அமானுஷ்ய அனுபவங்கள்!

அமானுஷ்ய அனுபவங்கள்!


எனக்கு நேர்ந்த சில அமானுஷ்ய அனுபவங்களைப் பற்றிய பகிர்வுதான் இது. மற்றவர்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இதைப் பற்றி விவாதிக்கவும் நான் தயார் இல்லை. இவை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இது போன்ற நிறைய சம்பவங்கள் என் சுற்றுப்புறத்தில் உறவினர்களிடத்தில் நடந்து உள்ளன. அவற்றை கண்டும் இருக்கிறேன். அதில் என்னை பாதித்த எனக்கு நேர்ந்த சில சம்பவங்களை மட்டுமே பகிரப் போகிறேன்.
      சிறு வயது முதலே பேய், பிசாசு பூதம் போன்றவற்றின் மீது ஒரு பயமும் அச்சுறுத்தலும் இருந்துதான் வந்துள்ளது எனக்கு. அதே போல் பேய்க் கதைகள் படங்கள் பார்த்தால் சீக்கிரம் தூக்கம் வராது. தூக்கத்தில் அலறுவேன். சுற்றுப் புறத்திலும் பேய் பிசாசு கதைகள் நிறைய உளவும். இதையெல்லாம் சிறிது கோர்த்துதான் இரண்டு பேய்க்கதை தொடர்கள் எழுதினேன். இரண்டாவது தொடர் ஆரம்பத்தில் சிறப்பாக தொடங்கி இறுதியில் சொதப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். என் அப்பாவும் ஒரு தேவதா உபாசகர். அவர்மீது எங்கள் குலதெய்வமும் வந்து பேசும். இதனால் எல்லாம் எனக்கும் இந்த பேய் பிசாசு மேட்டருக்கும் ஒருவித ஒட்டுறவு ஏற்பட்டுவிட்டது.
     அப்போது எனக்கு ஒரு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் அப்போது நான் என் தாத்தாவீட்டில் ஆசானபூதூரில் வசித்து வந்தேன். அந்த வீட்டில் மின்விளக்கு கிடையாது. இரவுப் பொழுதில் சிம்னி விளக்கும் காடாவிளக்கும் எரியும். அங்கு தங்கி படிக்கும் சமயத்தில் ஒரு சமயம் நள்ளிரவில் யாரோ ஓட்டின் மேல் நடப்பது போல தட தடவென சத்தம் கேட்டது. மாமாவும் தாத்தாவும் விழித்துக் கொண்டார்கள் யாராவது திருடனாக இருக்குமோ ஓட்டை பிரித்து இறங்க முயற்சிக்கிறானோ என்று பார்த்தால் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தது. அனைவரும் படுக்க திரும்பவும் அதே சத்தம்.
    மாமாவும் தாத்தாவும் தடிகளை எடுத்துக் கொண்டு மெல்ல கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்து டார்ச்ச் அடித்து பார்த்தார்கள் யாரும் தென்படவில்லை! என் மாமா சத்தம் கொடுத்து பார்த்தார். நிசப்தம் தான் பதிலாக இருந்தது. மீண்டும் நாங்கள் கதவை மூடிக் கொண்டு படுத்த போது மீண்டும் யாரோ ஓட்டில் நடப்பது போல சத்தம் வெளியே வந்து பார்த்தால் யாரும் இல்லை. இப்படீ அன்றைய இரவு தூக்கம் எங்களுக்கு கெட்டுப் போனதுதான் மிச்சம். பின்னர் அது குட்டிச்சாத்தான் ஏவல்! பயமுறுத்த செய்துள்ளார்கள் என்று குறி பார்த்து அறிந்து கொண்டு நிவர்த்தி செய்து கொண்டனர் தாத்தாவும் மாமாவும்.
     இதற்கடுத்த அனுபவம் நானே நேராக பேயைப் பார்த்த அனுபவம்! அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். வீட்டுத்திண்ணையில் கட்டில் போட்டு உறங்குவது என் வழக்கம். மற்றவர்கள் உள்ளே படுத்திருக்க நான் மட்டும் வெளியில் படுத்திருப்பேன். வெளியே வெளிச்சம் ஏதும் கிடையாது. ஒரு டார்ச் லைட் மட்டும் வைத்திருப்பேன்.  அன்றும் வழக்கம் போல படுத்து உறங்கி விட்டேன். திடீரென விழிப்பு வந்தது. திண்ணையோரமாக ஒரு நித்திய மல்லி பந்தல் இருக்கும் அந்த பந்தல் ஓரமாக வெள்ளையாக ஓர் உருவம் தென்பட்டது. ஒரு வேளை என் அப்பாதான் இயற்கை உபாதையை கழிக்க வந்துள்ளார் போல என்று நினைத்து அப்பா! என்று அழைத்தேன். மறுவினாடி எனக்கே பேச்சே வரவில்லை! உடல் சிலிர்த்து போய் விட்டது. அது என் அப்பா இல்லை!
    அந்த வெள்ளை உருவம் திரும்பியது முகமெல்லாம் கறுப்பாக வெள்ளையாக நீண்ட பற்கள் ஹிஹி! என அது சிரித்த போது நான் சுதாரித்து ஓர் அலறல் போட்டேன்! என் அலறல் கேட்டு உள்ளே படுத்து இருந்தவர்கள் விழித்து வெளி லைட் போட்டார்கள்! என்னடா! என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தார்கள். வெளிச்சம் பட்டதும் அந்த உருவம் மறைந்து போய் விட்டது. இதற்குள் எனக்கு வியர்த்துப் போய் விட்டது. ஒருவாறு நடந்ததை கூறினேன். என் அப்பா ஒரு துளி விபூதியை நெற்றியில் பூசி விட்டார். உள்ளே வந்து படுத்துக் கிறியா என்றார். இல்லப்பா! நான் இங்கேயே படுத்துகிறேன் நீங்க தூங்குங்க என்று படுத்து உறங்கி விட்டேன்.
          மறுநாள் அப்பா பூஜையில் அமர்ந்து தியானம் செய்த போது என் கண்ணில் தென்பட்டது அந்த சமயத்தில் இறந்து போன ஒருவர் என்று தெரிந்தது. இதே போல இன்னுமொரு சம்பவமும் நடைபெற்றது. அப்போது பிளஸ் டூ முடித்த சமயம் தெரு வாசலில் கட்டில் போட்டு படுத்திருந்தேன். ஜில் என்று காற்று வீசிக் கொண்டு இருந்தது. அருகில் அடுத்த தெருவில் ஒரு வீட்டில் கல்யாணம். அங்கு ரேடியோ பாடிக் கொண்டு இருந்தது. இளையராஜாவின் இதமான பாடல்கள். அதைக் கேட்டபடியே அப்படியே தூங்கிப் போனேன். ஒரு பக்கமாக கைவைத்து ஒருக்களித்து படுத்து இருந்தேன்.

