாரோ நிற்பது போலத்தோன்றியது. அரைகுறை தூக்கத்தில் இருந்த நான் என்
அப்பாதான் போல என்று நினைத்துக் கொண்டு அப்பா! என்று குரல் கொடுத்தேன். பதில்
இல்லை! மீண்டும் குரல் கொடுக்க அந்த உருவம் மறைந்துவிட்டது. பார்த்தால் அப்பா
ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
மறுநாள் என் அப்பாவிடம் விசயத்தை
கூறினேன். இரவில் வந்தது யார்? அது உண்மையா இல்லை என் பிரமையா என்றேன். அப்பா
பூஜையில் அமரும் போது பார்த்து கூறுவதாய் சொன்னார். பின்னர் கூறினார் அது நம்
சுவாமிதான். நீ தினமும் பக்தியுடன் பூஜை செய்வதால் உனக்கு காட்சி தந்துள்ளார்
என்று. என் உடல் சிலிர்த்தது. முன்பை விட சிரத்தையுடன் பூஜை செய்தேன். மீண்டும்
காட்சி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை!
எதிர்பார்த்து செய்தால் எதுவும் கிடைக்காது என்று உணர்ந்து கொண்டேன். இன்றும்
விடாமல் வாலீஸ்வரரை பூஜித்து வருகிறேன்.
இதே ஆலயத்தில் வற்றாத கிணறு ஒன்று உண்டு.
இப்போது எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இல்லை. 24 மணி நேரமும் பஞ்சாயத்து குழாயில்
தண்ணீர் வருகிறது. ஆனால் இருபது வருடங்கள் முன்னோக்கி சென்றோம் என்றால் சென்னைக்கு
குடிநீர் வழங்கி கொண்டிருந்த முக்கிய நீர் ஆதார கிராமமான எங்கள் கிராமத்தில் அடிக்கடி தண்ணீர் பிரச்சனை
விரித்தாடும். பஞ்சாயத்து குழாயில் நீர் வராது. விவசாய பம்புக்களில் நீர் பிடித்து
செல்வார்கள். சில சமயம் மின்வெட்டு பிரச்சனையில் விவசாய பம்புகள் இயங்காத போது
வாலீஸ்வரர் கோயிலுக்குத்தான் நீர் பிடிக்க வருவார்கள் மக்கள். இங்குள்ள கிணறு
வற்றாத கிணறு. இரைக்க இரைக்க நீர் சுரந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டினர் இந்த
நீரைத்தான் அப்போது குடிக்கவும் ஏனைய உபயோகத்திற்கும் பயன்படுத்திக் கொண்டு
இருந்தோம்.
இத்தகைய கோயிலில்தான் என்னுடைய டியுசன்
வகுப்புகள் நடந்தன. படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த நான் டியுசன் எடுக்க
ஆரம்பித்து கோயில் மண்டபத்தில் வைத்து டியுசன் எடுத்தேன். நிறைய மாணவர்கள்
சேர்ந்தனர். இந்த சமயத்தில் ஒரு எஸ். டி. டி பூத்தும் பஞ்செட்டியில் ஆரம்பித்தேன்.
ஆனால் எஸ்.டி.டி பூத்தை விட டியுசன் தொழில் எனக்கு பிடித்து இருந்தது. ஒருநாள்
எஸ்டிடி பூத்திற்கு அப்பாவை அனுப்பிவிட்டு
நான் டியுசன் எடுத்துக் கொண்டிருந்தேன். மாலை நேரம் மணி ஆறைக் கடந்த சமயம்.
