சர்வம் சக்தி மயம்! பாப்பா மலர்!

சர்வம் சக்தி மயம்! பாப்பா மலர்!


தும்பிக்கை ஆண்டவன் விநாயகரை அறிந்திராத குழந்தைகளே இருக்க முடியாது. பால பருவத்தில் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த கடவுள் பிள்ளையாரும் கண்ணனும் தான். இருவருமே குறும்பு செய்வதில் வல்லவர்கள்!
கண்ணன் கோகுலத்தில் செய்யாத குறும்புகளே இல்லை எனலாம். மண்ணைத்தின்று வாயைத்திறந்து உலகத்தையே அதனுள் காட்டியவன் அல்லவா கண்ணன். விநாயகரும் அம்மை அப்பனே உலகம் என்று உண்மையை உலகினுக்கு தந்தவர்.
   இந்த பிள்ளையார் சின்ன பிள்ளையாக இருக்கும் போது நிகழ்ந்த ஒரு நிகழ்வைத்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். சின்ன பிள்ளையாக இருக்கும் நீங்கள் எல்லோரும் ஏதாவது ஒரு பிராணியை வளர்ப்பீர்கள். அது நாய், பூனை, முயல், கிளி ,அல்லது மீன் போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவதில் உங்களின் பொழுது கரைந்து போகும் அல்லவா? அப்படி விளையாடும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? பூனையின் காதை பிடித்து திருகுவீர்கள் நாயின் வாலைப் பிடித்து இழுப்பீர்கள் இப்படி ஏதாவது குறும்பு பண்ணி விளையாடுவது ஒரு பொழுது போக்கு
   பிள்ளையாரும் அப்படித்தான் ஒரு நாள் விளையாடச் சென்றார். அப்போது அந்த வழியே பூனையொன்று வந்துகொண்டிருந்தது. உடனே பிள்ளையார் அந்த பூனையை பிடித்து வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்படி விளையாடும்போது விநாயகரின் கை நகங்கள் அந்த பூனையின் முகத்தில் பட்டு இரண்டு மூன்று நகக் கீறல்கள் உண்டாகி விட்டது. பொழுது சாய்ந்ததும் பிள்ளையார் பூனையை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.
    அம்மா! அம்மா! எனக்கு பசிக்கிறது! உணவு தருகிறாயா? என்றபடி வீட்டினுள் நுழைந்த பிள்ளையாருக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவரது அன்னையின் முகத்தில் இரண்டு மூன்று நகக்கீறல்கள் இருப்பதை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்காதா பின்னே! உலகிற்கே அன்னையான தன் அம்மாவின் முகத்தில் இப்படி நகக்கீறல்களை உண்டாக்கியது யாராக இருக்கும்? அந்த அளவுக்கு தைரியம் உடையவர் யார்? என்று நினைத்துக் கொண்டே அன்னையிடம் கேட்டார்.
   அம்மா! முகத்தில் என்ன காயம்? இது எதனால் ஏற்பட்டது? யார் ஏற்படுத்தியது? என்று கோபமாக கேட்டார்.
  அன்னை பார்வதி தேவி சிரித்துக் கொண்டே! மகனே விநாயகா இது நீ ஏற்படுத்தியதுதான் என்றார்.
  பிள்ளையாருக்கு கோபம் அதிகமாகிவிட்டது! அம்மா! நான் வெளியே விளையாடிவிட்டு இப்போதுதான் வருகிறேன்! அதுவும் இல்லாமல் அன்னையின் முகத்தில் நான் இப்படி கீறுவேனா? உண்மையைக் கூறுங்கள் தாயே! விளையாடாதீர்கள் என்று கேட்டார்.
  உண்மையைத்தான் கூறுகிறேன் மகனே!
  இது எப்படி உண்மையாகும்? செய்யாத ஒன்றை செய்ததாக கூறுகிறீர்களே?
மகனே! இன்று காலையில் நீ பூனை ஒன்றை பிடித்து விளையாடினாய் அல்லவா? அதன் முகத்தில் உன் நகங்கள் பட்டு கீறல்கள் ஏற்பட்டது அல்லவா?
  ஆமாம் அம்மா! ஆனால் நான் பூனையின் முகத்தில்தானே கீறீனேன் அது எப்படி தங்கள் முகத்தில் கீறியதாக ஆகும்?
  மகனே! விநாயகா! இந்த உலகமே சக்திமயம்தான்! அனைத்து உயிர்களிலும் நான் இருக்கிறேன்!இந்த உலகமே நான்! நானே உலகம்! உலகில் உள்ள எல்லா பொருள்களிலும் நான் உள்ளேன். உலகில் யாரை துன்புறுத்தினாலும் அது என்னை துன்புறுத்துவதே ஆகும். அதனால்தான் நீ பூனையின் முகத்தில் கீறிய கீறல்கள் என் முகத்திலும் விழுந்தன. அதனால் தான் உன்னால் ஏற்பட்டது என்றேன்  என்று சொன்னாள்.
  அன்னையின் பதில் பிள்ளையாரை சிந்திக்க வைத்தது. சர்வம் சக்தி மயம்! எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார். அன்று முதல் அவர் எந்த உயிரையும் துன்புறுத்துவதையும் விட்டுவிட்டார்.
   நாமும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோம்! அன்பே சிவம்! உயிர்களை துன்புறுத்துவதை நிறுத்துவோம்!

அன்பே சிவம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2