      தீடிரென ஏதோ சுழற்காற்று வீசுவது போல ஒரு பிரமை! திரும்ப முயன்றால் முடியவில்லை! யாரோ மேலே ஏறிப் படுத்திருப்பது போல ஒரு உணர்வு. அந்த காற்று ஓ என இரைச்சலாக எழுந்து என் காதில் விழுந்தது. யாரோ என் காதில் வாய் வைத்து ஊதுவது போல தோன்றியது. கை கால்களை அசைக்க முடியவில்லை! வாய் பேச முடியவில்லை! ஒரு வித அமானுஷ்யமான அந்த சம்பவம் ஒரு ஐந்து நிமிடம் அதற்குள் நான் எங்கள் குல தெய்வங்களையும் இஷ்ட தெய்வங்களையும் மனதில் ப்ரார்த்திக்க அந்த காற்று நின்றது. என்னால் திரும்ப முடிந்தது. எழுந்தால் துளிக் கூட காற்று வீசவில்லை! ரேடியோ சப்தம் ஓய்ந்து இருந்தது. என் உடல் போர்வை எல்லாம் வியர்த்து சில்லின்றிருந்தது யாரையும் காணவும் இல்லை!
     தெய்வத்தை வேண்டிக்கொண்டு படுத்து விட்டேன். இது போல பல முறை காற்று சேஷ்டைகள் என் மீது விழுந்துள்ளது. சில சமயம் கண்ணுக்கு காட்சியாகவும் தெரியும். இது நடந்தது1997ம் ஆண்டு என்று நினைவு. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ஒரு கும்பாபிஷேகம். அதை செய்விப்பவர் என் தந்தை. உதவிக்கு நான், என்னுடைய சித்தப்பா அனைவரும் சென்று இருந்தோம். கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவு. பூஜைகள் நடந்துகொண்டிருக்கும் போதே மிக பலமான மழை சுமார் இரண்டு மணி நேரம் கொட்டியது. மின்சாரம் நின்று போனது. அப்புறம் எப்படியோ பூஜைகளை முடித்தோம் இரவு 11மணி அங்கேயே ஆகிவிட்டது. ஊரில் ஒரு திருமணம் விடியற்காலையில் நடத்திவைக்க வேண்டும். அதை நடத்தி வைக்க சித்தப்பாவோடு புறப்பட்டு வீட்டுக்கு வந்தோம். சைக்கிள் இருந்தாலும் உருட்டிக் கொண்டு நடந்து வந்தோம். மழை பெய்து சாலையெங்கும் தண்ணீர் நிறைந்து இருக்க பவுர்ணமி நிலா வெளிச்சம் மட்டும் இருந்தது. அங்கிருந்து வீடு வரும் போது மணி பன்னிரண்டை தாண்டி விட்டது.
       எங்கள் ஊரிலும் மின்சாரம் இல்லை! தட்டுத்தடுமாறி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு படுத்தோம். சித்தப்பா களைப்பில் உடனே உறங்கிவிட்டார். குறட்டை சத்தம் வந்தது. ஆனால் எனக்கு உறக்கம் பிடிக்க வில்லை. அப்படியே படுத்து இருக்கும் போது வாசலில் ஓர் சத்தம் ஈரத்துணியோடு நடந்து வந்தால் ஒரு மாதிரி சரக் சரக் என சத்தம் வருமே அந்த மாதிரி ஒரு சத்தம். அதோடு சலங்கை ஒலி! இரண்டும் சேர்ந்து ஒலிக்க நான் காதைத் தீட்டிக் கொண்டேன். இருக்க இருக்க அந்த சத்தம் அதிகமானது. ஒரு இரண்டு நிமிடம் கழிந்ததும் அந்த சத்தத்துடன் உடுக்கை ஒலியும் சேர்ந்து கொண்டது.