பள்ளிவிட்டதும் டியுசனுக்கு 5 மணிக்கெல்லாம்
மாணவர்கள் வந்துவிட வேண்டும். வராதவர்களுக்கு பனிஷ்மெண்ட் உண்டு. அன்று நிறைய பேர்
லேட்டாக வந்தார்கள். எனக்கு கோபம். பள்ளியில் கிரவுண்டை சுற்றவிடுவார்கள். நாம்
என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சரி இந்த கோயிலை ஒரு பதினோரு முறை சுற்றி வாருங்கள்
என்று உத்திரவிட்டேன். என்னுடைய தண்டனைகள் இப்படித்தான் இருக்கும். தோப்புகரணம்
போடச்செய்தல், தவளை ஓட்டம், ஓட்டப்பயிற்சி இப்படி! இது உடலுக்கும் ஒருவகை உடல்
பயிற்சியாக அமையும் அன்றோ! பொழுது
இருட்டிய வேளையில் சுற்றிவர ஆரம்பித்தார்கள் மாணவர்கள். அதில் ஆறாம் வகுப்பு
மாணவன் ஒருவன் சுற்றி வருகையில் அழுது கொண்டே வந்தான். ஏண்டா! அழறே! என்று
கேட்டேன். சார்! பயம்மா இருக்கு சார்! கோயில் பின்னாலே மரத்து மேல என்னமோ
இருக்குது சார் ! என்னையோ உத்துப் பாக்குது! பயம்மா இருக்குது என்றான். என்னடா
உளற்ரே! என்றேன். இல்ல சார்! நிஜமாத்தான் சார்! எனக்கு பயம்மா இருக்குது சார்!
என்று அவன் திக்கி திணறி சொல்லி முடித்தான்.
வாடா! போய் பார்க்கலாம்!
இல்ல சார்! நான் வரலை! அதான் நான் கூட
இருக்கேன் இல்ல! வா! அவனைக் கட்டாயப் படுத்தி அழைத்து சென்றேன்.
எங்கடா இங்க யாரும் இல்லையே! நீ எதை எங்க
பார்த்தே! என்றேன். இங்கதான் சார் இந்த மரத்து மேலதான் சார்! ரெண்டு கண்ணு என்னையே
உத்து பார்த்தது என்றான் ஒரு மரத்தை காட்டி! அங்கு யாரும் இல்லை! டார்ச் அடித்து
பார்த்தேன் எதுவும் தென்படவில்லை! சரி போங்கடா! என்று அவர்களை அனுப்பி விட்டேன்.
அனைவரும் பயந்து போய் இருந்தனர். சுவாமி விபூதி அணிவித்து சீக்கிரமாகவே வீட்டிற்கு
அனுப்பி விட்டேன். இரவு அப்பா வந்ததும் நடந்ததை சொன்னேன். சரி பார்ப்போம் என்றார்.
அடுத்த நாள் பூஜையில் பார்த்த போது அந்த
பையன் பார்த்தது உண்மைதான் என்று தெரிந்தது. அந்த பையன் பார்த்த உருவம் எங்களோடு
பழகி விளையாடி திடீரென இறந்து போன எங்கள் நண்பன் ஒருவன். அவனது ஆவி விளையாடிய
பழகிய இடத்திற்கு வந்திருக்கிறது. பசங்களுடன் கூட ஓடியாடி இருக்கிறது. களைப்பில்
மரத்தில் அமர்ந்து இருக்கிறது. அதுதான் அவன் கண்களில் தென்பட்டு இருக்கிறது. இதில் ஒரு நம்பிக்கை அடிபட்டு போனது ஆவிகள்
கோயிலுக்குள் செல்லாது என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கை இந்த விசயத்தில் பொய்த்து
போனது. தீய ஆவிகள் வேண்டுமானால் இப்படி கோயிலுக்கு வர முடியாமல் இருக்கலாம்.
மற்றவை இப்படி சுற்றி வரும் என்று என் அப்பா சொன்னார்.
இந்த கோயிலிலேயே இன்னும் சில அனுபவங்கள்
நிகழ்ந்தன! அதை பிறகு பார்க்கலாம்! நன்றி!
பல சம்பவங்கள் வியப்பாக உள்ளது...!
ReplyDeleteமிகவும் வியப்பான சம்பவங்கள்.
ReplyDelete