    என் நெஞ்சு படக் படக் என அடித்துக் கொண்டது. மின்சாரம் இல்லாததால் கதவைத்திறந்து வெளியே வர அச்சமாக இருந்தது. சித்தப்பாவை எழுப்பலாம் என்றால் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும் அவர். அவரது தூக்கம் கெட்டுவிடும். என்ன நடந்தாலும் நடக்கட்டும்! கதவைத் திறக்க வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டு அப்படியே படுத்து இருந்தேன். சுமார் அரை மணி நேரம் அந்த உடுக்கை ஒலியும் சதங்கை சப்தமும் கேட்டு கொண்டிருந்து பின்னர் படிப்படியாக தேய்ந்து அடங்கிப் போனது.
     நானும் அப்படியே உறங்கிப் போனேன். மறுநாள் வழக்கம் போல எழுந்து பணிகளை முடித்தேன். எங்கள் வீட்டு வாசலில்தான் சிவன் கோவிலும் இருக்கிறது. எங்களுடையது தெற்கு நோக்கிய வீடு. சிவன் கோயில் கிழக்கு நோக்கி இருக்கும். அருகருகே இருப்பதால் சிவன் கோயில் வாசலில் கேட்ட சத்தம் அது என்று யூகித்தேன். அப்புறம் பூஜையில் உட்கார்ந்து என் அப்பா சொன்னது இது. இந்த கோவிலில் ஒரு முனீஸ்வரன் வந்து வழிபட்டு போயுள்ளது. பவுர்ணமி, பிரதோஷம் போன்ற சமயங்களில் அது ஈசனை வழிபட்டு செல்லும். அது வழிபட்டதுதான் உனக்கு காதில் ஒலித்துள்ளது என்றார். அடடா! முனீஸ்வரனை தரிசனம் செய்யாமல் விட்டுவிட்டோமே என்று நினைத்துக் கொண்டேன் நான்.
    இன்னும் நிறைய இருக்கிறது! மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. அமானுஷ்யங்களின் பகிர்வு
  எப்போதும் சுவாரஸ்யமே
  அதை அனுபவித்தவர்களுக்குத்தான்
  அதன் உண்மைத்தன்மை புரியும்
  அடுத்தபதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

  ReplyDelete
 2. சிறு வயது முதலே பேய், பிசாசு பூதம் போன்றவற்றின் மீது ஒரு பயமும் அச்சுறுத்தலும் இருந்துதான் வந்துள்ளது //எல்லோருக்குமே இதுபோல் அனுபவம் இருந்திருக்கும்

  ReplyDelete
 3. ரொம்ப தான் பயமுறுத்துகிறீர்கள்... படிக்கும் போது எனக்கும் சில அனுபவங்கள் உண்டு... பகிர்கிறேன்...

  ReplyDelete
 4. அமானுஷ்யம் என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும்

  ReplyDelete
 5. ரொம்ப தான் பயமுறுத்துகிறீர்கள்...

  ReplyDelete
 6. I am also waiting for that moment..
  However sound on roof might b due to cats..
  N during deep sleep especially after tiring day..people might tend to realistic dreams based on days happenings n thinking...wt do u say guys??????

  ReplyDelete
 7. என்ன சகோ இப்படி பயப்பிடுத்துகிறீர்கள். இன்று தூங்கவே முடியாது போல் இருக்கிறது இன்னிக்கு சிவராத்திரி தான். ஹா ஹா
  நன்றி ! தொடர வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 8. படிக்க சுவாரஸ்யம் என்றாலும் எத்தனை தூரம் நிஜம்? இப்படி சொன்னேன்னு, பேயை எங்க வீட்டுக்கு அனுப்பிடாதீங்க! நான் எஸ்கேப்!

  ReplyDelete
 9. முன்னெல்லாம் இராப்பாடி என்றொருவர் வருவார். இரவில் தான் பழைய நாட்டுப்பாடல்களைப் பாடிக் கொண்டு வருவார். எல்லாம் நல்ல பாடல்களாகவே இருக்கும். ஆனால் அவர் கையில் வைத்திருக்கும் கம்பில் உச்சியில் சலங்கை கட்டி இருக்கும். அதைத் தரையில் தட்டிக் கொண்டே பாடுவார் என்பதால் உள்ளே படுத்துக் கொண்டு கேட்பவர்களுக்குக் கொஞ்சம் பயமாகவே இருக்கும். :))) அப்படி ஒரு இராப்பாடியாக இருக்கலாமோ என்னமோ!

  ReplyDelete
 10. அனுபவித்தால் அவரவர்களுக்கு தெரியும் என்பதை விளக்கி உள்ளீர்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2